24-மணி நேர ஓட்டம் (A 24-hour run) என்பது மாரத்தான் ஓட்டப்பந்தய தொலைவுக்கும் அதிகமான தொலைவைக் கடந்து ஓடும் ஓட்டமாகும். இப்போட்டியில் 24 மணி நேரத்திற்கு ஓட்டக்காரர்களால் எவ்வளவு தூரம் ஓடமுடியுமோ அவ்வளவு தூரம் ஒட முயற்சிக்கிறார்கள். குறிப்பாக இப்பந்தயம் 1 முதல் 2 மைல் நீளமுள்ள (1.6 கிலோமீட்டர் முதல் 3.2 கிலோமீட்டர்) வளையத் தடங்களில் நடத்தப்படுகிறது[1]. சில சமயங்களில் 400 மீட்டர் (0.25 மைல்) நீளமுள்ள ஓடுகளத்திலும் இப்போட்டியை நடத்துகிறார்கள். சில போட்டிகள் சாலைகளிலும் நகரப்பூங்காக்களின் நடைபாதைகளிலும் நடத்தப்படுகின்றன.
முன்னணி ஓட்டக்காரர்கள் பெரும்பாலும் 124 மைல் தொலைவை (200 கிலோமீட்டர்) அல்லது அதற்கும் அதிகமான தொலைவை ஓடி முடிக்கிறார்கள். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 168 மைல் (270 கிலோமீட்டர்) தொலைவு மாரத்தான் ஓடுவது மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது. சில பங்கேற்பாளர்களுக்கு உதவுவதற்காக குழுவும் இருப்பதுண்டு. மற்றவர்கள் தேவையான கருவிகளுடன் தொடக்கப் புள்ளிக்கு அருகில் முகாமை அமைத்து ஒவ்வொரு வளையத்தை ஓடி முடிக்கும்போதும் ஓட்டக்காரர்களின் நல்ல முன்னேற்றத்திற்கு உதவிபுரிகின்றனர். பெரும்பாலும் 24 மணி நேர ஒட்டப்பந்தயத்தை 6-, 12-, மற்றும் 48 மணிநேர ஓட்டங்களுடன் இணைத்து நடத்துகிறார்கள். அஞ்சல் ஓட்டம் நடைமுறையிலும் இந்த 24 மணி நேர ஒட்டப்பந்தயம் நடக்கிறது. குழுவில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு மைல் தூரத்தை அடுத்தடுத்து 24 மணிநேரத்திற்கும் ஓட்டக்காரர்கள் ஓடுகிறார்கள். அனைத்துலக அளவில் இவ்வோட்டம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் அறக்கட்டளை பயன்பாடுகளுக்காக இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது[2]. 2017 ஆம் ஆண்டில் போலந்து நாட்டைச் சேர்ந்த பேட்ரிச்யா பெரசுனோவ்சுகா 258.339 கிலோமீட்டர் (160.524 மைல்) தொலைவு ஓடியதே பெண்களுக்கான உலக சாதனையாகவும், 1997 ஆம் ஆண்டில் யியானிசு கௌரோசு 303.506 கிலோமீட்டர் (188.590 மைல்) தொலைவு ஓடியதே ஆண்களுக்கான உலக சாதனையாகவும் உள்ளன.
இங்கிலாந்து நாட்டின் மில்டன் கெயின்சில் 1990 பிப்ரவரி 3, 4 தேதிகளில் முதலாவது அனைத்துலக வெற்றியாளர் போட்டி நடத்தப்பட்டது. கண்டம் முழுமைக்குமான அனைத்துலக தடகள ஒன்றிய 24- மணி நேர ஐரோப்பிய போட்டி 1992 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது[3].
அனைத்துலக தடகள ஒன்றிய 24- மணி நேர மணி நேர உலக வெற்றியாளர் போட்டியே இந்த 24 மணிநேர ஓட்டப் போட்டியில் உச்சக்கட்டமான போட்டியாகக் கருதப்படுகிறது. இவ்வொன்றியத்தின் முதல் தனிநபர் தடகளப் போட்டி 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-23 தேதிகளில் இத்தாலி நாட்டின் வெரோனாவின் சான் கியோவானி லூபடோடோவில் இப்போட்டி நடத்தப்பட்டது[4].
2012 ஆம் ஆண்டில் மட்டும் 160 முறை 24 மணி நேர ஓட்டப்போட்டிகள் நடைபெற்றதாக செருமானிய இணையதளம் தெரிவிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்ககாக உயர்ந்ததாக அறியப்படுகிறது. கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் 1981 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் 24 மணி நேர ஓட்டப்போட்டியே மிகநீண்ட காலமாகத் தொடர்ந்து நடத்தப்படும் போட்டியாகக் கருதப்படுகிறது[5].
ஆங்காங்கிலும் 24 மணி நேர ஓட்டப்போட்டிகள் 2010 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் இளைஞர்களுக்காக நடத்தப்படுகிறது.