அரச காடு

டெவோனில் உள்ள எக்ஸ்மூர் அரச காடு. அரச காடுகள் வனப்பகுதியை உள்ளடக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை

அரச காடு, சிலசமயங்களில் கிங்ஸ்வுட் (royal forest, kingswood) என்று அழைக்கப்படுவது இங்கிலாந்து, வேல்ஸ், இசுக்கொட்லாந்து, அயர்லாந்தில் காணப்படும் வெவ்வேறு வரையறைகளைக் கொண்ட நிலப்பரப்பு ஆகும். சாதாரணமாக நவீன புரிதலில் காடு என்ற சொல் மரங்கள் நிறைந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது; இருப்பினும், இடைக்காலப் பார்வையானது "பாதுகாப்பு" என்ற நவீன யோசனையுடன் நெருக்கமானதாக இருந்தது - அதாவது அரசரின் வேட்டை போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட நிலமாக இருந்தது. கரோலிங்கியன் மற்றும் மெரோவிங்கியன் போன்ற முதன்மை நிலப்பரப்பு ஐரோப்பியப் பிராந்தியங்களின் சட்ட அமைப்புகளில் மாறுபட்ட, சூழல்சார்ந்த விளக்கங்களும் உள்ளன.[1]

ஆங்கிலோ-சாக்சன் இங்கிலாந்தில் (ஐந்தாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டு வரை) அதன் மன்னர்கள் சிறந்த வேட்டைக்காரர்களாக இருந்தாலும், அவர்கள் ஒருபோதும் அதற்காக சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலப் பகுதிகளை ஒதுக்கி வைத்திருக்கவில்லை.[2] ஆங்கிலோ-சாக்சன் மன்னர்கள் (சு. 500 முதல் 1066 வரை) இவ்வகைக் காடுகளை உருவாக்கியதற்கான எந்த ஆதாரமும் வரலாற்றாசிரியர்கள் காணவில்லை.[3] இருப்பினும், நார்மன் மன்னர்களின் ஆட்சியின் கீழ் (1066 க்குப் பிறகு), அரச தனிச்சிறப்பு வனச் சட்டம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.[4] இச்சட்டத்தில் குறிப்பாக சிவப்பு மான் மற்றும் தமா மான், ரோ மான், காட்டுப்பன்றி மற்றும் அவைகளைக் கொண்டுள்ள காடுகளின் பசுமையைப் பாதுகாப்பதாக சட்டம் வடிவமைக்கப்பட்டது. இக்காடுகள் மன்னர் அல்லது (அவரது அழைப்பினால் வரும்) பிரபுக்களுக்கு ஒதுக்கப்பட்ட வேட்டைப் பகுதிகளாக வடிவமைக்கப்பட்டன. இந்தப் போக்கு 11 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நோர்மானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இந்த நடைமுறை உச்சம்பெற்ற காலத்தில், தெற்கு இங்கிலாந்தின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அரச காடுகளாக அறிவிக்கபட்டன. 12 ஆம் நூற்றாண்டில் ஒரு கட்டத்தில், எசெக்ஸ் மாவட்டம் முழுவதும் காடுகள் வளர்க்கப்பட்டன. இரண்டாம் ஹென்றி பதவியேற்றதும், ஹண்டிங்டன்ஷயர் மாவட்டம் முழுவதையும் அரச காடுகளாக அறிவித்தார். [2]

காடு வளர்ப்பு, குறிப்பாக புதிய காடுகள் உருவாக்கம், "நார்மன் நுகக் காலத்தில்" (17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி) கிராமப்புற வரலாற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இது ஏற்கனவே இருந்த கடுமையான சமூக நோயை பெரிதாக்கியது: "செழிப்பான குடியிருப்புகள் சீர்குலைந்தன, வீடுகள் எரிக்கப்பட்டன. வனச் சட்டமானது, காடுகளுக்குள் பல்வேறு வகையான குற்றங்களைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையை பரிந்துரைத்தது; 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இந்தச் சட்டத்தின் அமலாக்கம் முடிவுக்கு வந்தது. ஆனால் இங்கிலாந்தின் பல வனப்பகுதிகள் இன்னும் "அரச காடு" என்ற பெயரைக் கொண்டுள்ளன. இடைக்காலத்தில், பிரபுக்களின் பயன்பாட்டின் ஒரே நோக்கத்துக்காக நிலத்தை ஒதுக்கும் நடைமுறை ஐரோப்பா முழுவதும் பொதுவாக காணப்படது.

அரச காடுகள் பொதுவாக தரிசு நிலப்பகுதி, புல்வெளிகள், ஈரநிலங்களின் பெரும் பகுதிகள், மான் போன்ற விலங்குளை வேட்டையாட ஏற்றப் பகுதிகளைக் கொண்ட பகுதிகளைக் கொண்டதாக இருந்தது. மேலும் ஒரு பகுதி அரச காடாக அறிவிக்கபடும்போது, அப்பகுதிக்குள் இருக்கும் கிராமங்கள், நகரங்கள், வயல்களும் வனச் சட்டத்திற்கு உட்பட்டவையாக ஆயின. உள்ளூர் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக முன்பு நம்பியிருந்த நிலத்தைப் பயன்படுத்துவதில் தடை விதிக்கப்பட்டதால் இது வெறுப்பை வளர்த்தது. இருப்பினும், பொதுவான உரிமைகள் முடிவுக்கு வரவில்லை, ஆனால் உரிமைகள் குறைக்கப்பட்டன.[5]

மேற்கோள்கள்

[தொகு]