பல சமயங்கள் பின்பற்றப்படும் மலேசியா வில் முதன்மை சமயமாக இருப்பது இசுலாம் ஆகும். 2020 நிலவரப்படி, இந்நாட்டில் ஏறத்தாழ 20.6 மில்லியன் (மக்கள்தொகையில் 63.5%) இசுலாமியர்கள் வாழ்கின்றனர்.[1] மலேசியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 3 இன்படி "கூட்டாட்சியின் சமயமாக" நிறுவப்பட்டுள்ளது.[2][3] ஆனால் மலேசியச் சட்டமும் சட்ட முறைமையும் ஆங்கிலப் பொதுச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இசுலாமியச் சட்ட முறைமை இசுலாமியருக்கு மட்டுமே நடைமுறையில் உள்ளது; அதுவும் குடும்பச் சட்டம் மற்றும் சமயப் பின்பற்றுதல்களுக்கு மட்டுமே பின்பற்றப்படுகின்றது. இதனால் மலேசியா மதசார்பற்ற நாடா அல்லது இசுலாமிய நாடா என்ற சர்ச்சை உள்ளது.
மலேசிய அரசியலமைப்பின் முன்வரைவில் எந்த அலுவல்முறை சமயமும் வரையறுக்கப்படவில்லை. ஒன்பது மலாய் நாட்டு மன்னர்களும் தங்கள் நாட்டுப் பகுதிகளில் தனித்தனியாக அலுவல்முறை சமயமாக இசுலாம் இருந்தால் போதுமானது எனக் கருதினர். இருப்பினும் அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்த ரீடு குழுவின் நீதியரசர் அக்கீம் அப்துல் அமீது இசுலாமை கூட்டமைப்பின் அலுவல்முறை சமயமாக இருத்த விரும்பினார்; அவ்வாறே அரசியலமைப்புச் சட்டத்தில் மலேசியாவின் அலுவல்முறை சமயமாக இசுலாம் நிறுவப்பட்டது.[4] அரசியலமைப்பின் பிரிவு 160இன் படி அனைத்து உள்நாட்டு மலாய்களும் முசுலிம்கள் (100%) ஆவர்.[5][6] மலேசியச் சட்டத்தின்படியும் மலேசிய அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டவாறும் ஓர் உள்நாட்டு மலாய் முஸ்லிம் சமயத்தை துறக்க விரும்பினால் தனது உள்நாட்டு தகுதியையும் இழப்பார்.
மலேசிய மாநிலங்களில் கிளாந்தான், திராங்கானு, பகாங், கடாரம், பேராக், பெர்லிஸ், சிலாங்கூர், ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் அரசியலமைப்புச்சார் மலாய் மன்னர்கள் (பெரும்பான்மையோர் சுல்தான்கள் எனப்படுகின்றனர்) ஆள்கின்றனர். இந்த சுல்தான்கள் மாநிலத்தின் சமய விவகாரங்களில் முழுமையான அதிகாரம் பெற்றுள்ளார்கள். பினாங்கு, மலாக்கா, சரவாக் மற்றும் சபா மாநிலங்களில் சுல்தான்கள் இல்லாதபோதும் இந்த மாநிலங்களிலும், கோலாலம்பூர், லபுவான், புத்ராஜாயா கூட்டாட்சிப் பகுதிகளில் அரசர் (யாங் டி பெர்துவான் அகோங்) இசுலாமியத் தலைவராக பொறுப்பாற்றுகிறார்.
மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது 80ஆவது பிறந்தநாளான பெப்ரவரி 9, 1983 அன்று, மலேசியாவின் இசுடார் இதழுக்கு அளித்த செய்தியில் "நாட்டில் பல்வேறு இனங்கள் வெவ்வேறான நம்பிக்கையுடன் வாழ்கின்றனர். இசுலாம் அலுவல்முறை சமயமாக இருப்பதுடன் மலேசியா சமயச் சார்பற்ற நாடாகத் தொடர வேண்டும்" எனக் கூறினார். இசுடார் இதழின் அதே பதிப்பில் இதற்கு ஆதரவாக மலேசியாவின் மூன்றாவது பிரதமரான உசேன் ஓன் "இசுலாம் அலுவல் சமயமாக இருக்கும் அதேவேளையில் நாடு சமயச்சார்பற்றதாக இயங்க முடியும்" எனக் கூறினார்.[7]
தற்போது மலேசியாவின் மாநிலம் கிளாந்தானில் பழமைவாத இசுலாமிய அரசியல் கட்சியான மலேசிய இஸ்லாமிய கட்சி ஆட்சி செய்கின்றது. இக்கட்சி இசுலாமிய அரசை நிறுவிடும் கொள்கை உடையது. திராங்கானு மாநிலத்திலும் இக்கட்சியின் ஆட்சி 1999இலிருந்து 2004 வரை இருந்தது; ஆனால் தற்போது ஆளும் தேசிய முன்னணி (மலேசியா) இதனை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இசுலாமியரிடையே வீழ்ச்சியடைந்து வரும் தனது செல்வாக்கை நிலைநிறுத்த அம்னோவின் அப்துல்லா அகமது படாவி இசுலாம் அதாரியை முன்மொழிந்தார். 1990களில் திராங்கானுவில் மலேசிய இஸ்லாமிய கட்சி இசுலாமிய உதுத் சட்டங்களை நிறுவியது; இவற்றை சமயச்சார்பற்ற கூட்டமைப்பு அரசு விலக்கி ஆணையிட்டது.
புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள மலேசியாவின் அடையாள அட்டை newest (MyKad) மலேசியர்களை பல்வேறு சமயக் குழுக்களாகப் பிரிக்கின்றது: முசுலிம், கிறித்தவர், இந்து, பௌத்தர். இந்த அட்டையை அறிமுகப்படுத்தியது அரசியல் சர்ச்சைகளை கிளப்பியது. இருப்பினும் தற்போது இது முசுலிம் அல்லாதோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மலேசியப் பன்னாட்டு இசுலாமியப் பல்கலைக்கழகம் எனப்படும் இசுலாமியப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. மக்கா புனிதப் பயணத்தை மேற்கோள்ள ஒருங்கிணைக்கும் அரசு அமைப்பாக டபுங் ஹாஜி உள்ளது. தவிரவும் பள்ளிவாசல்களையும் சுராவுகளையும் கட்டமைக்க அரசு நிதி வழங்குகின்றது.[8]
மலேசிய அரசியலமைப்பு மலேசியாவை சமயச்சார்பற்ற நாடாக அறிவித்தாலும் குழப்பம் நிலவுகின்றது. குறிப்பாக, முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது மலேசியாவை இசுலாமிய நாடாக அறிவித்த பிறகு சர்ச்சைகள் வலுத்துள்ளன. டேவான் ராக்யாட் மக்களவையில் உறுப்பினர் பத்ருதின் இபின் அமிருல்டின் "மலேசியா இனி நெகெரா இசுலாம்" ("மலேசியா ஓர் இசுலாமிய நாடு") என்றும் "யூ டிடக் சுகா, யூ கெலுவர் டரி மலேசியா!" ("நீங்கள் விரும்பாவிட்டால், மலேசியாவை விட்டு நீங்கள் வெளியேறுங்கள்!") என்றார். தனது அறிக்கை மீட்டுக் கொள்ள மறுத்ததால் இவரது நடத்தையை பேரவையின் உரிமைக்குழுவின் ஆய்விற்கு அனுப்ப கொண்டுவரப்பட்ட தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது.