அனுசீலன் சமித்தி (அனுஷீலன் சமித்தி, வங்காள மொழி: অনুশীলন সমিতি) இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் வங்காளத்தில் செயல்பட்ட ஒரு புரட்சி இயக்கம். 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் கிழக்கு இந்தியாவின் முக்கிய ஆயுதமேந்திய புரட்சி இயக்கமாக இருந்தது. இவ்வியக்கமும் இதிலிருந்து பிரிந்த யுகாந்தர் அமைப்பும், புறநகர் உடற்பயிற்சி கழகங்கள் என்ற போர்வையில் பிரித்தானிய அரசுக்கு எதிராக ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தருவதே இதன் குறிக்கோள். ஆரம்ப காலத்தில் கொல்கத்தா, டாக்கா போன்ற நகர்புறங்களில் பரவிய இவ்வமைப்பு விரைவில் வங்காளத்தின் ஊர்ப்புறங்களிலும் வேரூன்றியது. 1902ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு பலமுறை பிளவுற்று, சில முறை புனரமைக்கப்பட்டது. இவ்வமைப்பின் உறுப்பினர்கள் 1930களின் இறுதி வரை படுகொலைகள், வெடுகுண்டு தயாரித்தல், ஆயுதப் பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். பின் இவ்வியக்கம் செயலிழந்து அரசியல் மைய நீரோட்டத்தில் இணைந்து விட்டது.[1][2][3]