1909-ஆம் ஆண்டில், கிளாந்தான், கோலா கிராய் மாவட்டத்தில் சயாமிய நாடக கலைஞர்கள் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
80,000 | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
மலேசியா | |
மொழி(கள்) | |
தென் தாய்லாந்து மொழிகள்; மலாய், ஆங்கிலம், தாய் (மொழி), வட தாய்லாந்து மொழி, இசான் மொழி, காரென் மொழி, பிற தாய்லாந்து மொழிகள், சீன மொழி | |
சமயங்கள் | |
பெரும்பான்மை மக்கள்: தேரவாத பௌத்தம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
|
மலேசிய சயாமியர் (ஆங்கிலம்: Malaysian Siamese; மலாய்: Orang Siam Malaysia) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவில் வசிக்கும் ஓர் இனம் அல்லது ஒரு சமூகத்தினர் ஆகும். ஒப்பீட்டளவில் தெற்கு பர்மா மற்றும் தெற்கு தாய்லாந்து பிரதேசங்களில் காணப்படும் கலாசாரத் தன்மைகளையும்; கலாசாரப் பின்புலங்களையும் தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதி கொண்டுள்ளது.
எனினும் ஐக்கிய இராச்சியத்திற்கும் மற்றும் சயாம் இராச்சியத்திற்கும் இடையே கையெழுத்தான 1909-ஆம் ஆண்டு பிரித்தானிய-சயாமிய உடன்படிக்கையின் மூலமாக அந்தப் நிலப் பகுதிகள் பிரிக்கப்பட்டன; அங்கு வாழ்ந்த மக்களும் பிரிக்கப்பட்டனர். இருப்பினும் அவர்களின் கலாசாரப் பண்பு நலன்கள் இன்றளவிலும் ஒரே மாதிரியாகவே பயணிக்கின்றன. இரத்தனகோசின் இராச்சியம் எனும் முன்னாள் இராச்சியம்தான் சயாம் இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது.
அந்த உடன்படிக்கையின் மூலமாக மலேசியா-தாய்லாந்து எல்லை உருவானது. மலேசியா-தாய்லாந்து எல்லை என்பது மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளைப் பிரிக்கும் அனைத்துலக எல்லையாகும்.[1] தற்போது, மலேசியாவின் கெடா, கிளாந்தான், பெர்லிஸ் மற்றும் திராங்கானு மாநிலங்கள்; மற்றும் தாய்லாந்தின் சத்துன் (Satun), சொங்கலா (Songkhla), யாலா (Yala), நாராதிவாட் (Narathiwat) மாநிலங்கள்; மலேசியா - தாய்லாந்து எல்லைகளாக உள்ளன.
கோலோக் ஆறு (Golok River) எனும் அனைத்துலக எல்லை ஆறு, இந்த இரு நாடுகளின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஆறு. 95 கி.மீ. நீளத்தைக் கொண்டது.[2]
2000-ஆம் ஆண்டு மலேசிய புள்ளிவிவரங்களின்படி மலேசியாவில் 50,211 சயாமிய இனத்தவர் வாழ்கின்றனர். அவர்களில் 38,353 பேர் (அல்லது அவர்களில் 76.4%) மலேசிய குடியுரிமை பெற்றுள்ளனர்.[3]
மலேசிய சயாமிய சமூகத்தினர் மலாயா தீபகற்பத்தில் வசிக்கும் மலேசிய பழங்குடியினரின் கலாசார ஒற்றுமைகளைக் கொண்டு உள்ளனர். மலேசிய சயாமியர்கள் பேசும் மொழிகள் மற்றும் சமூகச் செயல்பாடுகள், இனமொழி அடையாளம் போன்றவை; தென் தாய்லாந்தின் மாநிலங்கள் மற்றும் தெற்கு பர்மா மாநிலங்களில் உள்ள சயாமியர்களைப் போலவே இருக்கின்றன.
மலேசிய சயாமியர்கள் மற்ற மலேசிய மலாய்க்காரர்களைப் போலவே வாழ்க்கை முறையைப் பின்பற்றுகின்றனர். 14-ஆம் நூற்றாண்டிலிருந்து மலேசிய மலாய்க்காரர்கள் இசுலாத்தை ஏற்றுக் கொண்டாலும், மலேசிய சயாமியர்கள் பௌத்த மதத்தின் மீது வலுவான நம்பிக்கையைக் கொண்டு அதன் நடைமுறைகளை இன்னும் கடைப்பிடித்து வருகின்றனர்.
மலேசியாவின் வடக்குப் பகுதி மாநிலங்களான பெர்லிஸ், கெடா, பேராக், பினாங்கு, திராங்கானு மற்றும் கிளாந்தான் ஆகிய மாநிலங்களில் மலேசிய சயாமியர்கள் நன்கு அமையப்பட்டுள்ளனர். ஒரு மலாய்க்காரர் அல்லது ஒரு மலேசிய சயாமியர் அவர் தான் தாய்மொழியில் பேசவில்லை என்றால் அவரை வேறுபடுத்த முடியாது. அவர்களுக்கு இடையிலான ஒரே தனிச்சிறப்பு அவர்கள் பின்பற்றும் மதம் மற்றும் அவர்கள் பேசும் மொழி ஆகும்.[4]