இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1974
|
|
|
|
|
இந்தியக் குடியரசின் ஆறாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1974 ல் நடைபெற்றது. பக்ருதின் அலி அகமது வெற்றிபெற்று குடியரசுத் தலைவரானார்
ஆகஸ்ட் 17, 1974ல் இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. முந்தைய தேர்தல்களில் சிறிதளவு கூட வெற்றி வாய்ப்பு இல்லாத பல வேட்பாளர்கள் போட்டியிட்டு வந்தனர். அப்படி போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்கள் தேர்தலின் முடிவினை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து அரசின் நேரத்தையும் வீணடித்து வந்தனர். இப்போக்கினைக் கட்டுப்படுத்த இவ்வாண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டம், 1952ல் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இத்திருத்ததின் படி, ஒருவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட அவரை 10 வாக்காளர் குழு உறுப்பினர்கள் முன் மொழிய வேண்டும், மேலும் 10 பேர் பின்மொழிய வேண்டும். வைப்புத் தொகையாக ரூ. 2500 கட்ட வேண்டும். தேர்தல் முடிவினை எதிர்த்து வழக்குத் தொடுப்பதாக இருந்தால் உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே தொடரலாம். இக்கட்டுப்பாடுகளால் சுயேட்சை உறுப்பினர்களால் இத்தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. இரு வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டனர். மேலும் 1971 நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் புனரமைக்கப்பட்டிருந்ததால் வாக்காளர் குழுவின் எண்ணிக்கை இத்தேர்தலில் அதிகரித்திருந்தது.
இந்திய தேசிய காங்கிரசு தலைவர் இந்திரா காந்தி பக்ரூதின் அலி அகமதை தன் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தார். அகமதை எதிர்த்து எட்டு எதிர்க்கட்சிகள் இணைந்து புரட்சிகர சோசலிசக் கட்சியின் திரிதீப் சவுதிரியை நிறுத்தின. அகமது தேர்தலில் 80.1% வாக்குகள் பெற்று எளிதில் வெற்றி பெற்றார்.
ஆதாரம்:[1][2]