ருது சம்ஹாரம் (Ṛtusaṃhāra often written Ritusamhara),[1] (தேவநாகரி: ऋतुसंहार; ऋतु ṛtu, "பருவங்கள்"; संहार saṃhāra, "தொகுப்பு") நீண்ட சமசுகிருத மொழி செய்யுள் காவியம் ஆகும். ஆறு தொகுதிகள் கொண்ட ருது சம்ஹாரம் நூல், மாறிவரும் பருவங்களுக்கு ஏற்ப காதலர்கள் வினையாற்றுவது சித்தரிக்கப்படுகின்றன.
காளிதாசர் படைத்த காவியங்களில், ருது சம்ஹாரம் காலத்தால் முந்தியது என வட மொழி இலக்கியவாதிகள் கருதுகின்றனர்.[2]இந்நூலை பருவங்களின் மாலை என்றும் அழைப்பர்.
இந்நூலில் இளம் காதலர்களின் சிற்றின்ப காதலை வெளிப்படுத்தும் சிருங்கார ரசம் அதிக அளவில் உள்ளது. [3]
சித்திரை, வைகாசி மாதங்களின் வசந்த ருது (இளவேனில் காலம்), ஆனி, ஆடி மாதங்களுக்கான கிருஷ்ம ருது, (முதுவேனில்காலம்), ஆவணி மற்றும் புரட்டாசி மாதங்களுக்கான வர்ச ருது (மாரிகாலம்), ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களுக்கான சரத் ருது (கூதிர்காலம்), மார்கழி மற்றும் தை மாதங்களுக்கான ஹேமந்த ருது (முன்பனிக்காலம்), மாசி மற்றும் பங்குனி மாதங்களுக்கான சிசிர ருது (பின்பனிக்காலம்) எனும் ஆறு இந்தியப் பருவங்களை கவிதை நயத்துடன் ருது சம்ஹாரம் நூல் விளக்குகிறது.
நாடக எழுத்தாளரும், இயக்குனருமான ரத்தன் தியாம் என்பர், 2002ல் நான்காவது பாரத வர்ணப் பெருவிழாவின் போது, காளிதாசரின் ருது சம்ஹாரம் காவியத்தை தழுவி ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். [4]
ருது சம்ஹாரம் காவியத்தை முதன் முதலில், தமிழ் மொழியில் தி. சதாசிவ ஐயர் என்பவர் 1950ல் தமிழ் மொழியில் எழுதி வெளியிட்டுள்ளார். இக்காவியம் ஆங்கிலம், இந்தி, மராத்தி, தெலுங்கு, வங்காள மொழி மற்றும் கன்னட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.