அசோக் குமார் | |
---|---|
பிறப்பு | அசோக் குமார் அகர்வால் சுமார் 1941 பிரித்தானிய இந்தியா, வடமேற்கு மாகாணங்கள் (தற்போது உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதி), அலகாபாத் |
இறப்பு | 22 அக்டோபர் 2014 (வயது 73) இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை |
பணி | ஒளிப்பதிவாளர், திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1969–2006 |
பிள்ளைகள் | 4 மகன்கள் |
விருதுகள் |
|
அசோக் குமார் அகர்வால் (சுமார் 1941 – 22 அக்டோபர் 2014) [1] என்பவர் ஓர் இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். குறிப்பாக இவர் தென்னிந்திய திரையுலகில் பணியாற்றினார். ஏறக்குறைய இவரது நான்கு தசாப்த திரைப்பட வாழ்க்கையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 125 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றினார். இவர் இந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ஐ.எஸ்.சி) உறுப்பினராக இருந்தார்.
அலகாபாத்தில் இந்தி கவிஞரான கேதார்நாத் அகர்வாலுக்கு பிறந்த அசோக் குமார் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஒளிப்படம் எடுத்தலில் பட்டயப் படிப்பு படித்தார். திரைப்படம் மீதான இவரது ஆர்வத்தினால் சென்னை அடயாறு, திரைப்பட தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் அசைபட ஒளிப்பதிவு படிப்பில் சேர்ந்தார். இந்த கல்லூரியிலிருந்து வந்த பின்னர், 1969 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான ஜன்மபூமி மூலம் திரைப்படத் துறையில் நுழைந்தார், இந்த படத்திற்காக இவருக்கு அந்த ஆண்டின் சிறந்த ஒளிப்பதிவுக்கான கேரள அரசு திரைப்பட விருது வழங்கப்பட்டது. 1970 களின் முற்பகுதியில் பி. என். மேனனுடனான இவரது தொடர்பு மலையாள திரையுலகில் இவரது இடத்தை உறுதிப்படுத்தியது. பாபு நந்தன்கோடு, ஜே. டி. தோட்டன், பரதன், என். சங்கரன் நாயர், இராமு கரியத் போன்ற பிற திரைப்பட படைப்பாளிகளுக்காகவும் பணியாற்றினார். மகேந்திரனின் உதிரிப்பூக்கள் (1979) படத்தின் வழியாக தமிழ்த் திரைப்படங்களில் இவருக்கு பெயர் கிடைத்ததது. மகேந்திரனுடன் அவரது பெரும்பாலான படங்களில் பணியாற்றினார.
அசோக் குமார் பல மாநில அரசு விருதுகளையும், சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றவர். தனது தொழில் வாழ்க்கையில், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பத்து திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவருக்கு திருமணமாகி இவரது மகன்களில் ஒருவரான ஆகாஷ் அகர்வால் தமிழ்த் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
அசோக் குமார் பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களின் அலகாபாத்தில் இந்தி கவிஞரான கேதார்நாத் அகர்வாலுக்கு பிறந்தார். இவரது குடும்பம் திரைப்படங்களுடன் தொடர்பு கொண்டதாக இல்லாவிட்டாலும் இவர் சிறுவயதிலிருந்தே திரைப்படங்கள் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஒளிப்படம் எடுத்தலில் பட்டயப் படிப்பு முடித்த பிறகு, திரைப்படத் துறையில் பணியாற்ற திரைப்படக் கல்லூரியில் சேர முடிவு செய்தார். இவரது முடிவுக்கு இவரது குடும்பத்தினர் துவக்கத்தில் ஆதரவளிக்கவில்லை என்றாலும், இவரை பம்பாயிக்கு பதில் மதராசுக்கு செல்ல அனுமதித்தனர்.[2] அசைபட ஒளிப்பதிவு பயில அடையறு இன்ஸ்டிடியூட் ஆப் பிலிம் டெக்னாலஜி, (இப்போது தமிழ்நாடு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் ) சேர்ந்தார்.[3] இந்த கல்லூரியில், இவர் சத்யஜித் ராய் உள்ளிட்டவர்களின் உலகத் திரைப்படங்களைப் பற்றி அறிந்தார். இந்தக் கல்லூரியிலிருந்து வெளிவந்த பிறகு, 1969 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான ஜன்மபூமி என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.[4] கல்லூரியில் இவரது ஆசிரியராக இருந்த ஜான் சங்கரமங்கலம் அப்படத்தின் இயக்குநராக இருந்தார். இந்த படத்திற்கு அசோக் குமாரும், இவருடன் கல்லூரியில் படித்தவர்களாலும் நிதி வழங்கப்பட்டது. இந்த படம் சமய சகவாழ்வு என்ற கருப்பொருளைக் கையாண்டது, அப்படமானது 16 வது தேசிய திரைப்பட விருதுகளில் தேசிய ஒருங்கிணைப்பு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை வென்றது. முதலாவது கேரள அரசு திரைப்பட விருதுகளில், அசோக் குமாருக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதையும் பெற்றுத்தந்தது. அதைத் தொடர்ந்து மலையாளத்தில், இவர் பிஎன் மேனன், பாபு நந்தன்கோடு, ஜே. சசிகுமார், இராமு கரியத் பரதன் போன்ற பல இயக்குநர்களின் திரைப்படங்களில் வாய்ப்புகளைப் பெற்றார். 1970 களில் மலையாளத் திரைப்படத் துறையில் இவர் கொண்டிருந்த ஈடுபாட்டால், இவருக்கு ஸ்வாப்னம் (1973), டாக்ஸி டிரைவர் (1977) என்ற இரண்டு படங்களுக்கான மாநில அரசு விருதுகளைப் பெற்றுத்தந்தது .
