விரெக்சி இலியொனார்டு (Wrexie Leonard) (செப்டம்பர் 15, 1867 - நவம்பர் 9, 1937) அல்லது உலூயிசு இலியொனார்டு எனப்படும் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பெர்சிவால் உலோவலின் கீழ் உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் செவ்வாய் பற்றிய தனது நோக்கீடுகளை வெளியிட்டுள்ளார். வெள்ளியின் குழிப்பள்ளம் ஒன்று இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
விரெக்சி உலூயிசு இலியோனார்டு பெனிசில்வேனியாவில் உள்ள திராயில் வளர்ந்தார். பின்னர் போசுடானுக்கு இடம்பெயர்ந்தார்.[1] இவர் பெசிவால் உலோவல் எனும் வானியலாளருக்கு 1883 இல் இருந்து இருபது ஆண்டுகளாக அவர் இறக்கும்வரை தனிச் செயலராகவும் உதவியாளராகவும் இருந்துள்ளார்.[1][2] இவர் 1895 இல் உலோவலுடன் ஒரு புதிய வான்காணகத்துக்கு இடம் தேர்வு செய்ய ஆப்பிரிக்கா சென்றுள்ளார். ஆனால் அது பிறகு அரிசோனாவில் உள்ள பிளாகுசுட்டாபில் நிறுவப்பட்டது.[1][3]
இவர் உலோவலின் கடிதத் தொடர்பைக் கவனித்துகொண்டார்; கட்டுரைகளையும் உரைகளையும் பதிப்பித்தார்; அவருடன் பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளார்.[1] உலோவல் இல்லாதபோது இவர் உலோவல் வான்காணகத்துக்குப் பொறுப்பு வகித்துள்ளார்.[1] அரிசோனா வான்காணகம் 1894 இல் நிறுவப்பட்ட பிறகு அங்கு வானியல் நோக்கீடுகளை மேற்கொண்டார். அறிவன் (புதன்), வெள்ளி, வியாழன் ஆகிய கோள்களின் ஆய்வை மேற்கொண்டார்.[3] வான்காணகப் பதிவேடுகளில் தொடக்க ஆண்டுகளில் அடிக்கடி நோக்கீடுகளில் ஈடுபட்டதையும் இவர் வரைந்த செவ்வாய், வெள்ளியின் உருவரைகளையும் காணமுடிகிறது.[3] மற்ற மகளிர் இயல்பாக பயன்படுத்த தொடங்குவதற்கு அரைநூற்றாண்டுக்கு முன்பே இவர் முதலில் பெரிய தொலைநோக்கியைப் பயன்படுத்தியமை புலனாகிறது.[3][4]
இவர் மெக்சிகோ நகருக்கு புறத்தே உள்ள தாக்குபாயாவுக்கு உலோவலுடன் 1896 இல் கப்பல்வழி பெரிய கிளார்க் ஒளிவிலகல் வகை தொலைநோக்கி அனுப்பப்பட்டபோது சென்றார். இது பின்னர் இவர் நோக்கீடு செய்த செவ்வாய் எதிர்வுகளின் பதிவுகளில் பலவற்றில் ஓரிடம் ஆகும்.[5] இவர் மக்கள் வானியல் இதழில் 1907 இல் செவ்வாய் வரைபடங்களைக் குறிப்புகளுடன் செவ்வாய் எதிர்வுகள் அமைந்த சில ஆண்டுகளில் (1901, 1903, 1905) அதன் பனிக்கவிப்புகள், உலோவல் கால்வாய்கள் பற்றி எழுதி வெளியிட்டார்.[3]
இவர் 1904 இல் பிரெஞ்சு வானியல் கழகத்தில் தேர்வு செய்யப்பட்டார். இது அப்போது இவருக்கு வழங்கியமை இவருக்கு அளிக்கப்பட்ட சிறந்த மதிப்பாகும்.[3] இவர் சோசியேடாட் ஆஸ்ட்ரோனாமிகோ டி மெக்சிகோ எனற சங்கத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினரும் ஆவார்.[6]
இவர் 1916 இல் உலோவல் இறந்ததும், மீண்டும் கிழக்காக இடம் மாறினார்.[1] ஐந்தாண்டுகளுக்குப் பிறகு உலோவலின் நினைவுகளை, பெர்சிவல் உலோவல்: பின்னும் ஒளிவீசும் புகழ் என்ற நூலாக வெளியிட்டார்.[7] இதில் பல ஆண்டுகளாக இவருக்கும் உலோவலுக்கும் நடந்த கடித்த் தொடர்புகளின் சுருக்க்க் குறிப்புகளும் அடங்கியுள்ளன.[8] இவர் 1929 பொருளியல் சரிவின்போது பங்குச் சந்தையில் தன் பணத்தையெல்லம் இழந்த பிறகு, மசாசூசட் இராக்சுபரியில் இருந்த முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ந்து வாழலானர்.[1]
31.7 கிமீ அகல வெள்ளிக் கோளின் இலியொனார்டு குழிப்பள்ளம் (அகலாங்கு −73.8, நெட்டாங்கு 185.2) இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[3]
யான் மில்சப்சுவின் 2014 ஆம் ஆண்டு புதினமாகிய செவ்வாயில் வெள்ளி பாத்திரங்களில் ஒன்றாகிய உலூலு இவரது இயல்பை வைத்து புனையப்பட்டுள்ளது.[9]