மாயன் சோளக் கடவுள், நடு அமெரிக்காவில் வாழ்ந்த மாயர்களின் கடவுள். பிற இடையமெரிக்க மக்களைப் போலவே மாயர்களும் தங்களுடைய முக்கிய உணவுப் பொருளான சோளத்தை உயிர்ப்பு விசையாக மதிக்கின்றனர். இது அவர்களது தொன்ம மரபுகளில் தெளிவாக வெளிப்படுகின்றது. 16ம் நூற்றாண்டின் போபோல் வூ என்னும் நூலின்படி இரட்டை நாயகர்கள் தமது மறு பிம்பங்களாக சோளச் செடிகளைக் கொண்டுள்ளதுடன் மனிதர்களும் சோளத்திலிருந்தே உருவாக்கப்பட்டனர். சோள விதைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடமான சோள மலையைக் கண்டுபிடித்துத் திறந்தது தொடர்பான கதை இப்போதும் பிரபலமான கதையாகவே உள்ளது. செந்நெறிக் காலத்தில் (கிபி 200-900), சோளக் கடவுள் பண்பாட்டு நாயகனின் அம்சமாகவே காணப்பட்டது.
தென்கிழக்கு ஆசியாவில் அரிசி, பண்டைய கிரேக்கத்திலும் உரோமிலும் கோதுமை ஆகியவற்றைப் போல் மாயர்களின் வாய்மொழி மரபில் சோளம் பொதுவாகப் பெண்ணாகவே உருவகப்படுத்தப்படுகிறது.[1]