1978 ஆம் ஆண்டில், தமிழ்த் திரைப்பட இயக்குநர் மகேந்திரன் தான் இயக்குநராக அறிமுகமான முள்ளும் மலரும் படத்துக்காக ஒளிப்பதிவு செய்ய, ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபுவை அணுகினார். அந்த நேரத்தில் அவர் வேறு படத்தில் மும்மரமாக இருந்த காரணத்தால், அசோக் குமாரை மகேந்திரனுக்கு பரிந்துரைத்தார். இருப்பினும், நடிகர் கமல்ஹாசனின் ஆலோசனையின் அடிப்படையில் பாலு மகேந்திரா அந்த படத்தின் ஒளிப்பதிவுக்கு தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில், மகேந்திரன் அசோக் குமார் ஒளிப்பதிவு செய்த சில மலையாள படங்களை பார்த்திருந்தார், அப்போது இவரது சில கோணங்கள் மற்றும் ஒளி நுட்பங்கள் மிகவும் சுவாரஸ்யமானவையாக இருப்பதைக் கவனித்துள்ளார். மகாந்திரன் தனது இரண்டாவது படமான உதிரிப்பூக்களுக்காக, அசோக் குமாரை அணுகினார், ஏனெனில் பாலு மகேந்திரா அப்போது அவர் இயக்கிவந்த அழியாத கோலங்கலில் பரபரப்பாக வேலைபார்த்து வந்தார். இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு அசோக் குமார் தமிழகத் திரைப்படத் துறையில் அறிமுகமானார்.[4] இந்தப் படத்தைத் தொடர்ந்து, அசோக் குமார் தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தினார். மகேந்திரனின் படங்களுக்கு தொடர்ச்சியாக ஒளிபதிவு செய்த இவர், ஜானி (1980), நெஞ்சத்தை கிள்ளாதே (1980), நண்டு (1981), மெட்டி (1982) உள்ளிட்ட அவரது பன்னிரண்டு படங்களில் ஒன்பது படங்களில் பணியாற்றினார்.[5] நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் பணியாற்றியதற்காக, சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய திரைப்பட விருதையும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருதையும் வென்றார் .[2][3][6]
1980 களின் நடுப்பகுதியில், அசோக் குமார் வணிகப் படங்களில் கவனம் செலுத்தினார். கே. பாக்யராஜின் டார்லிங், டார்லிங், டார்லிங் (1982), முந்தானை முடிச்சு (1983) ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். இந்தியாவின் முதல் 3 டி படமான மை டியர் குட்டிச்சாத்தான் (1984) படத்தில் பணியாற்றினார்.[2][7] எஸ்.சங்கருடன் ஜீன்ஸ் (1998) படத்திலும் பணியாற்றினார். மேலும் இவர் இந்தி படங்களான கமக்னி (1987), பவந்தர் (2000), கெஹ்தா ஹை தில் பார் பார் (2002) ஆகிய படங்களிலும் பணியாற்றினார். பவந்தர் படமானது சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றதுடன், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைப் வென்றது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்த அசோக் குமாருக்கு ஒளிப்பதிவுக்கான வி. சாந்தரம் விருது வழங்கப்பட்டது.
அசோக் குமார் 43 வது தேசிய திரைப்பட விருதுகளின் நடுவர்களில் ஒருவராக பணியாற்றினார்.[8] இவரது திரைப்பட வாழ்க்கையில், பி. எஸ். நிவாஸ், சுஹாசினி மணிரத்னம், பி. ஆர் விஜயலட்சுமி ஆகியோர் இவரது உதவியாளர்களாக இருந்துள்ளனர். தற்கால ஒளிப்பதிவாளர்களான ராமச்சந்திர பாபு, பி. சி. ஸ்ரீராம், ரவி கே. சந்திரன் , வேணு ஆகியோரும் இவரது படைப்புகளால் ஈர்க்கப்பட்டதாக பேசியுள்ளனர்.
அசோக் குமாருக்கு திருமணமாகி நான்கு மகன்களைப் பெற்றார். இவரது இரண்டு மகன்களான ஆகாஷ் அகர்வால், சமீர் அகர்வால் ஆகியோரும் ஒளிப்பதிவாளர்கள்.[9] இவரது குடும்பம் சென்னையில் வசித்து வருகிறது. 2014 சூனில் கடும் நோயுற்ற, அசோக் குமார் ஐதராபாத் மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ஆறுமாதங்கள் சிகிச்சைப் பெற்றார், இந்திலையில் 1914 அக்டோபர் 22 அன்று தனது 73 வயதில் சென்னையில் இறந்தார்.[10]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)ராஜா, செந்தில் நாதன். "உதிர்ந்தது ஓர் உதிரிப் பூ!" பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம். Cinema Express (in Tamil). Retrieved 18 November 2014.