2016 மகாமகம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிப்ரவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 22 வரை கொண்டாடப்பட்டது. [1] 22 பிப்ரவரி 2016 நிறைவு நாளன்று சூரியன் கும்ப ராசியிலும், குரு சிம்ம ராசியிலும் வரும்போது பௌர்ணமி திதியில் மாசி மாத மக நட்சத்திரம் அன்று இடப லக்னத்தில் சேரும் புனித நாளில் நடைபெற்ற தீர்த்தவாரியில் பக்தர்கள் கலந்துகொண்டு மகாமகக்குளத்தில் புனித நீராடினர்.
12 ஆண்டுகளுக்கொரு முறையும், சில சமயங்களில் 11 ஆண்டுகளுக்கொரு முறையும் வருகின்ற மகாமகம் இம்முறை கொண்டாடப்பட்டபோது தினமும் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பக்தர்கள் நீராட அனுமதிக்கப்பட்டனர்.[2] இவ்விழாவினை கடந்த ஆண்டு மகத்தின் முதல் க்தர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருந்தனர். இந்த மகாமகத்திற்காக பல கோயில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றன. தொடர்ந்து பந்தக்கால் முகூர்த்தம், கொடியேற்றம், தேரோட்டம், தீர்த்தவாரி என கும்பகோணம் விழாக்கோலத்தோடு காணப்பட்டது. பிப்ரவரி 21, 22 ஆகிய இரு நாள்களிலும் அனைத்துக் கோயில்களும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருந்தன. இவ்விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு 22 பிப்ரவரி 2016 அன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. [3] 23 பிப்ரவரி 2016 அன்று இவ்விழா நிறைவுற்றது. விழா நிறைவுற்ற பின்னரும் பக்தர்கள் தொடர்ந்து நீராடினர். 28 பிப்ரவரி 2016இல் ஐந்து லட்சம் பக்தர்களும், [4] 6 மார்ச் 2016இல் மூன்று பக்தர்களும் நீராடினர். [5]
ஒவ்வொரு மகாமகத்தின்போது அதற்கு முதல் ஆண்டு இளைய மகாமக ஆண்டாக கருதப்படும் நிலையில் 2015ஆம் ஆண்டு இளைய மகாமகம் நடைபெற்றது.[கு 1] இளைய மகாமகத்தின்போது சிவன் கோயில்களில் 23 பிப்ரவரி 2015ஆம் நாளும், வைணவக்கோயில்களில் 24 பிப்ரவரி 2015ஆம் நாளும் கொடியேற்றம் நடைபெற்றன. 3 மார்ச் 2015 அன்று சிவன் கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது. 4 மார்ச் 2015 அன்று தீர்த்தவாரி நடைபெற்றது. 6 முதல் 8 மார்ச் 2015 வரை சிவன் கோயில்களிலும் வைணவக்கோயில்களிலும் விடையாற்றி நடைபெற்றது.
மகாமகத்திற்காகத் தீர்த்தவாரி கொடுக்கும் சைவக் கோயில்களான காசி விஸ்வநாதர் கோயில் (9 பிப்ரவரி 2014), கும்பேஸ்வரர் கோயில் (5 சூன் 2009), நாகேஸ்வரர் கோயில் (29 நவம்பர் 2015), சோமேஸ்வரர் கோயில் (2 நவம்பர் 2015), கோடீஸ்வரர் கோயில் (26 அக்டோபர் 2015), காளஹஸ்தீஸ்வரர் கோயில்(26 அக்டோபர் 2015), கௌதமேஸ்வரர் கோயில் (9 செப்டம்பர் 2015), அமிர்தகலசநாதர் கோயில் (22 அக்டோபர் 2015), பாணபுரீஸ்வரர் கோயில் (22 அக்டோபர் 2015), அபிமுகேஸ்வரர் கோயில் (26 அக்டோபர் 2015), கம்பட்ட விஸ்வநாதர் கோயில் (26 அக்டோபர் 2015), ஏகாம்பரேஸ்வரர் கோயில் (22 அக்டோபர் 2015) ஆகிய கோயில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றன. இக்கோயில்களில் பெரும்பாலான கோயில்களில் 2015இல் குடமுழுக்கு நடைபெற்றது. இரு கோயில்களில் முன்னரே நடைபெற்றன. அவ்வாறே காவிரியாற்றில் தீர்த்தவாரி காணும் சார்ங்கபாணி கோயில் (13 சூலை 2015), சக்கரபாணி கோயில் (8 நவம்பர் 2015), இராமஸ்வாமி கோயில் (9 செப்டம்பர் 2015), ராஜகோபாலஸ்வாமி கோயில் (19 சூன் 2015), வராகப்பெருமாள் கோயில் (26 அக்டோபர் 2015) ஐந்து வைணவக்கோயில்களிலும் 2015இல் குடமுழுக்கு நடைபெற்றன.
