அரச பெலும் தேசியப் பூங்கா Royal Belum State Park Taman Negeri Royal Belum | |
---|---|
![]() அரச பெலும் தேசியப் பூங்கா | |
அமைவிடம் | உலு பேராக் மாவட்டம் ![]() ![]() |
அருகாமை நகரம் | கிரிக் |
ஆள்கூறுகள் | 5°32′59″N 101°20′52″E / 5.549697°N 101.347889°E[1] |
பரப்பளவு | 117,500 ha (454 sq mi) |
அதிகாரப்படுத்தப்பட்டது | 3 May 2007 |
நிருவாக அமைப்பு | பேராக் மாநில பூங்காக்கள் கழகம் (Perak State Parks Corporation) |
அரச பெலும் தேசியப் பூங்கா (மலாய்: Taman Negeri Royal Belum; ஆங்கிலம்: Royal Belum State Park) என்பது மலேசியா, பேராக், உலு பேராக் மாவட்டம்; மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள தேசியப் பூங்கா ஆகும். இந்தப் பூங்கா தெற்கு தாய்லாந்து வனப் பகுதிகளையும் கடந்து செல்கிறது.
அரச பெலும் தேசியப் பூங்கா, பெலும்-தெமங்கோர் வன வளாகத்தில் (Belum-Temengor Forest Complex) மிகப்பெரிய பூங்காவாகும். பெலும்-தெமங்கோர் வன வளாகம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பெலும் வன வளாகம் என்பது வடக்குப் பகுதியில், மலேசியா-தாய்லாந்து எல்லையில் வலதுபுறமாக அமைந்துள்ளது. அதே வேளையில் தெமங்கோர் வன வளாகம், பெலும் வன வளாகத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது.[2]
அரச பெலும் தேசியப் பூங்கா முழுவதுமாக, பெலும்-தெமங்கோர் வன வளாகத்திற்குள் உள்ளது. பாங் லாங் தேசியப் பூங்கா (Bang Lang National Park) தாய்லாந்து எல்லையில் உள்ளது.
அரச பெலும் தேசியப் பூங்கா உலகின் பழைமையான மழைக்காடுகளில் ஒன்றாகும். இது 130 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பழைமையானது. 117,500 எக்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. அமேசான் மழைக்காடு மற்றும் காங்கோ மழைக்காடு ஆகிய இரண்டு மழைக்காடுகளையும் விட பழமையானது.[3]
காடுகளின் மையத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஓர் ஏரி உள்ளது. 15,200 எக்டர் பரப்பளவில்; நூற்றுக்கணக்கான தீவுகளால் சூழப்பட்ட அந்த ஏரிக்கு தாசிக் தெமங்கோர் (Tasik Temenggor) என்று பெயர். தமிழில் தெமங்கோர் ஏரி என்று பெயர். மலேசிய மத்திய அரசு இப்பகுதியை ஓர் இன்றியமையாத நீர் பிடிப்புப் பகுதி என்று அறிவித்துள்ளது. மற்றும் மலேசிய தேசிய வனச்சட்டத்தின் கீழ் காடுகளைப் பாதுகாக்க திட்டமிட்டுள்ளது.[4]
மலேசிய தேசிய இயற்பியல் திட்டத்தின் (Malaysian National Physical Plan) கீழ் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி தரவரிசை 1 (Environmentally Sensitive Area) என அரச பெலும் தேசியப் பூங்கா அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வனப்பூங்காவை ஒரு முக்கியமான பறவைப் பகுதி (Important Bird and Biodiversity Area) (IBA) என்றும் பன்னாட்டு பறவை வாழ்க்கை அமைப்பு அங்கீகரித்து உள்ளது.
இருந்த போதிலும், பெலும் வனப் பகுதியின் ஒரு பகுதி மட்டுமே மாநிலப் பூங்காவாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள வனப் பகுதிகள், வனப் பொருள்களுக்கான உற்பத்திக் காடுகளாக உள்ளன. குறிப்பாக, காட்டுமரங்களை வணிக நோக்கத்திற்காக வெட்டும் செயல்பாடுகளினால் இந்தப் பூங்கா, கணிசமான அளவிற்கு காட்டு அழிப்பை எதிர்நோக்கியுள்ளது.
இந்த வனப் பகுதியை ஒரு பூங்காவாக அரசிதழில் வெளியிட வேண்டும் என மாநில மற்றும் மத்திய அரசுகளிடம், மலேசிய இயற்கை அமைப்பு (Malaysian Nature Society) மற்றும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன. எவ்வாறாயினும், அந்த வற்புறுத்தல்களை பேராக் மாநில அரசாங்கம் எதிர்க்கிறது; மரம் வெட்டுதல் பேராக் மாநிலத்திற்கு ரிங்கிட் RM 30 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை வழங்குவதாக பேராக் மாநில அரசாங்கம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
இருப்பினும், மே 3, 2007 அன்று, பேராக் மாநில அரசாங்கம், 1,175 கிமீ2 (454 சதுர மைல்) பெலும் வனப் பகுதியை மாநிலப் பூங்காவாக அரசிதழில் வெளியிட்டது.[5]
அரச பெலும் தேசியப் பூங்கா பலவகையான உயிரினங்களைக் கொண்டுள்ளது. உலகின் மிகவும் அச்சுறுத்தலான பாலூட்டிகளில் 14 வகைப் பாலூட்டிகளும்; வேறு வகை உயிரினங்களும் இந்தப் பூங்காவில் தான் உள்ளன. அவையாவன:
2019-ஆம் ஆண்டு நிலவரப்படி, வேட்டையாடுதல் மற்றும் இரை குறைவு போன்ற காரணங்களினால், அரச பெலும் தேசியப் பூங்காவில், கடந்த 7-8 ஆண்டுகளில், புலிகளின் எண்ணிக்கை சுமார் 60-இல் இருந்து 23-ஆகக் குறைந்துள்ளது.[6][7][8]
அரச பெலும் தேசியப் பூங்கா 300-க்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்குத் தாயகமாக உள்ளது. மலேசியாவில் 10 வகையான இருவாய்ச்சிகள் காணப்படும் ஒரே காடு இதுவாகும். 3 வகையான ராபிலேசியா (Rafflesia) உட்பட, 3,000 வகையான பூக்கும் தாவரங்களும் இங்கு உள்ளன.