அனுமான் தோகா ( Hanuman Dhoka ) (அனுமன் தோக்கா எனவும் உச்சரிக்கப்படுகிறது) நேபாளத்தின் மத்திய காட்மாண்டு நகரச் சதுக்கத்தில் உள்ள மல்ல மன்னர்கள் மற்றும் ஷா வம்சத்தின் அரச அரண்மனையுடன் கூடிய கட்டமைப்பாகும். அனுமன் தோகா அரண்மனை (நேபாளியில் உள்ள அனுமான் தோகா தர்பார்) பிரதான நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்து தெய்வமான அனுமனின் கல் உருவத்திலிருந்து அதன் பெயரைப் பெற்றது. நேபாளியில் 'தோகா' என்றால் கதவு அல்லது வாயில் என்று பொருள். 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட நேபாள நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.
பத்து முற்றங்களைக் கொண்ட கிழக்குப் பகுதி 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உள்ள பழமையான பகுதியாகும். இது 17 ஆம் நூற்றாண்டில் மன்னர் பிரதாப் மல்லனால் பல கோயில்களுடன் விரிவுபடுத்தப்பட்டது. அரண்மனையின் வடக்குப் பகுதியில் உள்ள சுந்தரி சோக் மற்றும் மோகன் சோக் இரண்டும் மூடப்பட்டுள்ளன. 1768 இல், அரண்மனையின் தென்கிழக்குப் பகுதியில், மன்னன் பிருத்வி நாராயண் ஷாவால் நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் சேர்க்கப்பட்டன. இந்த அரண்மனையில் 1886 வரை அரச குடும்பம் வாழ்ந்தது. பின்னர் அவர்கள் நாராயண்ஹிட்டி அரண்மனைக்கு மாறினர். வெளியில் உள்ள கல்வெட்டு பதினைந்து மொழிகளில் உள்ளது. 15 மொழிகளையும் அறிந்த ஒருவருக்கு, இங்குள்ள ஒரு நீரூற்றில் தண்ணீருக்குப் பதிலாக பால் வரும் என்று புராணக்கதை கூறுகிறது. [1] [2]
தர்பார் சதுக்கத்தின் மேற்குப் பகுதியில் "அனுமன் தோகா" அல்லது அனுமன் வாயில் அமைந்துள்ளது. இது அரண்மனையின் நுழைவு வாயில் ஆகும். அங்கு 1672 தேதியிட்ட நின்ற நிலையில் அனுமன் சிலை ஒன்று அமைக்கப்ப்ட்டுள்ளது. இடதுபுறத்தில் இரணியகசிபு என்ற அரக்கனை நரசிம்மர் விழுங்கும் ஒரு கற்சிற்பம் ஒன்று உள்ளது. இது படத்தின் பீடத்தில் உள்ள கல்வெட்டின் படி பிரதாப மல்ல காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
