ராம் சரண் சர்மா (26 நவம்பர் 1919 - 20 ஆகத்து 2011[1][2][3][4]) என்பவர் வரலாற்றாசிரியர், நூலாசிரியர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் ஆர். எஸ். சர்மா என்று அறியப்படுகிறார்[5]. பாட்னா பல்கலைக் கழகத்திலும் தில்லிப் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணி புரிந்தார். இவர் எழுதிய பல நூல்கள் இந்திய மொழிகளிலும் அயல் நாட்டு மொழிகளிலும் மொழி ஆக்கம் செய்யப்பட்டுள்ளன.
பிகாரில்[6] ஒரு சிற்றுரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். தொடக்கக் கல்வியைச் சிற்றூர்ப் பள்ளியில் முடித்தார். மெட்ரிக்குலேசன் படிப்பை 1937 இல் முடித்த பின் பாட்னா கல்லூரியில் 6 ஆண்டுகள் படித்தார்[7]. 1943 ஆம் ஆண்டில் வரலாற்றுப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
பிகாரில் ஆரா, பகல்பூர் ஆகிய ஊர்களில் உள்ள கல்லூரிகளில் ஆசிரியராகப் பணி புரிந்தார்[7][8]. பின்னர் பாட்னா கல்லூரியில் சேர்ந்தார். 1958 முதல் 1973 வரை பாட்னா பல்கலைக் கழக வரலாற்றுத் துறையின் தலைவராக இருந்தார். 1973 இல் பாட்னாவிலிருந்து தில்லிப் பல்கலைக் கழகத்திற்கு மாற்றல் ஆனார். தில்லிப் பல்கலைக் கழகத்தில் 1985 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை வரலாற்றுத்துறைத் தலைவராக இருந்தார். ஓய்வுக்குப் பின்னர் சொந்த ஊரான பாட்னாவிற்குத் திரும்பினார்.
இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைவராக 1972 முதல் 1977 வரை பதவி வகித்தார்[5][9]. இந்திய வரலாற்றுப் பேராயம் என்னும் அமைப்பில் தலைவராகவும் இருந்தார். டொராண்டோ பல்கலைக் கழகம், லண்டன் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராக இருந்தார். இந்தியாவின் வரலாற்று அறிவியல் தேசியக் கமிசனில் உறுப்பினராகவும் மத்திய ஆசியா நாகரிகங்கள் உனெசுகோ கமிசனில் உறுப்பினராகவும் இருந்தார்.
மார்க்சிய வரலாற்றாசிரியராக இருந்தபோதிலும் இந்திய சூழலுக்கு ஏற்ப மார்க்சியத் தத்துவத்தைச் செயல்படுத்தவேண்டும் என்று கருதினார். தொன்மை இந்தியாவில் தாழ்த்தபட்ட குலத்தோரின் வாழ்வு நிலை பற்றி பழம் இந்தியாவில் சூத்திரர்கள் என்னும் நூலில் விரிவாக எழுதினார். ஆரியர்கள் இந்தியாவின் ஆதி குடி மக்கள் என்பதையும் அரப்பா நாகரிகம் ஆரியருடையது என்பதையும் ஆர். எஸ். சர்மா மறுத்தார். மதவாதம் இந்தியாவை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும் என்று கூறினார். ராம ஜன்ம பூமி விவகாரத்தில் பாபர் மசூதி இடிக்கப் பட்டதைக் கண்டித்தார். சர்ச்சைக்குரிய இடத்தில் இராமர் கோயில் இருந்ததற்குச் சான்றுகள் இல்லை என்று சொன்னார்[10]. பழமை இந்தியா என்னும் நூலை 1978 ஆம் ஆண்டில் சனதா கட்சி நடுவண் அரசு தடை செய்தது. ஆனால் அத்தடை 1980 இல் நீக்கப்பட்டது. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்த இருந்த நிலையில் 'ஆடம்ஸ் பாலம் கடவுள் இராமனால் கட்டப்பட்டது அன்று' என்று தம் கருத்தைத் தெரிவித்தார்.
தன் வாழ்நாளில் 15 மொழிகளில், 115 புத்தகங்கள் எழுதியுள்ளார்.[11]