வந்திகா அகர்வால் (Vantika Agrawal) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீராங்கனையாவார். புதுதில்லியைச் சேர்ந்த இவர் 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதியன்று பிறந்தார். 2021 ஆம் ஆண்டு வந்திகா பன்னாட்டு பெண்கள் கிராண்டுமாசுட்டர் பட்டத்தைப் பெற்றார்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இளையோர் சதுரங்க வெற்றியாளர் பட்டப் போட்டியின் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் வந்திகா அகர்வால் வெண்கலப் பதக்கம் வென்றார்.[1][2] 2019 ஆம் ஆண்டு காரைக்குடியில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பெற்றார்.[3][4] 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற இணையவழி சதுரங்க வெற்றியாளர் பட்டப் போட்டியில் இந்திய தேசிய அணியுடன் சேர்ந்து விளையாடிய இவர் 2020 ஆம் ஆண்டுக்கான நிகழ்நிலை சதுரங்க ஒலிம்பிக் போட்டியை வென்றார். [5][6]
2021 ஆம் ஆண்டிலும் வந்திகா அகர்வால் இந்திய இளையோர் பெண்கள் நிகழ்நிலை சதுரங்க வெற்றியாளர் பட்டப் போட்டியில் பங்கேற்று விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றார். [7] இந்திய இளையோர் முதியோர் பெண்கள் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். [8] இதே ஆண்டில் வந்திகா, பிடே பினான்சு வணிகப் பள்ளிகள் சூப்பர் கோப்பையையும் வென்றார். [9] வடக்கு ஐரோப்பா நாடான லாத்வியாவில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற பிடே அமைப்பின் பெண்கள் கிராண்டு சுவிசு போட்டியில் வந்திகா 14 ஆவது இடத்தைப் பிடித்தார். [10] 2021 ஆம் ஆண்டில் வந்திகா அகர்வால் இந்தியாவின் 21 ஆவது பெண் கிராண்டுமாசுட்டர் பட்டம் வென்றார். [11]