[9] இருப்பினும், முதல் பிரதமர், துங்கு அப்துல் ரகுமான், 1980களில் இதற்கு எதிராகக் குரலெழுப்பினார்; "இசுலாமிய நாடு குறித்த பேச்சுக்கள் வெறுங்கனவுகளாகும். எந்தவொரு அறிவுள்ள மனிதனும் சமயம் சார்ந்த அரசியல் நிர்வாகத்தை விரும்ப மாட்டான்; குறிப்பாக ல இனங்களும் பல சமயங்களும் உள்ள மலேசியா போன்ற நாட்டில் இசுலாமிய நாட்டை நிறுவ வாய்ப்புக்களே இல்லை" என்றார்.[8] In 1988இல் நீதிமன்றங்கள் மலேசியா ஓர் சமயஞ்சார்ந்த நாடு என்பதை நிராகரித்துள்ளன.[3]
மலேசியாவின் கூட்டரசு மலேசியா இசுலாமிய நாடு என்பதை மறுத்து வந்துள்ளபோதும் அப்துல்லா அகமது படாவி கீழமைந்த முந்தைய நிர்வாகம் மெதுவாக மற்ற சமயங்களை விட இசுலாமிய சமயத்தின் உயர்ச்சிக்கு வழி வகுத்தது. முசுலிம் பெரும்பான்மையினரின் முதன்மை கவலையாக கிறித்தவத்தின் பரவல் இருந்து வருகின்றது. மதமாற்றத்திற்கு முயன்றதாக கிறித்தவக் குழுக்கள் மலேசிய அரசாலும் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.[10]
மலேசிய இசுலாமிய மேம்பாட்டுத் துறையின் (JAKIM) அங்கமாக பத்வாக்களை வெளியிடும் தேசிய பத்வா குழுமம் உள்ளது.
ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே தனி அரபு வணிகர்களும் சகபாக்களும் சீனா, இந்தோசீனா, மலாய் தீவுக்கூட்டங்களில் இசுலாத்தை போதித்து வந்தனர்.[11] கம்போடியாவின் இசுலாமிய சாம் மக்கள் தங்கள் வம்சத் துவக்கத்தை முகமது நபி அவர்களின் உறவினரான ஜாஷ் உடன் தொடர்புபடுத்துகின்றனர். சுமத்திரா தீவுகளுக்கு இசுலாம் கிபி 674இல் அராபியர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.[12]
12ஆவது நூற்றாண்டில் மலேசியா வந்த இந்திய முசுலிம் வணிகர்களும் இசுலாமை கொணர்ந்தனர். பொதுவாக 12ஆவது நூற்றாண்டில் கடாரத்தின் சுல்தான் முத்சபர் ஷா (இந்துப் பெயர்:பிரா ஓங் மகாவாங்சா) இசுலாமிற்கு மாறிய பின்னரே மலாய் தீபகற்பத்தில் இசுலாம் வந்தடைந்ததாக கருதப்படுகின்றது. இவர் அண்மையில் மதம் மாறியிருந்த இந்திய வணிகர்களிடமிருந்து இசுலாமைத் தழுவினார். 13ஆவது நூற்றாண்டு தொராங்கனு கற் தூபி திராங்கானு மாநிலத்தின் கோலா பெரங்கில் கண்டறியப்பட்டது; இதன்படி 1303இல் சுல்தான் மெகத் இசுகந்தர் ஷா என்ற பெயருடன் இசுலாமைத் தழுவிய பரமேசுவரா முதல் மலாக்கா சுல்தான் ஆவார். இவர் தற்கால இந்தோனேசியாவின் பசாய் சுல்தானகத்தின் இளவரசியை மணந்தபோது இசுலாமிற்கு மதம் மாறினார்.
மலேசியா, இந்தோனேசியா கடலோரத் துறைமுக நகர மக்களிடம் எவ்வித கட்டாயப்படுத்தலோ கையகப்படுத்தலோ இன்றி அமைதியாக தன்னார்வமாக இசுலாம் பரவியது. 15ஆவது, 16ஆவது நூற்றாண்டுகளில் மலாய் மக்களின் பெரும்பான்மை சமயமாக இசுலாம் விளங்கியது.
