அஞ்சுதெங்கு | |
---|---|
Anjengo | |
அமைவிடம் | இந்தியா, திருவனந்தபுரம் |
ஆள்கூற்றுகள் | 8°29′00″N 76°55′00″E / 8.4833°N 76.9167°E |
கட்டிடக்கலைஞர் | போர்சுகீசியர் |
கட்டிட முறை | போர்ச்சுகல் |
அஞ்சுதெங்கு (Anchuthengu, முன்னர் அஞ்செங்கோ, Anjengo அல்லது Anjenga என்று அழைக்கபட்டது) [1] என்பது கேரளத்தின், திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடலோர பஞ்சாயத்தும், நகரமுமாகும். இது திருவனந்தபுரம் - வர்கலா - கொல்லம் கடற்கரை நெடுஞ்சாலையில் வர்கலா நகரத்துக்கு 9 கி.மீ தென்மேற்கில் அமைந்துள்ளது.
இந்த நகரத்தில் பழைய போர்த்துகீசிய பாணி தேவாலயங்கள், ஒரு கலங்கரை விளக்கம், 100 ஆண்டுகள் பழமையான பெண் துறவியர் மடம் மற்றும் பள்ளி, டச்சு மற்றும் பிரித்தானிய மாலுமிகள் மற்றும் வீரர்களின் கல்லறைகள் மற்றும் அஞ்செங்கோக் கோட்டையின் எச்சங்கள் உள்ளன. பிரபல மலையாள கவிஞர் குமரன் ஆசானின் பிறப்பிடமான கைகாரா கிராமம் இதன் அருகிலேயே அமைந்துள்ளது. இப்பகுதியில் பால சுப்பிரமணிய சுவாமி கோயில், பரம்பில் பத்ரகாளி யோகேஸ்வர சேத்திரம் போன்ற கோயில்கள் உள்ளன.
அஞ்சுத்தெங்கானது திருவனந்தபுரத்தின் வடக்கே சுமார் 36 கிலோமீட்டர்கள் (22 mi) தொலைவில் உள்ளது. இதன் அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் ஆகும். கடக்காவூர் தொடருந்து நிலையம் 2 கிலோமீட்டர்கள் (1.2 mi) தொலைவில் உள்ளது.
பார்வதி புதானார் கால்வாயின் வாயில் அஞ்செங்கோ அமைந்துள்ளது.[2] முதலில், இது கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மற்றும் வர்கலாவுக்கு அருகில் ஒரு பழைய போர்த்துகீசிய குடியேற்றமாக இருந்தது.[3]
1694 ஆம் ஆண்டில், ஆற்றிங்கல் அரசி பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு அஞ்செங்கோவில் ஒரு தொழிற்சாலையையும், கோட்டையை நிறுவுவதற்கான உரிமையை வழங்கினார். அப்போது கிழக்கிந்திய நிறுவனத்துக்கு ஐந்து தென்னை மரங்கள் இருந்த - வரையறுக்கபட்ட இந்த இடத்தை குத்தகை அடிப்படையில் வணிகத்துக்காக வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆகவே இந்த இடம் பெயராக அஞ்செங்கோ என்பது நிலைத்துவிட்டது. இது கேரளத்தில் நிறுவனத்தின் முதல் வர்த்தக குடியேற்றமாக மாறியது. அஞ்செங்கோக் கோட்டை 1694-8 இல் கட்டப்பட்டது. [1]
18 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேய-மைசூர் போர்களில் இந்த கோட்டை முக்கிய பங்கு வகித்தது. [சான்று தேவை] ஆனால், 19 ஆம் நூற்றாண்டில், கோட்டையைப் பராமரிப்பது தேவையற்ற செலவாக கருதப்பட்டது. 1813 இல் கிழக்கிந்திய நிறுவனம் தொழிற்சாலையைக் கைவிட்டது. [1]
19 ஆம் நூற்றாண்டில், இந்த நகரம் இதன் சிறந்த தயாரிப்பான கயிறுகளுக்கு புகழ் பெற்றது, மேலும் மிளகு, வீட்டு நூற்பு பருத்தி துணி, மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்தது. [1]
18-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்த காலக்கட்டம். பம்பாய்க்கு அடுத்தப் படியாக ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்தியா கோட்டையாக திருவனந்தபுரத்தை அடுத்த அஞ்சுதெங்கு கோட்டை விளங்கியது. ஆங்கிலேயர்கள் மிளகு வாங்க மட்டும் அட்டிங்கல் இராணி அனுமதி அளித்து இருந்தார். டட்சு நாட்டி வணிகர்களின் வளர்ச்சியை அடியோடு நிறுத்த அட்டிங்கல் இராணி முடிவு செய்தார். இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் மீது ஆங்கிலேயர்கள் அவமதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவற்றை பொறுத்துக் கொள்ள முடியாத அஞ்சுதெங்கு மற்றும் அட்டிங்கல் மக்கள் பதிலடி கொடுக்க சரியான நேரத்திற்கு காத்துக் கொண்டு இருந்தனர்.
14 ஏப்ரல் 1721 அன்று பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்தின் உள்ளூர் தலைவர் வில்லியம் கிஃபோர்டு 140 ராணுவ வீரர்கள் மற்றும் அடிமைகளுடன் வாமனபுரம் ஆற்றில் படகு மூலம் அட்டிங்கல் ராணியை சந்திக்க பரிசு பொருள் வழங்க பயணம் கொண்டு இருந்தனர். அரண்மனையின் உள்ளே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்தது. இந்த நிலையில் அரண்மனை மீது தாக்குதல் நடைபெற்றது.
பல மணி நேரங்கள் நீடித்த தாக்குதலில் ஒரு ஆங்கிலேயரும் உயிர் பிழைக்கவில்லை. வாமனபுரம் ஆறு முழுக்க சிவப்பு நிறத்திற்கு மாறியதோடு, சடலங்களால் நிரம்பி போனது. இதை அடுத்து அஞ்சுதெங்கு கோட்டை பொது மக்கள் கைப்பற்றினர். இந்த சம்பவம் பிளாசி சண்டைக்கு 36 ஆண்டுகள் முன்னர் நடைபெற்றது. 136 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் முதல் சுதந்திர போர் இதுவே ஆகும்.