அமிர்தா விஸ்வ வித்யாபீடம் (Amrita Vishwa Vidyapeetham) அல்லது அமிர்தா பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள பல வளாகங்கள் கொண்ட, பல துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும்.[2]
1990களில் மாதா அமிர்தானந்தமயி மடத்தால் இரண்டு வளாகங்கள், கொல்லம் அமிர்தபுரியிலும் கோயம்புத்தூர் எட்டிமடையிலும், கணினி பயிற்சி மையங்களாகத் துவக்கப்பட்டு பின்னர் அமிர்தா தொழினுட்பக் கழகம் என்ற பெயரில் கல்லூரிகளாக மேம்படுத்தப்பட்டன. கொல்லத்திலுள்ள அமிர்தாபுரியில் உள்ள கல்லூரி கேரளப் பல்கலைக்கழகத்துடனும், கோயம்புத்தூரிலுள்ள எட்டிமடை வளாகத்திலுள்ள கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்பட்டன. 2002இல் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகமாக துவக்கப்பட்டபோது இவை அமிர்தா பொறியியல் பள்ளி என மீளவும் துவக்கப்பட்டன.[8] 2003 ஆம் ஆண்டில், இந்தியா பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரிக்கப்பட்ட நிகர்நிலை பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்ட இளைய கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.[9]
17 மே 1998 அன்று, கொச்சியில் உள்ள எடப்பள்ளியில் உள்ள அமிர்தா மருத்துவமனையுடன் இணைந்து அமிர்தா மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டு அப்போதைய பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.[10] 2002 ஆம் ஆண்டில், கொல்லம் அமிர்தபுரி மற்றும் பெங்களூரில் பொறியியல் மற்றும் வணிகப் பள்ளிகளுடன் கூடிய இரண்டு வளாகங்கள் தொடங்கப்பட்டன.[11][12]
2019ல் சென்னை வெங்கலில் பொறியியல் கல்லூரி வளாகம் திறக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டில், அமராவதி நகரில் பொறியியல், வணிகம் மற்றும் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய வளாகம் திறக்கப்பட்டது.[13][14] 2022 ஆம் ஆண்டில், ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியால் மருத்துவமனை வளாகத்துடன் ஒரு மருத்துவக் கல்லூரி திறந்து வைக்கப்பட்டது.[15][16][17] 2024ல், எரச்சகுளத்தில் உள்ள சன் கல்லூரி வளாகத்தை கையகப்படுத்தி நாகர்கோவில் வளாகம் தொடங்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு படி, பல்கலைக்கழகத்தில் 1,700க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 24,000 மாணவர்களும் இருந்தனர்.[18][19][20]
அமிர்தா பல்கலைக்கழக பொறியியல் பள்ளி - கோவை வளாகம்அமிர்தபுரி வளாகம்
அமிர்தா விஷ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு (NIRF) மூலம் 2023 இல் ஏழாவது சிறந்த பல்கலைக்கழகமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவத்தில் 6வது இடத்தையும், பொறியியலில் 19வது இடத்தையும், வணிக நிர்வாகத்தில் 30வது இடத்தையும், ஒட்டுமொத்த பிரிவில் 15வது இடத்தையும், ஆராய்ச்சியில் 32வது இடத்தையும், மருந்தியல் துறையில் 10வது இடத்தையும், பல் மருத்துவத்தில் 12வது இடத்தையும் பெற்றுள்ளது.[21][22][23][24][25]
2023 ஆம் ஆண்டில், அமிர்தா பல்கலைக்கழகம் டைம்ஸ் உயர் கல்வி பல்கலைக்கழக தாக்க தரவரிசையில் உலகின் முதல் 50 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளது.[27][28][29] இது இந்தியாவிலும் 1வது இடத்தில் உள்ளது. டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசையின் 12வது பதிப்பில், அமிர்தா 601-800 பிரிவில் இடம் பெற்றுள்ளார். இது 2020 ஆம் ஆண்டு இளம் பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 200 இடங்களிலும், BRICS & வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் பல்கலைக்கழக தரவரிசை 2020 இல் முதல் 90 இடங்களிலும் உள்ளது. QS உலக பல்கலைக்கழக தரவரிசை 801-1000 மற்றும் BRICS பல்கலைக்கழக தரவரிசையில் 2020 இல் 168 வது இடத்தைப் பிடித்தது.[30][31][32][33][34]
அமிர்தா பல்கலைக்கழகத்தின் வணிகக் கல்லூரி உலகத் தர வணிகக் கல்லூரிகள் சங்கத்தின் (Association to Advance Collegiate Schools of Business) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.[35]
அமிர்தா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தால் (National Accreditation Board for Hospitals & Healthcare Providers) அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் முதல் மருத்துவ கல்வி நிறுவனம் ஆகும். மேலும் அதன் அனைத்து ஆய்வகங்களும், சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தால் (National Accreditation Board for Testing and Calibration Laboratories) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பாலும் (International Organization for Standardization) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[38][39][40][41][42][43]