அபெபெச் கோபென்னா (அம்ஹாரிக்: አበበች ጎበና, ஆங்கிலம்: Abebech Gobena) எத்தியோப்பியாவின் மிக முக்கியமான மனிதநேயமிக்க பெண்மணி ஆவார். அவர் அகோஹெல்மா (AGOHELMA) என்ற கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் பொது மேலாளர் ஆவார். அகோஹெல்மா என்ற கூட்டமைப்பு எத்தியோப்பியாவின் பழமையான அனாதை இல்லங்களில் ஒன்றாகும். அவர் ஆஃப்ரிக்காவின் அன்னை தெரேஸா என்று அழைக்கப்படுகிறார்.[1]
அவர் 1938 ஆம் ஆண்டு ஷெபெல் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். இரண்டாம் எத்தியோ-இத்தாலியப் போரின்போது அவரது தந்தை கொல்லப்பட்டார். அன்று முதல் அவரது ஒன்பது வயது வரை அவருடைய பாட்டன், பாட்டியால் வளர்க்கப்பட்டார். பத்து வயதில், அவருடைய சம்மதமில்லாமல், அவருக்குத் திருமணம் செய்வித்தனர். ஆனால், அவர் எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவிற்குத் தப்பி ஓடிவிட்டார். அங்கு அவர் எப்படியோ அடிப்படைக்கல்வியைக் கற்றறிந்தார். பின்னாளில் அவர் ஒரு காஃபி மற்றும் தானிய வணிக நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டு அலுவலராகப் பணியாற்றினார்.[2]
1973-ல் வோலோ மாகாணத்திலுள்ள கிஷென் மரியம் என்ற புனிதத்தலத்திற்கு புனிதப் பயணம் மேற்கொண்டபொழுது அவரது வாழ்க்கை ஒரு திருப்புமுனையைச் சந்தித்தது. அச்சமயத்தில், அப்பகுதி பஞ்சத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. ஒரு உணவு வழங்கும் முகாமில், இறந்துகிடந்த ஒரு தாயின் அருகில் நிர்கதியாய் ஒரு குழந்தை உட்கார்ந்திருந்ததை கோபென்னா கண்டார். தன்னிடமிருந்த ரொட்டித்துண்டையும் ஐந்து லிட்டர் புனித நீரையும் அங்கு பாதிக்கப்பட்டிருந்த வேறு சிலருக்குப் பகிர்ந்தளித்தார். நிர்க்கதியாய் நின்ற அந்தக் குழந்தையையும் மற்றொரு ஆதரவற்ற குழந்தையையும் அடிடாஸ் அபாபாபிலுள்ள தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். ஒரு வருடத்தில், 21 குழந்தைகளை தன் இல்லத்திற்கு அழைத்துவந்து சமாளித்தார்.[2]
அவர் ஆரம்பித்த அகோஹெல்மா கூட்டமைப்பு ஆதரவற்ற குழந்தைகளை வளர்ப்பது மட்டுமன்றி பல்வேறு வகையான நல உதவிகளையும் மக்களுக்குச் செய்து வருகிறது. முறையான கல்வி, மற்றும் முறைசாராக் கல்வி, ஹெச்ஐவி-எய்ட்ஸ் தடுப்புச் செயற்பாடுகள், வசிப்பிட முன்னேற்றம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பெண்களுக்கு சட்டப்பூர்வ அதிகாரமளித்தல், ஆகியவற்றிலும் அகோஹெல்மா கவனம் செலுத்துகிறது. இத்துடன், 150 ஆதரவற்றோருக்கு அமைப்புரீதியான அக்கறை அளித்துவருகிறது. இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, 12,000 வறுமையில் வாடும் குழந்தைகள் இந்த அமைப்பால் ஆதரிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் 1.5 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்பெற்றுள்ளனர்.[3]