1928 தென்னிந்திய ரயில்வே போராட்டம் (1928 South Indian railway strike) என்பது ஒரு பொதுப்போராட்டம் ஆகும். ரயில்வே துறையின் நிதிச் சுமையை குறைப்பதற்காக தென்னிந்திய ரயில்வே நிறுவனம் 3100 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதை எதிர்த்துத் தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் போராடினர். இப்போராட்டம் ஜூன் மாதம் 29 ஆம் திகதி முதல் ஆகத்து 2, 1928 வரை நடைபெற்றது. இப்போராட்டத்தினால் தென்னிந்தியா முழுவதும் பொதுமக்களின் போக்குவரத்தும், பொருட்களைக் கொண்டு செல்வதும் பெரிதும் பாதிக்கப்பட்டது. மதராஸ் அரசும் தென்னிந்திய ரயில்வே நிறுவனமும் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் அனைவரையும் கைது செய்தனர், அத்துடன் தொழிலாளர் கூட்டமைப்பின் அங்கீகாரத்தையும் ரத்து செய்தனர்.
1927 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்த அனைத்து ரயில்வே நிறுவனத்தினரும் ரயில்வே துறையின் நிதிச் சுமையைக் குறைப்பதற்காக தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வது என்று ஒரு முடிவை எடுத்தனர். முதலாளிகளின் இந்த முடிவினால் தொழிலாளர்கள் அனைவரையும் போராட்டத்திற்கு அழைத்தனர். பெங்கால்- நாக்பூர் ரயில்வே ஊழியர்கள் கரக்பூரில் பிப்ரவரி 10, 1927 அன்று போராட்டத்தை நடத்தினர். லிலூஃகில் மார்ச் மாதம் 1928 இல் போராட்டத்தை நடத்தினார்.[1]
1928 ஆண்டு காலகட்டத்தில் பொதுவாகவே தென்னிந்திய ரயில்வே ஊழியர்களுக்கு அதிக வேலைநேரம், குறைவான கூலி மற்றும் ஊழியர்களிடையே இனப்பாகுபாடு பார்ப்பது ஆகியவற்றால் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் மீது அதிருப்தி இருந்தது. அதே நேரத்தில் தென்னிந்திய ரயில்வே நிறுவனம் 3100 பணியாளர்களை பணிநீக்கம் செய்துவிட்டு அவர்களுக்கு பதிலாக புதிய இயந்திரங்களை வாங்க முடிவெடுத்து. இதற்காக போத்தனூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி ஆகிய மூன்று இடங்களில் பட்டறையை நிறுவியது.[1] போராட்டக்காரர்கள் நிதிச்சுமைக்காக பணி நீக்கம் செய்வது இரண்டாம் பட்ச காரணம் மட்டுமே, இதற்குண்டான முதல் காரணம் போராளிகளை ரயில்வே கூட்டமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பதே ஆகும் என்று கூறினர். மதராஸ் அரசும் அதிகாரபூர்வமாக தொழிலாளர் கூட்டமைப்பினுடன் தொடர்பு வைத்துள்ள அனைத்து தொழிலாளர்களும் நீக்கப்படுவார் என்று அறிவித்தது.