பிரதான நுழைவாயிலுக்கு முன்னால், அனுமன் கோவிலை ஒட்டி நாசல் சோக் முற்றம் உள்ளது ('நாசல்' என்றால் நேபாள பாசாவில் "நடனம் செய்பவர்") சதுரத்தின் கிழக்குப் பகுதியில் நடனமாடும் சிவனின் பெயரால் பெயரிடப்பட்டது. 1975 ஆம் ஆண்டு முற்றத்தின் நடுவில் உள்ள மேடையில் பிரேந்திரா மன்னராக முடிசூட்டிக் கொண்ட சதுக்கமாகும். முற்றத்தின் தெற்குப் பகுதியில், ஒன்பது மாடிகளைக் கொண்ட வசந்தபூர் கோபுரம் உள்ளது. மல்லர்கள் காலத்தில் முற்றம் கட்டப்பட்டாலும், அதைச் சுற்றியுள்ள கட்டிடங்கள், நுணுக்கமாக செதுக்கப்பட்ட கதவுகள், சாரங்கள் மற்றும் அதன் வேலைப்பட்டுகள் ராணா வம்ச ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டவை. நாசல் சோக் வடமேற்கு மூலையில் இருந்து நுழைவாயிலுடன் வடக்கு-தெற்கு திசையில் செவ்வகமாக உள்ளது. நுழைவாயிலுக்கு அருகில் நான்கு கடவுள்களின் வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு நுணுக்கமான செதுக்கப்பட்ட வாசல் உள்ளது. இது மல்ல மன்னரின் தனிப்பட்ட குடியிருப்புகளுக்குச் செல்கிறது. 1934 ஆம் ஆண்டு ஏற்பட்ட நேபாளம்-பீகார் நிலநடுக்கத்தில் இந்த சதுக்கத்தில் உள்ள அசல் விஷ்ணு கோயில் அழிக்கப்பட்டதால், விஷ்ணுவின் தங்க உருவம் இப்போது கிழக்கு சுவரில் திறந்த வராண்டாவில் வைக்கப்பட்டுள்ளது. முற்றத்தில் உள்ள மற்ற கட்டமைப்புகள்: வடகிழக்கு மூலையில் உள்ள மல்ல மன்னர்களின் பார்வையாளர் அறை, திறந்த அறையில் மல்ல மன்னர்களின் சிம்மாசனம் மற்றும் ஷா மன்னர்களின் உருவப்படங்கள் ஆகியவை காணப்படுகின்றன. [3]
அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பஞ்ச முகி அனுமன் கோயில் (ஐந்து முகங்களைக் கொண்ட அனுமன்) நாசி சோக்கின் வடகிழக்கு மூலையில் உள்ளது. இது ஐந்து வட்ட வடிவ கூரைகளின் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கோயில் பூசாரி மட்டுமே கோயிலின் கருவறைக்குள் நுழைய முடியும். [3]
வசந்தபூர் கோபுரம் ('வசந்தபூர்' என்றால் "வசந்தத்தின் இடம்") நாசல் சோக்கின் தெற்கில் அமைந்துள்ளது. இது ஒன்பது மாடிகளைக் கொண்ட கோபுரமாகும். அதன் உச்சியில் இருந்து அரண்மனை மற்றும் நகரத்தின் பரந்த காட்சியைக் காணலாம். சிற்றின்ப உருவங்கள் இந்த கோபுரத்தின் அடுக்குகளில் செதுக்கப்பட்டுள்ளன. காட்மாண்டு பள்ளத்தாக்கின் நான்கு பழைய நகரங்களான காட்மாண்டு அல்லது பசந்தபூர் கோபுரம், கீர்த்திபூர் கோபுரம், பக்தபூர் கோபுரம் அல்லது லட்சுமி விலாசம், மற்றும் பதான் அல்லது லலித்பூர் கோபுரம் ஆகியவற்றை மன்னன் பிரிதிவி நாராயணன் ஷா கட்டிய நான்கு சிவப்பு கோபுரங்களில் இதுவும் ஒன்றாகும்.
