வைகுந்தபாய் மேத்தா | |
---|---|
பிறப்பு | 26 அக்டோபர் 1891 பவநகர், குசராத்து, இந்தியா |
இறப்பு | 27 அக்டோபர் 1964 புனே, இந்தியா |
அமைப்பு(கள்) | மகாராட்டிரா மாநில கூட்டுறவு வங்கி,,, இந்திய தேசிய காங்கிரசு |
அரசியல் இயக்கம் | இந்திய கூட்டுறவு இயக்கம் |
வைகுந்த்பாய் மேத்தா (Vaikunthbhai Mehta) (26 அக்டோபர் 1891 - 27 அக்டோபர் 1964) இவர் இந்திய கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடித் தலைவராக இருந்தார். குசராத்தின் பவநகர் என்ற இடத்தில் இவர் பிறந்தார். இவர் மும்பை மாநில கூட்டுறவு வங்கியில் (இப்போது மகாராட்டிரா மாநில கூட்டுறவு வங்கி) சுமார் 35 ஆண்டுகள் தடையின்றி தலைமை நிர்வாகியாக பணியாற்றினார். அப்போதைய மும்பை மாநிலத்தின் நிதி மற்றும் ஒத்துழைப்பு அமைச்சராக இருந்த இவர் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் முதல் தலைவராகவும் இருந்தார். [1]
"கூட்டுறவு பயிற்சி என்பது ஒரு முன்நிபந்தனை மட்டுமல்ல, கூட்டுறவு நடவடிக்கைகளின் நிரந்தர நிபந்தனையாகும்" என்று இவர் கூறினார். கூட்டுறவு துறையில் இவரது பணியால் மகாராட்டிராவின் முன்னோடியான ஒய். பி. சவாண், அமுல் இந்தியாவின் தலைவர் டாக்டர் வர்கீஸ் குரியன், மகாராட்டிராவின் கூட்டுறவுத் தலைவர் குலாப்ராவ் பாட்டீல் போன்ற பல தலைவர்கள் ஈர்க்கப்பட்டனர். இதுபோன்ற மேலும் பல தலைவர்களும் இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை மேற்கொண்டனர் [1]
ஒரு தத்துவஞானியும், சிறந்த கூட்டுறவுத் தலைவருமான இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் புனேவில் உள்ள தேசிய கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்திற்கு வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு மேலாண்மை நிறுவனம் என இவரது பெயரிடப்பட்டது, இந்நிறுவனம்) கூட்டுறவு இயக்கத்திற்கான ஒரு அறிவுசார் நரம்பு மையமாக கருதப்படுகிறது. மேலும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச மேலாண்மை பயிற்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. மேலாண்மை மேம்பாடு, பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள், அரசு துறைகள் மற்றும் பிற தேசிய அமைப்புகளின் ஆலோசனை தேவைகளுக்கு இது பயிற்சியை வழங்குகிறது. [1]
இந்திய கூட்டுறவு இயக்கத்தில் இவர் செய்த சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியம் புதுதில்லியில் ஆண்டுதோறும் வைகுந்த்பாய் மேத்தா நினைவு சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்கிறது. இவர் தனது வாழ்நாள் முழுவதும் கூட்டுறவு சித்தாந்தத்தை ஆதரித்திருந்தார். [2]