மூங்கில் கட்டமைப்பு | |
---|---|
விவரிப்பு | மூங்கில் கட்டமைப்பு அகண்ட சீனா பிராந்தியம் |
நாடுகளும் பகுதிகளும் | கம்போடியா இந்தோனேசியா லாவோஸ் மலேசியா மியான்மர் பிலிப்பீன்சு சிங்கப்பூர் தாய்லாந்து வியட்நாம் |
மொழிகளும் மொழிக்குடும்பங்களும் | சீன, ஆங்கிலம், பருமிய, பிலிப்பினோ, மலாய், இந்தோனேசிய, தாய், வியட்நாமிய, மற்றும் பல கிழக்காசிய மொழிகள் |
முக்கிய நகரங்கள் | பேங்காக் ஹோ சி மின் நகரம் ஜகார்த்தா கோலாலம்பூர் மண்டலை மணிலா நோம் பென் சிங்கப்பூர் வியஞ்சான் |
மூங்கில் கட்டமைப்பு (Bamboo network) அல்லது சீனர்களின் பொதுநலவாரியம்[1] என்பது தென்கிழக்கு ஆசியாவில் வெளிநாட்டு சீனர்களினால் இயக்கப்படும் சில வணிகங்களுக்கிடையே கருத்துருவாக்கம் ஏற்பட உதவும் கட்டமைப்பு ஆகும். இது தென்கிழக்கு ஆசியா நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்சு மற்றும் சிங்கப்பூரைச் சார்ந்த வெளிநாட்டு சீனர்களின் சமூகத்தினை அகண்ட சீனா என்றழைக்கப்படும் பகுதிகளான சீன நிலப்பகுதி, ஹாங்காங், மக்காவு மற்றும் தைவானின் பொருளாதாரத்துடன் இணைக்கிறது.[2] தென்கிழக்கு ஆசியாவின் தனியார் துறையில், வெளிநாட்டு சீன நிறுவனங்கள் முக்கிய பங்கு கொண்டுள்ளது, மேலும் இது பொதுவாக மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துவம் கொண்ட குடும்ப வணிகமாக நிர்வகிக்கப்படுகிறது. இந்திய கட்டுரையாளர் பங்கஜ் மிஸ்ரா, நியூயார்க் புத்தக மதிப்பாய்வுரை பத்திரிக்கையில் எழுதும்போது, மூங்கில் கட்டமைப்பை ஜப்பான் நாட்டினைத் தவிர்த்த "மிகப்பெரிய ஆசிய பொருளாதார வல்லரசாக" குறிப்பிடுகிறார்.[3]
தென்கிழக்கு ஆசியாவில் சீனர்களின் வியாபாரங்கள் வழக்கமாக ஒரு குடும்பத்திற்கு சொந்தமான மற்றும் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துவம்மிக்கதாக நிர்வகிக்கப்படுகிறது.[2] ஜப்பானில் ஆதிக்கம் செலுத்தும் பெரு நிறுவனங்கள் போன்று அல்லாமல் இந்த நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாகவே உள்ளன. வணிகம் மற்றும் நிதித்தொடர்புகள் குடும்ப உறவுகளினாலே வழிநடத்தப்படும், முறைமை சார்ந்த உறவுகளை விடத் தனிப்பட்ட உறவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது நிதிக்கட்டுப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி முழு வளர்ச்சி அடையாத பின்தங்கிய பகுதிகளில் வணிகத் தகவல் தொடர்பு மற்றும் வேகமான மூலதன பரிமாற்றங்களை ஊக்குவிக்கிறது.[4] இந்த தொடர்புகள் "குவான்சி" எனப்படும் கருத்தாக்கத்தினை அடைப்படையாக கொண்டது, இந்த சீன வார்த்தை தனிப்பட்ட தொடர்புகளை வளர்ப்பதைக் குறிக்கிறது.[5]
மூங்கில் கட்டமைப்பின் பெரும்பாலான வணிக செயற்பாடுகள் பலவும் கிரேட்டர் சீனா பிராந்தியத்திலுள்ள ஹாங்காங், தாய்பெய் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சிங்கப்பூர், ஜகார்த்தா, பேங்காக், கோலாலம்பூர், ஹோ சி மின் நகரம், மற்றும் மணிலா உள்ளிட்ட முக்கிய நகரங்களை மையமாக கொண்டுள்ளது.[6]
16 ஆம் நூற்றாண்டில், தெற்கு சீனாவிலிருந்து புலம்பெயர்ந்த சீனர்கள் இந்தோனேசியா, தாய்லாந்து, மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறினார்கள், அப்போதிலிருந்து மூங்கில் கட்டமைப்பின் தோற்றம் தொடங்குகிறது.[7] இவர்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட குடியரசாக சிங் சீனாவின் கிளை மாகாணமாக - லான்பாங் குடியரசை நிறுவினர், இது 1777 முதல் 1884 வரை நீடித்தது. 1949 ம் ஆண்டு சீன உள்நாட்டு யுத்தத்தில் கம்யூனிச வெற்றியை தொடர்ந்து அகதிகளாக வெளியேற சீனர்களால், இந்தப் பிராந்தியத்தில் சீன மக்கள்தொகை விரைவாக அதிகரித்தது.[6] மூங்கில் கட்டமைப்பு பெரிதும் கன்பூசியனிச தத்துவத்தின் தாக்கம் அதிகம் கொண்டது, இந்த தத்துவம் கிமு 5ஆம் நூற்றாண்டில் கன்பூசியசு மூலம் வளர்க்கப்படது, இது வாரிசுரிமை பற்று மற்றும் நடைமுறை நோக்குத்தன்மைகளை ஊக்குவிக்கிறது.
1997 ஆசிய நிதி நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட அரசுகள் உள்நாட்டு வர்த்தகம்தனை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் அறிமுகம் செய்தன, இது மூங்கில் கட்டமைப்பை பலவீனப்படுத்தியது. இதன் பிறகு வணிக தொடர்புகள் பாரம்பரிய மூங்கில் கட்டமைப்பின் தனிச்சிறப்புகளான குடும்ப உறவு, நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமல், பெரும்பாலும் ஒப்பந்தங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது.[8]
1980ல் டங் சியாவுபிங்கினால் ஆரம்பிக்கப்பட்ட சீனப் பொருளாதார சீர்திருத்ததினைத் தொடர்ந்து, நீடித்திருக்கும் கலாச்சார மற்றும் மொழிகளின் தாக்கத்தின் காரணமாகவும் மூங்கில் கட்டமைப்பினைச் சார்ந்த பெரும்பாலான தொழில்கள் சீனாவில் முதலீடுகளை அதிகரித்தது.[9] 21-ஆம் நூற்றாண்டில் சீனா உலக பொருளாதார சக்தியாக மாற்றமடைந்தது, இந்த உறவில் தலைகீழ் மாற்றம் ஏற்பட வழிவகுத்தது. சீன அரசாங்கம் அமெரிக்கா கருவூலப் பத்திரங்களை நம்பியிருப்பதைக் குறைக்க முற்படும் நோக்கத்தின் காரணமாக அதன் கவனத்தினை வெளிநாட்டு முதலீடுகளுக்கு திருப்பியது. அமெரிக்காவில் பாதுகாப்புவாதம் என்ற அமெரிக்க அரசின் கொள்கை சீன நிறுவனங்கள் அமெரிக்க சொத்துக்களை கையகப்படுத்துவதை கடினமாக்கியதை தொடர்ந்து சீன முதலீடுகளை மூங்கில் கட்டமைப்பு அதிகம் பெறத்துவங்கியது.[9]