மகாமகம் தொடர்பான கோயில்களில் 24 ஜனவரி 2016 அன்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. [6] [7] மகாமக குளத்தில் அமிர்த நீரைக் கலக்கின்ற நிகழ்ச்சியும் [7] மகாமகக்குளத்துக்குத் தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சியும் 12 பிப்ரவரி 2016 அன்று நடைபெற்றது. [8] நெரிசலைத் தவிர்ப்பதற்காக கொடியேற்றத்துக்கு முன்பே 13 பிப்ரவரி 2016 காலை 6.00 மணி முதல் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர். [9] பக்தர்கள் 24 மணி நேரமும் நீராட ஏற்பாடு செய்யப்பட்டதால் மன நிறைவாக நீராடினர். [10] ஒவ்வொரு மகாமகத்தின் நடைபெறும் சீனிவாச மகோற்சவம் இந்த மகாமகத்தின்போது மகாமகக் குளக்கரையில் நடைபெற்றது.[11] 40 நாட்களில் சுமார் 45 லட்சம் பேர் பங்குகொண்ட மகாமகம் நிறைவாக முடிந்தது. [12]
சிவன் கோயில்களில் 13 பிப்ரவரி 2016 அன்றும், [13] வைணவக் கோயில்களில் 14 பிப்ரவரி 2016 அன்றும் கொடியேற்றம் நடைபெற்றது. [13] [14]கும்பேஸ்வரர், நாகேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர் கோயில்களில் 10 நாள்கள் பிரம்மோத்சவமாகவும் பிற ஆறு கோயில்களில் ஏக தின உற்சவமாகவும் விழா நடைபெற்றது.[2]
அபிமுகேஸ்வரர் கோயிலிலும், நாகேஸ்வரர் கோயிலிலும் 21 பிப்ரவரி 2016 அன்றும் கும்பேஸ்வரர் கோயிலில் 22 பிப்ரவரி 2016 அன்றும் தேரோட்டம் நடைபெறவுள்ளது. கும்பேஸ்வரர் கோவிலின் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் தேர்களின் வெள்ளோட்டம் 12 பிப்ரவரி 2016 அன்று நடைபெற்றது. [15]நான்கு மகாமகங்களுக்குப் பிறகு கும்பேஸ்வரர் கோயிலில் ஐந்து தேர்களின் தேரோட்டம் நடைபெற்றது.[16] [17] காசி விஸ்வநாதர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் தேரோட்டம் 21 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. [18]
தீர்த்தவாரிக்கான ஒத்திகை 6 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. [19] சிவன் கோயில்களின் தீர்த்தவாரி 22 பிப்ரவரி 2016 காலை 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் மகாமகக்குளத்தில் நடைபெற்றது. காவிரிக்கரையிலுள்ள தீர்த்தவாரி மண்டபங்கள் சீரமைக்கப்பட்டு அங்கு வைணவக் கோயில்களின் தீர்த்தவாரி நடைபெற்றது. [20] தீர்த்தவாரியின்போது 12 சிவன் கோயில்களின் உற்சவமூர்த்திகள் காளை வாகனத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து மகாமகக்குளத்தில் அஸ்திரதேவர்கள் எழுந்தருள சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. அவ்வாறே ஐந்து வைணவக்கோயில்களின் சுவாமிகள் சக்கரப்படித்துறை அருகேயுள்ள சார்ங்கபாணி தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அஸ்திரதேவர்கள் எழுந்தருள, தீர்த்தவாரி நடைபெற்றது.[21]
தமிழக அரசின் பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறையினரும் திட்டமிட்டு முழுமூச்சாக ஈடுபட்டனர். பக்தர்களின் வசதிக்காக கும்பகோணம் நகரத்தில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. விழாவின் முன்னோட்டமாக சிறப்பு அடையாள சின்னம் (லோகோ) வெளியிடப்பட்டது. [22] மகாமகம் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.[23][24] தொடர்ந்து பிற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அனைத்து வசதிகளும் பக்தர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தன. விழா முடிவடைந்த பின்னரும் சில நாள்களுக்கு காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நீராட அனுமதிக்கப்பட்டனர். [25]
பக்தர்கள் 13 பிப்ரவரி 2016 முதல் நீராட அனுமதிக்கப்பட்டனர். மகாமகக்குளம் 6 பிரிவாகப் பிரிக்கப்பட்டு, குளத்தில் கிழக்கு கரை வழியாக இறங்கி, மேற்கு கரை வழியாகச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. [26] மகாமக தீர்த்தம், கும்பகோணத்தில் உள்ள 12 தீர்த்தவாரி சிவன் கோயில்கள் மற்றும் 5 தீர்த்தவாரி வைணவக் கோயில்களின் விபூதி, குங்குமம், கற்கண்டு, கும்பகோணம் கோயில்களைப் பற்றிய வரலாற்று நூல் ஆகியவற்றைக் கொண்ட தீர்த்தப் பிரசாதத்தை நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ பெற ஏற்பாடு செய்யப்பட்டது. [27]
