பேராசிரியர் ஏ. ஜெயரத்தினம் வில்சன் A. Jeyaratnam Wilson | |
---|---|
பிறப்பு | 1928 |
இறப்பு | 31 மே 2000 (அகவை 71–72) ரொறன்ரோ, கனடா |
இனம் | இலங்கைத் தமிழர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கொழும்பு றோயல் கல்லூரி இலண்டன் பொருளியல் பள்ளி |
பெற்றோர் | கே. ஆர். வில்சன் |
வாழ்க்கைத் துணை | சுசிலி செல்வநாயகம் |
பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் (Alfred Jeyaratnam Wilson, 1928 - 31 மே 2005) இலங்கைத் தமிழ் கல்விமானும், வரலாற்றாளரும், எழுத்தாளரும் ஆவார். இலங்கைப் பல்கலைக்கழகம், நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றியவர்.
அல்பிரட் வில்சன் 1928 ஆம் ஆண்டில் கே. ஆர். வில்சன் என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.[1] கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றார்..[2] இளங்கலைப் பட்டத்தை (இலங்கைப் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தை இலண்டன் பொருளியல் பள்ளியிலும் பெற்றார்.[3]
வில்சன் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் மகள் சுசிலி என்பவரைத் திருமணம் புரிந்தார்[3][4] இவர்களுக்கு மல்லிகா, மைதிலி, குமணன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.[1]
வில்சன் "சிலோன் டெய்லி நியூஸ்" பத்திரிகையில் சில காலம் பணியாற்றினார்.[5] பின்னர் 1952 முதல் 1972 வரை 20 ஆண்டுகள் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[5] 1969 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறை ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதல் தலைவராக ஏ. ஜெ. வில்சன் நியமிக்கப்பட்டார்.[6] 1970 முதல் 1994 வரை கனடாவின் நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தின் ஃபிரெடெரிக்டன் வளாகத்தில் அரசியல் அறிவியலில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[7] இளைப்பாறிய பின்னர் அதே பல்கலைக்கழ்கத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார்.[3]
1978 முதல் 1983 வரை இலங்கை சனாதிபதி, ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கு அரசமைப்புச் சட்டத்தில் ஆலோசகராக இருந்தார்.[8] அமெரிக்க அரசத் திணைக்களத்தில் தெற்காசியாவுக்கான ஆலோசகராகவும் பணியாற்றியிருந்தார்.[7] கனடியப் பன்னாட்டு அபிவிருத்தி ஆணையம், கனடிய அகதிகளுக்கான ஆலோசனைச் சபை, அமெரிக்காவின் பல்கலாசார அமைச்சு, மற்றும் குடிவரவுத் தீர்ப்பாயம் ஆகியவற்றிலும் பணியாற்றினார்.[7]
வில்சன் 2000 மே 31 இல் ரொறன்ரோவில் தனது 71வது அகவையில் காலமானார்.[1][4][7]
வில்சன் எட்டு நூல்களையும், நூற்றுக்கும் அதிகமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்[2][7]