தலேஜு பவானிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முல் சோக், மத சடங்குகளுக்கான பிரத்யேக இடங்களான இரண்டு மாடி கட்டிடங்களைக் கொண்ட ஒரு முற்றமாகும். தலேஜு பவானி மல்லர் குடும்பத்தின் தெய்வமாகும். தங்க தோரணத்துடன் கூடிய தலேஜு கோயில் (கதவு மாலை) முற்றத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தாசென் திருவிழாவின் போது, தலேஜுவின் தெய்வம் இந்த கோவிலுக்கு மாற்றப்படுகிறது. கோயிலின் நுழைவாயிலில் கங்கை மற்றும் யமுனை தெய்வங்களின் உருவங்கள் உள்ளன. தேகு தலேஜு கோயில் என்பது சிவ சிங் மல்லனால் கட்டப்பட்ட மற்றொரு மூன்று கூரை கோயிலாகும். இது தலேஜு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
நாசல் சோக்கின் வடக்கே 1649 இல் கட்டப்பட்ட மோகன் சோக், மல்ல மன்னர்களின் குடியிருப்பு முற்றமாக இருந்தது. அரியணைக்கு வாரிசாக வருவதற்கு ஒரு மல்ல அரசன் இங்கு பிறக்க வேண்டும் என்பது கட்டாயம்; இந்த நம்பிக்கைக்கு ஒரு உதாரணம், ஜெய பிரகாஷ் மல்லா ஆவார் . முற்றத்தின் மையத்தில், பள்ளத்தாக்கின் வடக்குப் பகுதியில் உள்ள பூதநீலகண்டத்திலிருந்து பெறப்பட்ட நீரூற்று என்று சொல்லப்படும் சன் தாரா எனப்படும் தங்க நீர்நிலை உள்ளது. இது முற்றத்தின் மட்டத்திலிருந்து பல மீட்டர் கீழே அலங்காரமாக செதுக்கப்பட்ட நிலையில் உள்ளது. மல்ல மன்னர்கள் தினசரி தங்களை சுத்தப்படுத்திக் கொள்வதற்கு இதைப் பயன்படுத்தினர். நான்கு மூலைகளிலும் கோபுரங்கள் உள்ளன. இந்த சோக்கின் வடக்கே சுந்தரி சோக் உள்ளது. [3]
நாசல் சோக்கின் மேற்குப் பகுதியில், திரிபுவன் அருங்காட்சியகத்தில் மன்னர் பிரேந்திராவின் தாத்தாவின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தில் அழகிய கல் சிற்பங்கள், பல ஈர்க்கக்கூடிய சிம்மாசனங்கள், முடிசூட்டுக்கு பயன்படுத்தப்படும் நகைகள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள், ஆயுதங்கள், தளபாடங்கள், மரக் கோயில் சிற்பங்கள் மற்றும் நாணய சேகரிப்பு ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மன்னன் திரிபுவன் வீர விக்ரம் ஷாவின் படுக்கையறை, படிப்பறை போன்றவை இங்கு மீண்டும் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. அரண்மனையின் இந்த பகுதி, தர்பார் சதுக்கத்திற்கு அடுத்ததாக, 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி மற்றும் பிற்பகுதியில் ஆண்ட ராணாக்களால் கட்டப்பட்டது.
முற்றத்தின் தென்கிழக்கு மூலையில் மன்னன்மகேந்திரா நினைவு அருங்காட்சியகம் உள்ளது. அங்கு இரண்டு சிம்மாசனங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அரண்மனை அருங்காட்சியகம் ஒன்று அனுமன் தோக்கா அரண்மனையில் அமைந்துள்ளது. இது நேபாள அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் பெரிய அனுமான் தோக்கா அரண்மனை வளாகத்தின் ஒரு பகுதியாகும். இது நேபாளியில் அனுமான் தோகா தர்பார் என்று அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனை பிரதான நுழைவாயிலுக்கு அருகில் உள்ள இந்துக் கடவுளான அனுமனின் கல் உருவத்திலிருந்து அதன் பெயரைப் பெற்றது. நேபாளியில் 'டோகா' என்றால் கதவு.
நேபாளத்தை ஆட்சி செய்த கடைசி குலமான ஷா வம்சத்தின் பகுதியுடன் இந்த அருங்காட்சியக சுற்றுப்பயணம் தொடங்குகிறது. அவர்கள் 2006 இல் வீழ்த்தப்படும் வரை. இந்த பிரிவில் பல்வேறு ஷா மன்னர்களின் வாழ்க்கை தொடர்பான கலைப்பொருட்கள் உள்ளன, அவர்களின் குழந்தை பருவத்தில் இருந்து திருமணம் வரை அவர்களின் முடிசூட்டு விழா வரை.
நேபாளத்தில் ஏற்பட்ட வரலாற்று மாற்றங்களை நினைவுகூரும் ஒரு பகுதியும் இங்கு உள்ளது. அதாவது அடிமை முறை ஒழிப்பு, அக்கால நேபாள அரசாங்கத்திற்கு 3,670,000 ரூபாய் செலவானது.