2022 மிரான்சா தற்கொலை குண்டுவெடிப்பு (2022 Miranshah suicide bombing) பாக்கித்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணம் வடக்கு வசீரிசுதான் நகரத்தில் நடந்த ஒரு தாக்குதலைக் குறிக்கிறது. 2022 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் நடைபெற்ற இத்தாக்குதலில் மூன்று பாக்கித்தானிய இராணுவ வீரர்களும் மூன்று குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.[1] பாக்பட்டன் நகரத்தைச் சேர்ந்த 33 வயதான லான்சு அவில்தார் சுபைர் காதர், அரிபூரைச் சேர்ந்த 21 வயதான சிப்பாய் உசைர் அசுபர் மற்றும் முல்தானைச் சேர்ந்த 22 வயதான சிப்பாய் காசிம் மக்சூத் ஆகியோர் இத்தாக்குதலில் உயிர் இழந்த இராணுவ வீரர்கள் என பாக்கித்தானிய இராணுவத்தின் ஊடக விவகாரப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர்.[2] மேலும் இத்தாக்குதலில் 11 வயது, எட்டு வயது மற்றும் நான்கு வயது குழந்தைகளும் இறந்து போனதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.[3]
பாக்கித்தானிய உளவுத்துறை அமைப்புகள் தற்கொலை குண்டுதாரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பற்றி அறிய விசாரணை நடத்தினர்.[4]
தற்கொலைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் சேபாசு செரீப், "அப்பாவி குழந்தைகளைக் கொன்றவர்கள் இசுலாம் மற்றும் மனிதநேயம் இரண்டிற்கும் எதிரிகள்" என்று குறிப்பிட்டுள்ளார். இழந்த உயிர்கள் குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.[5] சர்கில் மேமனும் இந்தத் தாக்குதலைக் கண்டித்து பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.[6]