யதுவீர் கிருட்டிணதத்த சாமராச உடையார் | |
---|---|
மைசூர் மகாராஜா (பட்டம்) | |
ஆட்சி | 2015 - தற்போது |
முன்னிருந்தவர் | ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் |
மரபு | உடையார் மரபு |
தந்தை | ஸ்வரூப் ஆனந்த் கோபால்ராஜ் அரஸ் |
தாய் | திரிபுரசுந்தரி தேவி |
பிறப்பு | 24 மார்ச்சு 1992 |
சமயம் | இந்து |
யதுவீர் கிருட்டிணதத்த சாமராச உடையார் (கன்னடம்: ಯದುವೀರ ಕೃಷ್ಣದತ್ತ ಚಾಮರಾಜ ಒಡೆಯರ್, ஆங்கிலம்: Yaduveer Krishnadatta Chamaraja Wadiyar, பிறப்பு: மார்ச் 24, 1992) அல்லது பன்னிரெண்டாம் சாமராச உடையார் என்று அழைக்கப்படுபவர், உடையார் மரபின் 27ஆவது மற்றும் தற்போதய மைசூர் மகாராஜா. இவருக்கு முன் மன்னராக இருந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் வாரிசு இல்லாமல் திசம்பர் 2013 ல் இறந்தார். இதனால் மறைந்த மன்னரின் சகோதரி மகள் காயத்ரி தேவியின் மகள் லீலாதேவி என்கிற திரிபுரசுந்தரியின் மகனான யதுவீர் பிப்ரவரி 23, 2015 அன்று மகாராணி பிரமோதா தேவியால் தத்தெடுக்கப்பட்டு, யதுவீர் கிருட்டிணதத்த சாமராச உடையார் என்று பெயர் சூட்டப்பட்டு, மைசூர் மகாராஜாவின் வாரிசாக ஆக்கப்பட்டார்.
யதுவீர் கோபால்ராஜ் அரஸ் என்ற இயற்பெயருடன் பெட்டதகோட்டே குடும்பத்தில் பிறந்த இவர், ஸ்வரூப் ஆனந்த் கோபால்ராஜ் அரஸ் (சனவரி 1, 1960) இளவரசி திரிபுரசுந்தரி தேவி (மார்ச் 11, 1966 ) ஆகியோரின் ஒரே மகனாவார்.[1]. இவருடைய தங்கையின் பெயர் ஜெயாத்மிகா லட்சுமி.
இவர் பத்தாம் வகுப்பு வரை பெங்களூரில் வித்யா நிகேதன் பள்ளியில் படித்தார், பிறகு 12 ஆம் வகுப்பை பெங்களூர் கனடிய சர்வதேசப் பள்ளியில் நிறைவுசெய்தார். பின்னர் ஐக்கிய அமெரிக்கா சென்று மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பொருளியல் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலைப்பட்டம் பெற்றார்.[2]
மன்னரின் ராஜகுரு, குடும்பத்தார் போன்றோரின் ஆலோசனை பெற்ற பின் மகாராணி பிரமோதா தேவி பிப்ரவரி 12, 2015 இல் மைசூர் அம்பா விலாஸ் மாளிகையில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், உடையார் மரபின் புதிய மன்னரின் பெயரை அறிவித்தார். பெப்ரவரி 23, 2015 ஆம் நாள் தத்தெடுக்கப்பட்டு அவர் முறையாக மைசூர் மன்னரின் வாரிசாக்கப்பட்டார். யதுவீர் கிருட்டிணதத்த சாமராச உடையார் என்ற புதிய பெயரிடப்பட்டு மே 28, 2015 இல் மைசூர் மன்னராக முடிசூட்டப்பட்டார்.[3][4]
முடிசூட்டப்பட்ட ஓராண்டுக்குப் பின், ஜூன் 27, 2016 ல் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த துங்கர்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் சிங் மற்றும் மஹேஷ்ரீ குமாரியின் மகளான திரிஷிகா குமாரியை யதுவீர் மணமுடித்தார்.[5] திசம்பர் 6, 2017 ல் பெங்களூரில் திரிஷிகா ஒரு ஆண் மகவை ஈன்றார். மகவுக்கு ஆத்யவீர் நரசிம்மராஜ உடையார் எனப்பெயரிடப்பட்டது.