யோகேந்திர சுக்லா (Yogendra Shukla) (1896-1960) பீகாரில் இருந்து வந்த சுதந்திர போராட்ட வீரரான இவர் ஓர் இந்திய தேசியவாதியாவார். இவர் அந்தமான் தீவுகளில் இருக்கும் சிற்றறைச் சிறையில் அடைத்து வைக்கபட்டிருந்தார். மேலும் இவர் இந்துஸ்தான் சோசலிச குடியரசுக் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். பசவான் சிங்குடன் (சின்கா) பீகாரைச் சேர்ந்த காங்கிரசு சோசலிச கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தார். [1]
யோகேந்திர சுக்லாவும் இவரது மருமகன் பைகுந்த் சுக்லாவும் (1907-1934) பீகார் மாநிலத்தின் லல்கஞ்ச் முசாபர்பூர் மாவட்டத்தில் (இப்போது வைசாலி மாவட்டம் ) ஜலால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். 1932 முதல் 1937 வரை, பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் புரட்சிகர இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக, யோகேந்திரா அந்தமான் சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்தார். இவர் பல தைரியமான பணிக்காக பிரபலமானவர். பகத்சிங் மற்றும் பதுகேஷ்வர் தத்தாவின் மூத்த கூட்டாளியாக இருந்த இவர் அவர்களுக்கு பயிற்சி அளித்திருந்தார். இவர் தனது புரட்சிகர நடவடிக்கைகளுக்காக மொத்தம் பதினாறு 1/2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்தது. இந்தியாவின் வெவ்வேறு சிறைகளில் சிறைவாசம் அனுபவித்தபோது, இவர் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார். இது இவரது மன உறுதியை சிதைத்தது. இதனால் பார்வையிழந்த இவர் உடல்நிலை சரியில்லாமல் 1960இல் இறந்தார்,
1932 அக்டோபரில், யோகேந்திர சுக்லா, பசவான் சிங் (சின்கா), சியாம் தியோ நாராயண் அல்லது இராம் சிங், ஈசுவர் தயால் சிங், கேதார் மணி சுக்லா, மோகித் சந்திர அதிகாரி மற்றும் இராம் பிரதாப் சிங் புரட்சிகர நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்தமான் சிறையில் பிரிட்டிசு அரசு அடைத்தது
யோகேந்திர சுக்லா, கேதார் மணி சுக்லா மற்றும் சியாம்தியோ நாராயண் ஆகியோர் 1932 திசம்பரில் அந்தமான்னுக்கு மாற்றப்பட்டனர்.[2] 1937ஆம் ஆண்டில், யோகேந்திர சுக்லா தனது 46 நாட்கள் உண்ணாவிரதத்தின் விளைவாக அசாரிபாக் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். 1937இல் சிறி கிருட்டிணா சின்கா முதல் காங்கிரசு அமைச்சகத்தை உருவாக்கியபோது, இவர் அரசியல் கைதிகள் காரணத்தினால் 1938 பிப்ரவரி 15, ராஜினாமா செய்தார். இதன் விளைவாக, ஆளுநர் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார். யோகேந்திர சுக்லாவும் மற்ற அரசியல் கைதிகளும் 1938 மார்ச்சில் விடுவிக்கப்பட்டனர்.
விடுதலையான பின்னர் யோகேந்திர சுக்லா இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார் . மேலும் முசாபர்பூர் மாவட்ட காங்கிரசு குழுவின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் 1938இல் அகில இந்திய காங்கிரசு குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பின்னர் ஜெயபிரகாஷ் நாராயணனின் காங்கிரசு சோசலிச கட்சியில் சேர்ந்தார். சுவாமி சகஜானந்த சரசுவதிக்கு பதிலாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்திய குழுவில் உறுப்பினரான உடனேயே இவர் 1940இல் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
1942 ஆகத்தில் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்தபோது, யோகேந்திர சுக்லா அசாரிபாக் மத்திய சிறைச்சாலையில் இருந்தார். ஜெயபிரகாஷ் நாராயண், சூரஜ் நாராயண் சிங், குலாப் சந்த் குப்தா, ராம்நந்தன் மிஸ்ரா மற்றும் சாலிகிராம் சிங் ஆகியோருடன் சுதந்திரத்திற்காக மறைமுக இயக்கத்தைத் தொடங்கியிருந்தார். அப்போது ஜெயபிரகாஷ் நாராயண் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், சுமார் 124 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் கயாவுக்கு அவரை தனது தோளில் சுமந்து சென்றார். [3]
சுக்லா கைது செய்யப்பட்டதற்கு பிரிட்டிசு அரசு ரூ.5000 பரிசு அறிவித்தது. இவர் 1942 திசம்பர் 7, அன்று முசாபர்பூரில் கைது செய்யப்பட்டார்.[2] கைது செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு சுக்லா முசாபர்பூர் சிறையில் இருந்து சூரஜ்தியோ சிங், இராம் பாபு கல்வார், பிரம்மநந்த் குப்தா மற்றும் கணேஷ் ராய் ஆகிய நான்கு கைதிகளை தப்பிக்க உதவியதாக அரசாங்கம் நம்பியது.
யோகேந்திர சுக்லா பக்சர் சிறையில் மூன்று ஆண்டுகள் அடைக்கப்பட்டார்.[2] 1944 மார்ச்சில், இவர் பக்சர் சிறையில் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
இவர் 1946 ஏப்ரலில், விடுவிக்கப்பட்டார். 1958ஆம் ஆண்டில், இவர் பிரஜா சோசலிச கட்சியின் சார்பாக பீகார் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மேலும் 1960 வரை பதவியிலிந்தார்.[2] 1960ஆம் ஆண்டில்,பல ஆண்டு சிறைவாசத்தின் விளைவாக இவர் தீவிரமாக நோய்வாய்ப்பட்டு, 1960 நவம்பர் 19, அன்று இறந்தார்.