பாதுகாப்புப்பணியில் 26,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். [28] 36 இடங்களில் தற்காலிகக் காவல் நிலையங்கள் [29] ரயில்வே பாதுகாப்புப் போலீஸார் 1,000 பேர், இருப்புப் பாதை போலீஸார் 2,000 [30] 300 கமாண்டோக்கள் உள்பட 1,200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். [31] மனித வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தீவிர சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. [32]இரு சக்கர வாகனங்களுக்கு தடையில்லை, குடியிருப்போருக்கு அனுமதிச்சீட்டு, 120 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் [33] கூட்டத்தைக் கண்காணிக்க ஐந்து கேமராக்கள், வருவோரைக் கணக்கிட நவீன கருவி [34][35]400 கேமராக்கள்மூலமாக கூட்டம் நெறிப்படுத்தப்படல் [36]
ரயில்வே நிலையத்தில் கூடுதலாக 20 டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டன. 22 புதிய சிறப்பு ரயில்கள் இயங்கின. [30]போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நகருக்குள் லாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. [37]மாற்றுத் திறனாளிகளையும், முதியோரையும் அழைத்து வர 100 இலவசப் பேருந்துகள் [31]
137 இடங்களில் மருத்துவ முகாம்களும், 20 இடங்களில் உயர்நிலை மருத்துவ மையங்களும் அமைக்கப்பட்டன. ஆம்புலன்ஸ்கள் சென்று வரத் தனிப் பாதை அமைக்கப்பட்டது.[31] 44 இடங்களில் இலவச மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன.[38] 108 ஆம்புலன்ஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.[39]
ஐந்து இடங்களில் கலை விழாக்கள் நடைபெற்றன.[40]13 பிப்ரவரி 2016 முதல் நகர மேநிலைப்பள்ளி மைதானத்தில் அரசுப்பொருட்காட்சி நடைபெற்றது. [41] நூற்கண்காட்சி 20 பிப்ரவரி 2016 முதல் தொடங்கி நடைபெற்றது.[42]
முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக 4 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டன. [20] தன்முதலாக வைஃபை வசதி, ஹாட் ஸ்பாட் வசதி, தடையில்லா செல்லிடப்பேசி மற்றும் இணைய சேவை மற்றும் 12 இடங்களில் தொலைதொடர்பு சேவை மையங்கள் அமைக்கப்பட்டன. [20] கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதி செய்யப்பட்டது. [43] மீன் கடைகளுக்கு 22 பிப்ரவரி 2016 வரையும், [44] மதுக்கடைகளுக்கு 20 பிப்ரவரி முதல் மூன்று நாள்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. [45] மகாமகக்குளத்தில் 15 நிமிடங்களுக்கொரு முறை நீர்ப்பகுப்பாய்வு செய்யப்பட்டது. [46] பிளாஸ்டிக்கைத் தவிர்க்க 20 இலட்சம் துணிப்பைகள் வழங்கப்பட்டன. நடமாடும் எடிஎம் வசதி செய்துதரப்பட்டது. 6 இடங்களில் உடை மாற்றும் வசதி செய்துதரப்பட்டது. [47] [48] தீர்த்தவாரியன்று 16 இலட்சம் குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன. [49]
பக்தர்களை வரவேற்க சிறப்பு அஞ்சல் அட்டை, [50] விழா நினைவாக மகாமக சிறப்பு அஞ்சல் உறை [51] தீர்த்தவாரி காணும் 12 சைவக்கோயில்கள்மற்றும் ஐந்து வைணவக்கோயில்களின் உற்சவமூர்த்திகளின் புகைப்படங்கள் கொண்ட காலண்டர்கள் வெளியிடப்பட்டன.[52][53]
மகாமகத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தின் சார்பில் 260 பக்கங்கள் கொண்ட சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. மகாமகம் பற்றிய கட்டுரைகள், கவிதைகள் போன்றவை இம்மலரில் இடம்பெற்றுள்ளன.[54] [55] தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு மலர் 19 பிப்ரவரி 2016இல் வெளியிடப்பட்டது. இம்மலரில் மகாமகம், மகாமகக் குளம், கும்பகோணம் நகரைச்சுற்றியுள்ள கோயில்கள், சமயம் என்ற பல தலைப்புகளில் கட்டுரைகள் அரிய புகைப்படங்களுடன் காணப்படுகின்றன. [56]