ஷஃபி வழிமுறைசார்ந்த சுன்னி இசுலாம் மலேசியாவின் அலுவல்முறை, சட்டப்பூர்வ வடிவமாகும். பழைய பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கிய இசுலாம் இன்னமும் நாட்டுப்புற பகுதிகளில் பொதுவாக கடைபிடிக்கப்படுகின்றது. நாடெங்கும் பள்ளிவாசல்களைக் காணலாம்; மினார்களிடமிருந்து பாங்குகள் (தொழுகை அழைப்பு) நாளுக்கு ஐந்து முறை ஒலிக்கின்றன. முசுலிம் பணியாளர்கள் மசூதிகளில் தொழுகை மேற்கொள்ள ஏதுவாக அரசு அலுவலகங்களும் வங்கிகளும் ஒவ்வொரு வெள்ளியும் இரண்டு மணி நேரம் மூடப்படுகின்றன. இருப்பினும், கிளாந்தான், திராங்கானு, கடாரம், ஜொகூர் போன்ற மாநிலங்களில் வெள்ளியும் சனியும் வாரயிறுதி விடுமுறை நாட்களாக உள்ளன.
மலேசிய அரசு மற்ற இசுலாமிய உட்பிரிவுகள் குறித்து கடுமையான கொள்கைகளை வகுத்துள்ளது; சியா இசுலாம் பிரிவை தடை செய்துள்ளது.[13] மலேசிய உள்நாட்டு அமைச்சர் அகமது சகீது அமீதி "உலகின் மற்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள சண்டைகளை இந்த இரு பிரிவினருக்கிடையே மலேசியாவில் நடக்காது தடுக்கவும் சுன்னி வழியை வளர்த்தெடுக்கவும்" இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.[14]
மற்றுமொரு தடைசெய்யப்பட்ட உட்குழு அல்-அர்கம் ஆகும்.[15]
இயேசு குறித்த இசுலாமிய முன்ன்றிவிப்புகளின்படி மிர்சா குலாம் அகமது மீது நம்பிக்கை கொண்ட அகமதியாக்களும் மலேசியாவில் வாழ்கின்றனர். ஏறக்குறைய 2000 அகமதியாக்கள் நாட்டில் உள்ளனர்.[16] சிறுபான்மையராக உள்ள இவர்கள் அரசு ஆதரவளிக்கும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.[17]
ஹதீசின் அதிகாரத்தை ஏற்காத முசுலிம்கள் குரான் நம்பிக்கையாளர்கள் (ஆல் அல்-குரான்) எனப்படுபவர்களும் மலேசியாவில் வாழ்கின்றனர். இத்தகைய குரானியூன்களில் காசிம் அகமது மிகவும் குறிப்பிடத்தக்கவர்.[18]
2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படியான மாநிலவாரி பரவல்[19]
மலேசிய மாநிலம் |
முசுலிம் மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு) |
---|---|
ஜொகூர் | 1,949,393 |
கடாரம் | 1,504,100 |
கிளாந்தான் | 1,465,388 |
மலாக்கா | 542,433 |
நெகிரி செம்பிலான் | 615,235 |
பகாங் | 1,124,909 |
பேராக் | 1,301,931 |
பினாங்கு | 696,846 |
பெர்லிஸ் | 203,476 |
சிலாங்கூர் | 3,161,994 |
திராங்கானு | 1,004,152 |
சரவாக் | 796,239 |
சபா | 2,096,153 |
W.P. கோலாலம்பூர் | 776,958 |
W.P. லபுவான் | 66,065 |
W.P. புத்ராஜாயா | 70,522 |
2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மலேசியாவின் மக்கள்தொகையில், 61.3% (17,375,794 மக்கள்) இசுலாமியராவர்.[20] இவர்களில் பெரும்பான்மையானவர்கள் உள்ளக மலாய் முசுலிம்கள் ஆவர்.