2014 அமைதிக்கான நோபல் பரிசு | |
---|---|
இணைந்து நோபல் பரிசு பெற்ற, கைலாசு சத்தியார்த்தி (இடது) மற்றும் மலாலா யூசப்சையி (வலது) | |
விருது வழங்குவதற்கான காரணம் | அமைதிக்காக சிறப்பாக பங்காற்றியவர்களை கவுரவிக்கும் பரிசு |
தேதி | 10 அக்டோபர் 2014 |
இடம் | ஒசுலோ |
நாடு | நார்வே |
வழங்குபவர் | நார்வே நோபல் பரிசுக் குழு |
வெகுமதி(கள்) | 8 மில்லியன் SEK ($1.25M, €0.9M) |
முதலில் வழங்கப்பட்டது | 1901 |
இணையதளம் | www |
2014 அமைதிக்கான நோபல் பரிசு (2014 Nobel Peace Prize), கைலாசு சத்யார்த்தி மற்றும் மலாலா யூசுப்சையி ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. "குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் அனைத்து குழந்தைகளின் கல்வி உரிமைக்காக" போராடியதற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.[1] சத்யார்த்தி இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் அன்னை தெரசாவுக்குப் பிறகு இந்திய நாட்டிலிருந்து நோபல் பரிசை வென்ற ஏழாவது நபர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இரண்டாவது நபர் ஆவார். யூசுப்சையி பாக்கித்தானைச் சேர்ந்த இசுலாமியர் ஆவார். இவர் அப்துஸ் சலாமுக்குப் பிறகு இவரது நாட்டிலிருந்து இரண்டாவது நோபல் பரிசு வென்றவர் ஆவார். நோபல் பரிசை வென்ற நாற்பத்து ஏழாவது பெண், 17 வயதில் நோபல் பரிசைப் பெற்றவர் என்பதால், அனைத்து துறையிலும் நோபல் பரிசை வென்றவர்களில் இளையவர் என்ற பெருமையும் பெறுகின்றார்.
செய்திக் குறிப்பு ஒன்றில், தேர்வுக் குழு, இந்த விருதானது இந்து மற்றும் முசுலீம் மற்றும் இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர் இணையினை வேண்டுமென்றே தேர்ந்தெடுத்ததாகச் சுட்டிக்காட்டியது. ஏனெனில் இவர்கள் "கல்வி மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான பொதுவான போராட்டத்தில் ஒன்று சேருகிறார்கள்" எனத் தெரிவித்தது. "நாடுகளுக்கு இடையே சகோதரத்துவம்" ஆல்பிரட் நோபல் வகுத்த அளவுகோல்களில் ஒன்றாகும் என்றும் தேர்வுக்குழுவினர் வலியுறுத்திக் கூறினார்கள்.[2]
குழந்தைத் தொழிலாளர் மற்றும் பெண் கல்விக்கு எதிரான பாகுபாடு ஆகியவை விருதுக்கான சான்றாக இருந்தது. 2014ஆம் ஆண்டு நிலவரப்படி 168 மில்லியன் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர். இந்தியாவில் மட்டும் 60 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். இதை தோர்ப்ஜோர்ன் ஜக்லாண்ட் தனது ஒப்படைப்பு விழா உரையில் குறிப்பிட்டார்.
நோபல் பரிசுக் குழு, 2013-ல் 259 ஆக இருந்த அமைதிப் பரிசுக்கான பரிந்துரைகள் 2014ஆம் ஆண்டு 279 ஆக இருந்தது. இவற்றில் 47 பரிந்துரைகள் அமைப்புகளின் சார்பில் வந்தவை.[3]
அறிவிப்புக்கு முன், பல செய்தி ஊடகங்கள் இந்த ஆண்டு யார் வெற்றி பெறுவார்கள் என்று ஊகித்து, பிடித்தவைகளின் பட்டியலை வெளியிட்டன. திருத்தந்தை பிரான்சிசு,[4][5][6] பான் கி மூன்,[5] பிராட்லி மானிங்,[4] டெனிசு முக்வேகி,[5][4][6] எட்வேர்ட் சுனோவ்டன்,[5][4] ஆகியோர் இப்பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்டனர்.[6] மேலும் ஒசே முகிக்கா,[5] நோவாயா கெசட் நாளிதழ்,[5][6] மற்றும் கட்டுரை 9ஐப் பாதுகாக்கும் ஜப்பானியர்கள்[5][6] இவர்களுடன் வெற்றி பெற்ற மலாலா யூசுப்சையி[4][5][6] கைலாசு சத்யார்த்தி பெயர்களும் இடம் பெற்றிருந்தது.