ஜூன் 28, 1928 அன்று தென்னிந்திய ரயில்வே கூட்டமைப்பின் மத்திய குழு ஒன்று, நிறுவனத்தின் மேலாண்மை ஊழியர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றைத் தந்தியாக அனுப்பியது. அந்தத் தந்தியில் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதற்காக விடப்பட்ட சுற்றறிக்கை எண் 202ஐ திரும்பப் பெற வேண்டுமென்றும், அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஊதிய உயர்வை மறுத்த மேலாளர்கள், பணி நீக்கம் என்பது அரசால் முடிவு செய்யப்பட்டது என்றும் கூறினர். ஜூன் 29, 1928 அன்று கிட்டத்தட்ட எட்டாயிரம் தென்னிந்திய ரயில்வே துறையைச் சேர்ந்த பணியாளர்கள் நாகப்பட்டினம், போத்தனூர், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் வேலைநிறுத்தத்தை தொடங்கினர். தொழிலாளர்கள் 25 சதவீத ஊதிய உயர்வு வேண்டும் என்றும், குறைந்தபட்சக் கூலியை ரூபாய் 30 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், சுற்றறிக்கை எண் 202ஐ திரும்ப பெறவேண்டும் என்றும் கோரிக்கையை வைத்தனர். இதனால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. போராட்டத்தினை கூட்டமைப்பைச் சேர்ந்த சில தலைவர்களும் எதிர்க்கத் தொடங்கினர். அதில் முக்கியமானவர் இந்திய ரயில்வே இதழின் தொகுப்பாளரான எஸ்வி ஐயர். இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்து போராட்டக்காரர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் கலந்து கொண்டனர். ஜூலை 6,1928 முதல் 9 ஜூலை, 1928 வரை போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. திருச்சிராப்பள்ளியில் இருக்கும் காய்கறி மற்றும் பழக்கடை உரிமையாளர்கள் ரயில்வே தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக ஜூலை ஆறாம் திகதி கடையடைப்பு செய்தனர். மூவாயிரம் தொழிலாளர்கள் திருச்சிராப்பள்ளி மாநகருக்குள் ஊர்வலம் சென்றனர். ஜூலை 9 ஆம் திகதிக்கு பிறகு நிலைமை சிறிது கட்டுக்குள் வந்தது. தொழிலாளர்களுடன் மேலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவிய நிலையில் ஜூலை 19 ஆம் திகதி முதல் இன்னும் வீரியமாக போராட்டம் நடைபெறத் தொடங்கியது. ரயில்வே ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் போராட்டங்கள் நடைபெறத் தொடங்கின. போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 63 பேர் கைது செய்யப்பட்டனர். பன்ருட்டி, விக்கிரவாண்டி ஆகிய இடங்களில் பலர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரத்தில் தொழிலாளர்கள் சத்தியாகிரக போராட்டங்களும் நடத்தினர்.
முதன்மைக் கட்டுரை : தென் இந்திய ரயில்வே சதி வழக்கு
இப் போராட்டங்களைத் தொடர்ந்து ஆங்கிலேய ஆட்சியாளர்களால் பொதுவுடைமைத் தலைவர்கள் மீது புணையப்பட்ட வழக்கு , தென் இந்திய ரயில்வே சதி வழக்கு என பரவலாக அழைக்கப்படுகிறது .பதினெட்டு நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120- பி மற்றும் ரயில்வே சட்டத்தின் 126 மற்றும் 128 பிரிவுகளின் கீழ் கிரிமினல் சதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.டி.கிருஷ்ணசாமி, ம.சிங்காரவேலர், முகுந்தலால் சர்க்கார் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். ஆங்கிலேய ஆட்சியின் உளவுத்துறை கம்யூனிஸ்ட்டுகளே இப்போராட்டத்தின் பின்னால் இருந்து இயக்குவதாகவும்; ஆட்சியைக் கவிழ்க்கும் சதியின் ஒரு பகுதி என்றும் குற்றம்சாட்டியது.[2]
போராட்டம் அரசால் ஒடுக்கப்பட்டது. ஆயிரம் தொழிலாளர்கள் மாயவரத்தில் ரயிலை நிறுத்தினர்.அதனால் போலீசார் 9 தொழிலாளர்களை கைது செய்தனர். மேலும் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். பல இடங்களில் பல தொழிலாளர்கள் போலீசாரால் தொடர்ந்து கொலை செய்யப்பட்டனர். அதனால் ஜூலை 30 ஆம் திகதி எல்லா ஊர்களிலும் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தினை தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் பொருளாளரான பிள்ளை திரும்பப் பெற்றார். ஆகத்து 2 , 1928 அன்று தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாகத் தடை செய்யப்பட்டது.