அஜ்மீர் மாநிலம் (Ajmer State)1950 முதல் 1956 வரை அஜ்மீரை தலைநகராகக் கொண்டு இந்தியாவிற்குள் ஒரு தனி மாநிலமாக இருந்தது. [1] அஜ்மீர் மாநிலம் 1950 ஆம் ஆண்டில் முன்னாள் மாகாணமான அஜ்மீர்-மேர்வாராவிலிருந்து உருவாக்கப்பட்டது. இது ஆகஸ்ட் 15, 1947 இல் இந்திய ஒன்றியத்தின் ஒரு மாகாணமாக மாறியது. இது இராசத்தான் மாநிலத்திற்குள் ஒரு நிலப்பகுதியை உருவாக்கியது. 1956 இல் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து அது இராசத்தானுடன் இணைக்கப்பட்டது.[2]
அஜ்மீர் மாநிலம் அஜ்மீர்-மேர்வாரா பகுதியிலிருந்து உருவாக்கப்பட்டது.இது பிரித்தானிய இந்தியாவின் காலத்தில் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த மாகாணமாக இருந்தது. அஜ்மீர்-மேர்வாரா பகுதி 1818 இல் மராத்தியர்களிடமிருந்து ஆங்கிலேயர்களால் வாங்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, அஜ்மீர்-மேர்வாரா இந்திய ஒன்றியத்தின் ஒரு மாகாணமாக மாறியது.
1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்தியக் குடியரசிற்குள் அஜ்மீர் மாநிலம் என்று பெயரிடப்பட்ட "சி" மாநிலமாக நிறுவப்படும் வரை இது ஒரு மாகாணமாக இருந்தது. "சி" வகுப்பு மாநிலங்கள் மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தன. [1]
1956 இல், இந்தியாவின் மாநில எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டபோது, அது அப்போதைய இராசத்தான் மாநிலத்தின் ஒரு மாவட்டமாக மாறியது. [1] [3] அஜ்மீர் மாநிலம் 1 நவம்பர் 1956 அன்று இராசத்தான் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. முந்தைய செய்ப்பூர் மாவட்டத்தின் கிசன்கர் துணைப்பிரிவு அஜ்மீர் மாவட்டத்தை உருவாக்க அதனுடன் சேர்க்கப்பட்டது. [4]