அமரகீர்த்தி அத்துக்கோரளை Amarakeerthi Athukorala | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் பொலன்னறுவை மாவட்டம் | |
பதவியில் 20 ஆகத்து 2020 – 9 மே 2022 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலங்கை | 23 திசம்பர் 1964
இறப்பு | 9 மே 2022 நித்தம்புவை, கம்பகா மாவட்டம், இலங்கை | (அகவை 57)
அரசியல் கட்சி | இலங்கை பொதுசன முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு |
அமரகீர்த்தி அத்துக்கோரளை (Amarakeerthi Athukorala; 23 திசம்பர் 1964 – 9 மே 2022) இலங்கை அரசியல்வாதியும், பொலன்னறுவை மாவட்ட பொதுசன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1][2][3]
2022 இல் நாட்டில் நிலவிய பெரும் பொருளாதார நெருக்கடியை அடுத்து ராசபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது, 2022 மே 9 அன்று, நித்தம்புவை என்ற இடத்தில் அத்துக்கோரளையின் வாகனத்தை சுற்றி வளைத்துத் தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது அத்துக்கோரளையின் பாதுகாப்பு ஊழியர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட போது ஒருவர் கொல்லப்பட்டு, இன்னும் ஒருவர் காயமடைந்தார். இதனை அடுத்து அத்துக்கோரளையும், பாதுகாப்பு ஊழியரும் அருகில் இருந்த ஒரு கட்டடத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் அக்கட்டடத்தில் இருந்து இருவரது இறந்த உடல்களும் மீட்கப்பட்டன. ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் தம்மைத்தாமே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகத் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டது.[4] ஆனாலும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடல் பரிசோதனையில், கடுமையாகத் தாக்கப்பட்டமையால் எலும்புகள் சிதைவடைந்து உள்ளக இரத்தக் கசிவு காரணமாகவே உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.[5][6] பாதுகாப்பு ஊழியரின் உடலில் துப்பாக்கிக் குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அத்துக்கோரளையின் உடம்பில் இருந்து துப்பாக்கிக் குண்டு கண்டுபிடிக்கப்படவில்லை என நீதித்துறை மருத்துவ அதிகாரி தெரிவித்தார். இருவரும் தற்கொலை செய்யவில்லை என்பதை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார்.[6][7]