மலாயா டாலர் (ஆங்கிலம்: Malayan Dollar; மலாய் மொழி: Dolar Malaya; ஜாவி: رڠڬيت) என்பது 1939-ஆம் ஆண்டில் இருந்து 1953-ஆம் ஆண்டு வரை மலாயா மற்றும் புரூணை பிரித்தானிய காலனி நாடுகளில் பயன்பாட்டு பணத் தாள் (Currency) ஆகும்.[1]
1939-ஆம் ஆண்டில் நீரிணை டாலருக்கு பதிலாக, இந்தப் பணத்தாள் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு மலாயா டாலர் என்பது 2 சில்லிங் (Shilling); 4 பென்சு (Pence); (60 மலாயா டாலர்கள் = 7 பிரித்தானிய பவுன்கள் (Pound)
1939-ஆம் ஆண்டில் மலாயாவின் நாணய ஆணையர் வாரியத்தால் (Board of Commissioners of Currency, Malaya) மலாயா டாலர் வெளியிடப்பட்டது. இந்தப் பணத்தாள்களின் புழக்கம் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது (1942-1945) தடைப்பட்டது.
ஜப்பானியரின் நிர்வாகத்தின் போது மலாயா டாலர் மதிப்பற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த இடைவெளிக் காலத்தில், ஜப்பானியர்கள் அவர்களின் சொந்த வாழைமரப் பணத்தாள்களப் புழக்கத்திற்கு விட்டார்கள்.
1952 ஆம் ஆண்டில், மலாயாவின் நாணய ஆணையர் வாரியம் என்பது மலாயா மற்றும் பிரித்தானிய போர்னியோ நாணய ஆணையம் (Board of Commissioners of Currency, Malaya and British Borneo) என்று பெயரிடப்பட்டது. இந்த வாரியம் 1953-இல் பணத்தாள்களை வெளியிடத் தொடங்கியது.[2]
மலாயா டாலர் பணத்தாள்கள் இங்கிலாந்து லண்டன் நகரில் அச்சிடப்பட்டன. 1940-ஆம் ஆண்டில், 1, 5 மற்றும் 10 மதிப்புள்ள மலாயா டாலர் பணத்தாள்கள் புழக்கத்திற்காக அச்சிடப்பட்டன.
27,000,000 ஒரு டாலர் பணத்தாள்கள் மற்றும் 5,600,000 ஐந்து டாலர் நோட்டுகள் ஜப்பானிய படையெடுப்பிற்கு முன் இங்கிலாந்தில் இருந்து மலாயாவிற்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 25,800,000 ஒரு டாலர் பணத்தாள்களும் 5,000,000 ஐந்து டாலர் பணத்தாள்களும் வந்து சேர்ந்தன.
எஞ்சியவற்றில், 700,000 ஒரு டாலர் பணத்தாள்களும் 500,000 ஐந்து டாலர் பணத்தாள்களும்; ஏற்றி வந்த எஸ்.எஸ். ஆத்தோமேடான் (SS Automedon) எனும் பிரித்தானியக் கப்பலோடு கடலில் மூழ்கிவிட்டன.
1940 நவம்பர் 11-ஆம் தேதி, இந்தியப் பெருங்கடலில் ஜெர்மனியின் அட்லாண்டிஸ் (Atlantis) எனும் போர்க் கப்பலால் எஸ்.எஸ். ஆத்தோமேடான் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
அதே 1940 நவம்பர் மாதம் எஸ்.எஸ். இயூமனஸ் (SS Eumanes) எனும் மற்றொரு பிரித்தானியக் கப்பல் கடலில் மூழ்கியதால் 500,000 ஒரு டாலர் பணத்தாள்களும் 100,000 ஐந்து டாலர் பணத்தாள்களும் கடலில் மூழ்கிவிட்டன.[1]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)