அண்டோசோனைட்டு (Antozonite) என்பது ஒரு கதிரியக்க புளோரைட்டு வகை கனிமமாகும். வரலாற்றில் இக்கனிமம் இசிடிங்சிபேட்டு, இசிடிங்பிளசு, இசிடிங்சிடெய்ன், இசிடிங்சுபார்[1], பெடிட்டு புளோரைட்டு[2]) என்ற பெயர்களால் அறியப்படுகிறது. 1841 ஆம் ஆண்டு செருமனி நாட்டிலுள்ள பவேரியாவின் வோல்செண்டார்பில் முதன் முதலில் இக்கனிமம் கண்டறியப்பட்டு[3]. பின்னர் 1862 ஆம் ஆண்டு பெயரிடப்பட்டது[4].
தனிமநிலை புளோரின் பல்வேறு உட்சேர்க்கைப் பொருள்களுடன் சேர்ந்துள்ள ஒரு படிகமாக இக்கனிமம் விவரிக்கப்படுகிறது[5]. இப்படிகங்கள் நொறுக்கப்படும்போது அல்லது உடைக்கப்படும்போது தனிமநிலை புளோரின் விடுபடுகிறது. யுரேனிய உட்சேர்க்கைகளின் பீட்டா கதிரியக்க வெளியீட்டால் கால்சியம் புளோரைடு தொடர்ச்சியாக கால்சியம் மற்றும் புளோரின் அணுக்களாக உடைகிறது. புளோரின் அணுக்கள் இணைந்து டைபுளோரைடு எதிர்மின் அயனிகளாகவும் தொடர்ந்து மிகை எலக்ட்ரான்களை படிகக் குறையிலிருந்து இழந்து புளோரின் உருவாகிறது[6][7]. அடுத்ததாக புளோரின் வளிமண்டல ஆக்சிசன் மற்றும் நீராவியுடன் வினைபுரிந்து ஓசோனையும் ஐதரசன் புளோரைடையும் கொடுக்கிறது. ஓசோனை அடையாளப்படுத்தும் மணம் தவறுதலாக அண்டோசோன் என்ற கருத்தியல் சேர்மமாக கருதப்பட்டதால் இக்கனிமம் அண்டோசோனைட்டு என்ற பெயரைப் பெற்றது.
↑Some physical properties of naturally irradiated fluorite, American Mineralogist, Robert Berman, 1956; "The material has been given the name antozonite, after the supposed evanescent gas, antozone. Earlier names were Stinkstein and Stinkfluss (Hausmann, 1847)"