லோகாகாட் | |
---|---|
![]() லோகாகாட் கோட்டையின் பிதான நுழைவாயில். | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,033 m (3,389 அடி) |
ஆள்கூறு | 18°42′32″N 73°28′36″E / 18.70889°N 73.47667°E |
புவியியல் | |
அமைவிடம் | ![]() |
மூலத் தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலை |
லோகாகாட் ( Lohagad ) என்பது இந்தியாவில் உள்ள மகாராட்டிரா மாநிலத்தின் பல மலைக்கோட்டைகளில் ஒன்றாகும். மலை வாழிடமான லோணாவ்ளாவிற்கு அருகாமையிலும் புனேவின் வடமேற்கே 52 கிமீ (32 மைல்) தொலைவிலும் அமைந்துள்ள லோகாகாட் கடல் மட்டத்திலிருந்து 1,033 மீ (3,389 அடி) உயரத்தில் உள்ளது. இந்த கோட்டை அண்டை விசாபூர் கோட்டையுடன் ஒரு சிறிய வரம்பில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டையானது பெரும்பாலான நேரங்களில் லோக்தாமியா பேரரசின் கீழ் இருந்தது. முகலாய பேரரசின் கீழ் 5 ஆண்டுகள் குறுகிய காலம் இருந்தது. இந்த கோட்டை மகாராட்டிர அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. [1]
லோகாகாட் பல்வேறு காலகட்டங்களில் லோக்தாமியா, சாளுக்கியர்கள், இராஷ்டிரகூடர்கள், யாதவர்கள், பாமினிகள், நிசாம்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் போன்ற பல வம்சங்கள் ஆக்கிரமித்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. பேரரசர் சிவாஜி கி.பி 1648 இல் இதைக் கைப்பற்றினார். ஆனால் அவர் புரந்தர் போருக்கு பிந்தைய உடன்படிக்கையால் கி.பி 1665 இல் முகலாயர்களிடம் இதனை ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிவாஜி கி.பி 1670 இல் கோட்டையை மீண்டும் கைப்பற்றி தனது கருவூலத்தை இங்கு வைத்திருந்தார். பின்னர் பேஷ்வா காலத்தில் நானா பட்நாவிசு இந்த கோட்டையை சில காலம் பயன்படுத்தினார். இவர் கோட்டையில் ஒரு பெரிய குளம் மற்றும் ஒரு படி கிணறு போன்ற பல கட்டமைப்புகளை கட்டினார்.
லோகாகாட் கோட்டை அதன் தெற்குப் பக்கத்தில் லோகத்வாடியை நோக்கிய குகைகளைக் கொண்டுள்ளது. 2019 செப்டம்பரில், புனேவைச் சேர்ந்த மலையேறுபவர்கள் குன்றின் மீது உள்ள குகையில் கிமு 2 அல்லது 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராகிருத மொழியில் சைன பிராமி எழுத்துக்களில் ஒரு கல்வெட்டைக் கண்டுபிடித்தனர். இந்த கல்வெட்டை தக்காணக் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பண்டைய இந்திய ஓவிய அறிஞர் முனைவர் சிறீகாந்த் பிரதான் ஆய்வு செய்தார். [2]
கல்வெட்டு, இந்திர ரக்சிதா எனப்பொருள்படும் "இடா ரகிதா" என்ற பெயரைக் குறிப்பிடுகிறது. அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீர் தொட்டிகள், பாறையில் வெட்டப்பட்ட அமருமிடங்கள் போன்றவறை நன்கொடையாக வழங்கினார் என்று கூறுகிறது. பாறையில் உள்ள கல்வெட்டும் இதே பெயரைக் குறிப்பிடுகிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு 50 செ.மீ அகலமும் 40 செ.மீ நீளமும் கொண்டது . மேலும், ஆறு வரிகளில் எழுதப்பட்டுள்ளது. லோகாகட் சைனக் குகை கோட்டைக்கு அருகில் உள்ளது.
லோகாகட் கோட்டைக்கு அருகில் புனே சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. நவி மும்பை சர்வதேச விமான நிலையம்.லோணாவ்ளா மற்றும் புனே இடையே உள்ள புனே புறநகர் ரயில்வே மூலம் அருகில் உள்ள மலாவ்லி தொடருந்து நிலையத்தை அடையலாம். லோகாகட் மும்பை-புனே நெடுஞ்சாலையால் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வாகனங்களுக்கும் கொல்வன் மற்றும் துதிவேர் கிண்ட் வழியாக பௌடில் இருந்து அணுகலாம். மக்கள் கோட்டைக்கு செல்லும் வழி முழுவதும் நடைபயணம் செய்யலாம்.