Malaysian Public Works Department Jabatan Kerja Raya Malaysia (JKR / PWD) | |
கோலாலம்பூர் மாநகரில் மலேசிய பொதுப்பணித் துறை தலைமையகம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1872 |
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா, சுல்தான் சலாவுதீன் சாலை |
அமைச்சர் |
|
அமைப்பு தலைமை |
|
மூல நிறுவனம் | மலேசிய பொதுப் பணி அமைச்சு |
வலைத்தளம் | www |
மலேசிய பொதுப்பணித் துறை (மலாய்: Jabatan Kerja Raya Malaysia; (JKR) ஆங்கிலம்: Malaysian Public Works Department (PWD); சீனம்: 马来西亚公共工程局) என்பது மலேசிய பொதுப் பணி அமைச்சின் (Ministry of Works Malaysia) (MOW) கீழ்; பொதுப் பணித் துறைகள் (Public Works); பொதுச் சாலைகள் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு செயல்படும் மலேசிய அரசாங்கத்தின் ஒரு துறை ஆகும்.
மேற்கு மலேசியா மற்றும் லபுவான் ஆகிய பிரதேசங்களின் பொது உள்கட்டமைப்பின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புகளுக்கான பொறுப்புகளை வகிக்கிறது.
சபா மற்றும் சரவாக் மாநிலங்களில், அந்தந்த மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பொதுப்பணித் துறையின் தனி நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும் அவை மலேசிய பொதுப் பணி அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்கள் ஆகும்.
1858-ஆம் ஆண்டில் நீரிணை குடியிருப்புகளுக்கான தலைமைப் பொறியாளர் (Chief Engineer for the Straits Settlements) பதவி நிறுவப்பட்டது. அந்த நேரத்தில் தூர கிழக்கில் பிரித்தானிய காலனித்துவக் குற்றவாளிகளுக்கு சிங்கப்பூர் ஒரு முக்கிய முகாமாக இருந்தது.
அந்தக் கட்டத்தில் பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பதவிகளை நிரப்புவதற்கு பிரித்தானியர்கள் தங்களின் பிரித்தானிய வீரர்களை நம்பி இருந்தனர். ஒவ்வொரு பிரித்தானிய காலனியிலும், குடிமராமத்துப் பணிகளைக் கண்காணிக்க பொறியாளர் குழுவை சேர்ந்த ஓர் இராணுவ அதிகாரி பதவியில் அமர்த்தப் படுவார்.
இதற்கான பணியிடத்தை நிரப்ப மேஜர் மெக்நாயர் (Major McNair) என்பவர் சிங்கப்பூருக்கு முதன்முதலில் வந்தார்.
1867-ஆம் ஆண்டில் நீரிணை குடியேற்றங்களில் இருந்த மாநிலங்கள்; முடியாட்சி காலனிகள் என மாற்றம் செய்யப்பட்டன. அப்போதைய சிங்கப்பூரின் பொதுப்பணித் துறையின் கண்காணிப்பாளர் (Superintendent of Public Works Department of Singapore) பதவி; நீரிணை குடியேற்றங்களின் காலனித்துவப் பொறியாளர் (Colonial Engineer of the Straits Settlements) என்று மறுபெயரிடப்பட்டது.
இருப்பினும், அந்தக் கட்டத்தில் பெரும்பாலான பொதுப் பணிகள் சிங்கப்பூரில் மட்டுமே மையமிட்டு இருந்தன. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தான், 1872-ஆம் ஆண்டில், நீரிணை குடியேற்றங்களின் பொதுப்பணித் துறை (Public Works Department of the Straits Settlements) எனும் புதிய துறை நிறுவப்பட்டது.
அதுவே மலேசிய பொதுப் பணித் துறையின் தொடக்கப் புள்ளியாகும். மேஜர் ஜே.எப்.ஏ. மெக் நாயர் (Major J.F.A. McNair) என்பவர் முன்பு நிர்வாகப் பொறியாளர் மற்றும் கைதிகளின் கண்காணிப்பாளராகவும் (Executive Engineer and Superintendent of Prisoners); 1867-ஆம் ஆண்டில் நீரிணை குடியேற்றங்களின் காலனித்துவப் பொறியாளராகவும் (Colonial Engineer of the Straits Settlements) பணியாற்றியவர்.
இவர்தான் 1872-ஆம் ஆண்டில் மலாயா பொதுப் பணித் துறைக்கு தலைமை தாங்கிய முதல் நபர் ஆவார். இவர் பினாங்கில் இருந்து பொறுப்பு வகித்தார்.[1]