அம்ப் கோயில்கள் | |
---|---|
இந்த இடம் பாக்கித்தானின் உப்புமலைத்தொடர் மலைகளில் அமைந்துள்ள இரண்டு கோயில்களின் இடிபாடுகளைக் கொண்டுள்ளது | |
இருப்பிடம் | குஷ்னாப் மாவட்டம் பஞ்சாப் பாக்கித்தான் ![]() |
பகுதி | உப்புமலைத்தொடர் மலைகள் |
ஆயத்தொலைகள் | 32°30′30″N 71°56′12″E / 32.508402°N 71.936538°E |
வகை | கோயில் வளாகம் |
வரலாறு | |
கட்டப்பட்டது | பொ.ச 7-9ஆம் நூற்றாண்டு |
காலம் | இந்து ஷாகி |
கலாச்சாரம் | பஞ்சாபி இந்துக்கள் |
அம்ப் கோயில்கள் (Amb Temples) பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உப்புத் தொடரின் மேற்கு விளிம்பில் அமைந்துள்ள சாகேசர் மலையில் கைவிடப்பட்ட இந்துக் கோயில் வளாகத்தின் ஒரு பகுதியாகும். இந்து ஷாகி பேரரசின் ஆட்சிக் காலத்தில் கி.பி 7 முதல் 9 ஆம் நூற்றாண்டுகளில் இந்த கோயில் வளாகம் கட்டப்பட்டது.
பாக்கித்தானின் சூன் பள்ளத்தாக்கில் உள்ள சாகேசர் மலையில், அம்ப் ஷரேப் கிராமத்திற்கு அருகில் இதன் இடிபாடுகள் அமைந்துள்ளன. கட்டாஸ் ராஜ் கோயில் மற்றும் தில்லா ஜோகியன் துறவிகள் மடாலய வளாகத்தை உள்ளடக்கிய உப்பு மலைத் தொடரில் உள்ள இந்து கோவில்களின் மேற்கு திசையில் இடிபாடுகள் இருக்கின்றன.
பிரதான கோயில் சுமார் 15 முதல் 20 மீட்டர் உயரம் கொண்டது. மேலும் சதுர அஸ்திவாரத்தில் செங்கல் மற்றும் மோட்டார் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இது இந்து ஷாஹி சாம்ராஜ்யத்தால் கட்டப்பட்ட கோயில்களின் "மிக உயர்ந்தது" என்று கருதப்படுகிறது. [1] கோவிலின் இடிபாடுகள் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளன. படிக்கட்டுகள் உள் பகுதிகளுக்கு இட்டுச் செல்கின்றன. [2]
இந்த கோயில் அதன் வெளிப்புறத்தில் காஷ்மீரி பாணியிலான அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. [2] பிரதான கோயிலின் அமைப்பு, காஷ்மீர் கோயில்களிலிருந்து வேறுபடுகிறது. அவை பொதுவாக உச்சிகளைக் கொண்டுள்ளன. பிரதான கோயில் அருகிலுள்ள கலார் கோயிலுக்கும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள காஃபிர் கோட் கோயிலுக்கும் ஒத்ததாக இருக்கிறது.
மேற்கில் 75 மீட்டர் தொலைவில் மற்றொரு சிறிய கோயில் உள்ளது. இது 2 நிலை அல்லது 7 முதல் 8 மீட்டர் உயரத்தில் [3] ஒரு குன்றின் அருகே அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதான கோயிலை நோக்கி ஒரு சிறிய அறை உள்ளது. இதேபோன்ற இரண்டாவது அளவிலான கோயிலிலிருந்து சில மீட்டர் தொலைவில் இருந்தது, அது இப்போது இல்லை. [2] முழு கோயில் வளாகமும் ஒரு கோட்டையால் சூழப்பட்டிருந்தது. குசானப் பேரரசின் காலத்தின் பிற்பகுதியில் இந்த இடத்தில் ஆரம்ப கட்டுமானம் இருந்தது.
இந்த இடத்தை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானியத் தொல்லியலாளரான அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவர் பார்வையிட்டார். மேலும் 1922-24ல் தயா ராம் சாஹ்னி என்பவரால் ஓரளவு பாதுகாக்கப்பட்டது. [2] இந்த கோயில் பல நூற்றாண்டுகளாக சூறையாடப்பட்டு வந்துள்ளது. கடைசியாக மீதமுள்ள சிலை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு இலாகூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இந்த தளம் தற்போது பாக்கித்தானின் தொல்பொருள் சட்டம் (1975) மூலம் பாதுகாக்கப்படுகிறது.