அமர்நாத் ஜா (Amarnath Jha) (பிறப்பு:1897 பிப்ரவரி 25 - இறப்பு: 1955 செப்டம்பர் 2) இவர் அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். [1] [2] சமசுகிருதத்தில் சிறந்த அறிஞரான மகாமோகாத்யாயா முனைவர் சர் கங்காநாத் ஜாவின் மகனான இவர், இந்தி, ஆங்கிலம், பாரசீக, உருது மற்றும் பங்களாவைத் தவிர இவரது தாய்மொழியான மைதிலியிலும் சமமான தேர்ச்சி பெற்றிருந்தார். அமர்நாத் ஜா அவரது காலத்தின் இந்தியாவில் திறமையான புகழ் பெற்ற பேராசிரியராக இருந்தார். [3]
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். இந்த பதவியில் அவர் முப்பத்திரண்டு வயதிலேயே நியமிக்கப்பட்டார். இவரது தந்தைக்குப்பிறகு அலகாபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார். முனைவர் இராதாகிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குழுவில் ஒரு திட்டத்தின் குழுவின் துணைத் தலைவராக பணியாற்றினார். [4] அலகாபாத்தின் இராட்டிரிய சமசுகிருத சமசுதானுடன் தொடர்புடைய புகழ்பெற்ற பிரமுகர்களில் இவரும் ஒருவராக இருந்தார். முனைவர் ஜாவின் தொழில் வாழ்க்கையில் உத்தரபிரதேச பொது சேவை ஆணையத்தின் முதல் தலைவராக பணியாற்றியதும் அடங்கும். [5] இவரது தொழில் வாழ்க்கையின் முடிவில், இவர் பீகார் பொது சேவை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் (1953 ஏப்ரல் 1- 1955 செப்டம்பர் 1). [6]
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 1910-11ல் முயர் விடுதி கட்டப்பட்டு "அமர்நாத் ஜா விடுதி" என இவரது பெயரிடப்பட்டது. [7] [8] அலகாபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும்போது முனைவர் அமர்நாத் ஜாவும் முயர் விடுதியின் காப்பாளராக இருந்தார் என்று விடுதிகளின் வரலாறு கூறுகிறது. இந்தியக் குடிமகன்களின் கௌரவமான பத்ம பூசண் (1954) விருதைப் பெற்ற முதல் நபர்களில் இவரும் ஒருவராவார்.[9]
முனைவர் அமர்நாத் ஜா பீகாரில் உள்ள மிதிலையில் (சரிசாப்-பாகி) மைதில் சிரோத்ரிய பிராமண குடும்பத்தில் பிறந்தார். 1955 செப்டம்பர் 2 ஆம் தேதி பாட்னாவில் தனது ஐம்பத்தொன்பது வயதில் இறந்தார். [3] முனைவர் அமர்நாத் ஜா ஒரு சிறந்த அறிஞராகவும், ஒரு முழுமையான பேச்சாளராகவும் மற்றும் ஒரு நிர்வாகியாகவும் சிறந்து விளங்கினார்.