அருணா மொகந்திAruna Mohanty | |
---|---|
பிறப்பு | 4 ஏப்ரல் 1960 |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | ![]() |
செயற்பாட்டுக் காலம் | 1970-தற்போது வரை |
Career | |
Dances | ஒடிசி (நடனம்) |
அருணா மொகந்தி (Aruna Mohanty) (பிறப்பு 4 ஏப்ரல் 1960) ஓர் ஒடிசி நடனக் கலைஞரும், நடன இயக்குநரும் மற்றும் குருவும் ஆவார். தற்போது ஒடிசா நடன அகாடமியின் செயலாளராக உள்ளார்.[1] அருணா பத்மசிறீ விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
அருணா மொகந்தி, சிறீநாத் ரௌத் மற்றும் கோபிந்த பால் ஆகியோரின் கீழ் ஒடிசியில் தனது பயிற்சியைத் தொடங்கினார். 1972 இல் கங்காதர் பிரதானிடம் பயிற்சியைத் தொடங்கினார். பங்கஜ் சரண் தாஸ், கேளுச்சரண மகோபாத்திரா, சஞ்சுக்தா பனிகிரகி மற்றும் சோனல் மான்சிங் ஆகியோரிடமிருந்து நடன வடிவத்திலும் அருணா வழிகாட்டுதலைப் பெற்றுள்ளார்.[1]
நிர்மல் மொகந்தி மற்றும் சாந்தனு தாஸ் ஆகியோரிடம் ஒடிசி இசையிலும் பயிற்சியும் பெற்றுள்ளார்.[2]
அருணா மொகந்தி நடனக் கலைஞராகவும், நடன இயக்குனராகவும் கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக இருந்துள்ளார்.[3]
1999 ஒடிசா புயலின் போது புயலை சித்தரிக்கும் ஸ்ருஷ்டி ஓ பிரலே என்ற நடனப் படைப்பை நடத்தினார். சிரவண குமார், காரவேலா, ஜத்ரா பரமாசி, கதா ஒடிசி, பிரதிநாயக், கிருஷ்ண சரணம், ஜெயதேவரின் கீத கோவிந்தத்தில் இருந்து பல அஷ்டபதிகள் மற்றும் செருமானிய எழுத்தாளர் ஹேர்மன் ஹெசே எழுதிய சித்தார்த்தா என்ற பெயரில் வெளியான புதினத்தை அடிப்படையாகக் கொண்ட படைப்பு போன்றவை இவரது நடனப் படைப்புகளில் அடங்கும்.[4]
சமகால மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆய்வு செய்ய அருணா தனது கலையைப் பயன்படுத்தியுள்ளார்; உதாரணத்திற்கு. நாரி நடனத்தில், இந்திய இலக்கியம் மற்றும் வரலாற்றில் சீதை, திரௌபதி, மண்டோதரி மற்றும் நிர்பயா போன்ற பல பெண்களின் வாழ்க்கை மற்றும் கதைகள் மூலம் பாலின நிலைப்பாடுகள் மற்றும் சமூகத்தில் பெண்களின் நிலை ஆகியவை ஆராயப்படுகின்றன.[3]
அருணா நடனம் பற்றிய ஆராய்ச்சியையும் மேற்கொண்டார். பாரம்பரிய சிற்பத்தில் ஆண் நடனக் கலைஞரின் பிரதிநிதித்துவம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் ஒடிசியின் பரிணாமம் போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்தினார்.[5]
கலிபோர்னியா பல்கலைக்கழகம், தென் கரோலினா பல்கலைக்கழகம் மற்றும் கோர்னெல் பல்கலைக்கழகம் போன்ற அமெரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் அருணா மொகந்தி வருகை தரும் கலைஞராக இருந்துள்ளார்.[5]