ராஹத் அலி (Rahat Ali (உருது: راحت على; பிறப்பு: செப்டம்பர் 12, 1988) பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் இடதுகை மித வேகப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் கான் ஆய்வக அணி, முல்தான் கோட்டப் பகுதி அணி, 19 வயதிற்கு உட்பட்ட முல்தான் அணி, முல்தான் டைகர்ஸ், குவெத்தா கிளாடியேட்டர்ஸ், மற்றும் சூயி வடக்கு காச் பைப்லைன்ஸ் லிமிடட் ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[1] 2012 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[2][3] பெப்ரவரி 1, 2013 இல் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமனார். 140 கி.மீ வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்ட இவர் பந்தை சுழலச் செய்து வீசுவதில் சிறந்தவராகக் கருதப்படுகிறார். தனது கல்லூரிக் காலத்தில் முல்தான் துடுப்பாட்டச் சங்கத்திற்காக விளையாடினார். ஆகஸ்டு 2018 இல் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.
2013 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. பெப்ரவரி 1, இல் ஜோகானஸ்பேர்ககில் நடைபெற்ற போட்டியில் இவர் அறிமுகமானார். இதன் முதல் ஆட்டப் பகுதியில் 14 ஓவர்கள் வீசி 56 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால், இலக்கினைக் கைப்பற்றவில்லை. பின் மட்டையாட்டத்தில் முதல் ஆட்டப் பகுதியில் 6 பந்துகளைச் சந்தித்த இவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் டேல் ஸ்டெய்ன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப்பகுதியில் 9 பந்துகளில் 3 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாப்பிரிக்க அணி 211 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[4]
2018 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் இசுக்கொட்லாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. மே 11 இல் டப்ளனில் நடைபெற்ற போட்டியின் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 7 ஓவர்கள் வீசி 18 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இரன்டாவது ஆட்டப் பகுதியில் 23 ஓவர்கள் வீசி 75 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில்3 ஓவர்களை மெய்டனாக வீசினார். பின் மட்டையாட்டத்தில் முதல் ஆட்டப் பகுதியில் 6 பந்துகளில் ஓட்டங்கள் எடுக்காமல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பாக்கித்தான் அணி 5 இலக்குகளால் வெற்றி பெற்றது.[5]
2012 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. சூன் 9 இல் கண்டியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் 9 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 1 ஓட்டங்கள் எடுத்தார்.பின் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 34 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் இலங்கை அணி 76 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ராஹத் அலி