அனில் குமார் குப்தா என்பவர் அடிமட்ட எளியவர்களின் புதுவன புனையும் ஆற்றலைக் கண்டறிந்து ஆக்கப்பூர்வச் செயல்களை ஊக்கப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் ஒரு கல்வியாளர் ஆவார்.[1] அனீ பீ நெட்வர்க் என்னும் அமைப்பை நிறுவியவர். ஏழைமையினாலும் கல்வியின்மையினாலும் தமது புதியன படைக்கும் திறமையை வெளிப்படுத்த முடியாத கிராமப்புற மக்களுக்கு இவரது அமைப்பு உதவி வருகிறது.
1974 இல் அரியானா வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உயிர்வேதியியல் மரபியல் என்னும் துறைப் படிப்பில் முதுவர் பட்டம் பெற்றார். 1986 இல் குருசேத்திரா பல்கலைக்கழக்த்தில் ஆய்வுப் பட்டம் பெற்றார். கலிபோர்னியாவில் உலகக் கலை மற்றும் அறிவியல் அகாதமியின் மதிப்புறு உறுப்பினராக இருந்தார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு இல்லாமல் அனுபவத்தினால் ஏற்படும் புதிய உத்திகள், திட்டங்கள் கொண்டு இருக்கிற எளிய மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களுடைய புதியன படைக்கும் திறன்களை ஆவணப்படுத்திச் செயலாக்கம் பெறுவதற்குப் பல ஆண்டுகளாகச் செயல்படுகிறார். இந்த நோக்கங்கள் நிறைவேற சோத்யாத்ரா என்னும் பயணத்திட்டத்தின் மூலம் கிராமங்கள் தோறும் 6000 கிலோ மீட்டர் தொலைவுப் பயணம் செய்தார்.
மறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் துணையுடன் ஆமதாபாத் ஐஐஎம் நிறுவனத்தில் சோத்யாத்ரா பற்றிய பயிற்சி வகுப்பு மற்றும் உலகமயமாக்கலில் இந்தியா புத்துருவாக்கம் பெறுதல் பற்றிய கல்வி கற்பிக்கச் செய்தார். மேலும் படைப்பாக்கம், புதியன புனைதல் ,அறிவு வலைப்பின்னல், தொழில்முனைவு என்ற வகுப்புகளும் நடைபெறுகின்றன.[2]
ஆமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். என்று அழைக்கப்படும் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் விவசாய மேலாண் மையத்தின் பேராசிரியராகப் பணி புரிகிறார். தேசிய இன்னோவேசன் அறக்கட்டளையின் செயல் துணைத் தலைவராகவும் இருக்கிறார். 2009 நவம்பரில் டெட் இந்தியாவின் பேச்சாளராக இருந்தார்.[3] 2004 இல் பத்மசிறீ விருது அனில் குமார் குப்தாவுக்கு வழங்கப்பட்டது.[4] உலக அறிவியல் அகாதமி என்ற அமைப்பு இவருக்கு டுவாஸ் விருது வழங்கி கவுரவித்தது.[5]