அசோகமித்திரன் (செப்டம்பர் 22, 1931-மார்ச்சு 23,2017) தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்குப் பிறகு தனது 21-ஆம் வயதில் சென்னைக்குக் குடியேறினார் [1] . இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது . தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதிவந்த அசோகமித்திரன், ஐக்கிய அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.
1996-இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஐதராபாத்தைக் கதைக்களமாகக் கொண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துகளை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்து உண்டு.இவர் 2017 மார்ச்சு 23 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள தன் மகன் வீட்டில் 86 ஆம் அகவையில் இறந்தார்.
அசோகமித்திரன் 1957-ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கினார். இவர் எழுதிய நாடகத்தின் முடிவு என்னும் சிறுகதை முதன்முறையாக கலைமகள் இதழில் 1957 ஆம் ஆண்டில் அச்சேறியது.
9 நாவல்கள் 16 சிறுகதைத் தொகுப்புகள் 2 குறுநாவல் தொகுப்புகள் 14 கட்டுரைத் தொகுப்புகள் 3 மொழிபெயர்ப்பு நூல்கள் 1 ஆங்கில நூல்
கரைந்த நிழல்கள் (* திரைப்பட நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது.) 1969 (தீபம் மாத இதழில் வெளிவந்த தொடர்); இ.பதி. 1977; மூ.பதி. 1985, அன்னம், சிவகங்கை, பக்.156.
தண்ணீர்; சென்னை கிறித்துவ இலக்கியச் சங்கம்; 1973
18-வது அட்சக்கோடு; 1975; கலைஞன் பதிப்பகம், சென்னை. பக்.268 (கணையாழியில் வெளிவந்த தொடர்) [2] (செகந்தராபாத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல், தேசப் பிரிவினை சமயத்தில் அங்கு இந்து - முஸ்லீம் இடையே நடந்த கலவரங்களை மையமாகக் கொண்டது.)
இவருக்குப் பல தகைமைகளும் விருதுகளும் கிடைத்துள்ளன. அவற்றில் சில:-
இவருக்குத் தமிழ்நாடு அரசு பரிசுகள் மும்முறையும் இலக்கியச் சிந்தனை விருதுகள் 1977 இலும் 1984 இலும் இருமுறையும் கிடைத்தன.
இவருக்கு இந்திய இலக்கியத்தை ஒப்பீடு செய்யும் ஆய்வுக்கு கே.கே. பிர்லா நல்கை கிடைத்தது. மேலும் 1973–74 இல் அயோவா பல்கலைக்கழகத்தின் படைப்பிலக்கிய நல்கையும் கிடைத்தது.
லில்லி நினைவுப் பரிசு, 1992
இவருக்கு 1993 இல் இராமகிருஷ்ணா ஜெய்தயாள் அமைதி விருது டால்மியா அறக்கட்டளையால் தரப்பட்டது.[4]
அக்ட்சரா விருது, 1996.
இவரது அப்பாவின் சிநேகிதர் எனும் சிறுகதை தொகுப்புக்கு 1996-இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.[5]
2007 ஜனவரியில் எம்.ஜி.ஆர் விருது
இவர் 2012 மே மாதத்தில் என்.டி.ஆர். தேசிய இலக்கிய விருதை என்.டி.ஆர். அறிவியல் அறக்கட்டளையில் இருந்து பெற்றார்.[6]
2013 பிப்ரவரி 10 இல் சென்னையில் நடந்த விழாவொன்றில் தொடக்கநிலை க.நா.சு. விருது
2013 மார்ச்சு 30 இல் கொல்கத்தாவில் உள்ள பாரதீய பாஷா அறக்கட்டளையின் விருது