அலிபிரி பாதால மண்டபம் அல்லது அலிபிரி (Alipiri) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி சுவாமியின் புனித நகரமான திருப்பதியில் ஏழு மலைகளின் அடிவாரத்தில் உள்ள ஒரு இடம். அடிச்சுவடு மற்றும் இரண்டு திருமலை மலைச் சாலை , ஒன்று மேலும் மற்றொன்று கீழும், ஏழு மலைகள் வழியாகத் திருமலைக்குச் செல்லும் அலிபிரியில் தொடங்குகிறது. எனவே இது " திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கான நுழைவாயில்" [1] எனப் பெயர் பெற்றது.
முன்னாட்களில் பக்தர்கள் வாகன வசதியின்றி, நடைபாதை வழியாகத்தான் ஏழு மலைகளின் வழியாக மலை ஏறுவது வழக்கம். இதனால், நீண்ட தூரத்திலிருந்து பக்தர்கள் வரும் பக்தர்கள், இங்குச் சிறிது நேரம் ஓய்வெடுத்து, உணவு சமைத்து, சாப்பிட்டு, ஓய்வுக்குப் பின் படிகளில் ஏறுவர்.
தற்போது சூரிய ஒளி மற்றும் மழையிலிருந்து பக்தர்களைப் பாதுகாக்க அனைத்து படிகளும் கூரையால் மூடப்பட்டுள்ளன. விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இறைவனைத் தரிசிக்கப் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்குச் சிறப்புச் சலுகையும் வழங்கப்படுகிறது.
அலிப்ரி என்றால் இளைப்பாறும் இடம் என்று பொருள்.
ஸ்ரீவாரி பாதால மண்டபம் என்பது அலிபிரியில் உள்ள வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். மூலஸ்தான தெய்வம் பாதாள வெங்கடேசுவர சுவாமி என்று குறிப்பிடப்படுகிறது.[1] புராணத்தின் படி, திருமலையில் ஏகாந்த சேவைக்குப் பிறகு, திருச்சானூரில் உள்ள தனது மனைவியான பதமாவதியைத் தரிசித்து, அலிபிரி படிகள் வழியாக வெங்கடேசுவரர் வந்து, தனது பாதணிகளை இந்த இடத்தில் விட்டுச் செல்வார், எனவே "பாதால மண்டபம்" (தெலுங்கு) என்று பெயர். பாதலு என்பது பாதத்தைக் குறிக்கிறது.[1] திருப்பதியில் இருந்து திருமலை புனிதப்பயணம் செல்லும் பக்தர்கள் இங்கு முதலில் "ஸ்ரீவாரி படுகலுவை" (வேங்கடேசுவரர் அணிந்த பாதணிகள் என்று நம்பப்படுகிறது) தலையில் சுமந்து கொண்டு பிரார்த்தனை செய்வார்கள்.[1] ஸ்ரீகோவிந்தராஜசுவாமி கோயில் கீழ்வரும் இக்கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
பாதால மண்டபத்திற்குக் கிழக்கே அமைந்துள்ள அலிபிரி பாதால மண்டபம் கோயில் வளாகத்தில் லட்சுமி நாராயணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட துணை கோயில் உள்ளது. இக்கோயிலின் நுழைவாயில் மற்றும் தெய்வம் மேற்கு நோக்கி உள்ளது. இது ஆண்டாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட உபகோயில் உள்ளது.[1]
திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும் 2வது மலைச் சாலையில் அமைந்துள்ள அலிபிரி பாதால் மண்டப கோயில் வளாகத்தில் விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது. திருமலை யாத்திரை தொடங்கும் முன் சாலை வழியாகச் செல்லும் பக்தர்கள் இக்கோயிலில் பிரார்த்தனை செய்வார்கள்.[1]
திருமலைக்கு அலிபிரி மெட்லு எனப்படும் அலிபிரியில் இருந்து தொடங்கும் ஒரு பழங்கால காலடி பாதை உள்ளது. வெங்கடேசப் பெருமானுக்கு நேர்ந்த வாக்கை நிறைவேற்றப் பக்தர்கள் திருப்பதியிலிருந்து பாதயாத்திரையாகத் திருமலையை அடைய இந்தப் பாதையில் செல்வார்கள். இது மொத்தம் 3550 படிகளைக் கொண்டுள்ளது. இதன் மொத்த தூரம் 12 கி. மீ. ஆகும். இந்த வழியில் நான்கு கோபுரங்கள் (கோயில் கோபுரங்கள்) உள்ளன. இப்பாதை முழுவதும் கூரை வேயப்பட்டு, சேசாசலம் மலையின் ஒரு பகுதியான ஏழு மலைகளைக் கடந்து செல்கிறது.[2][3][4]
பாதால மண்டபம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி உள்ளிட்ட அனைத்து வைணவ திருவிழாக்களும் கொண்டாடப்படும்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருமலைக்குச் செல்லும் அலிபிரி பாதச்சுவடுகளுக்கு நடைபெறும் திருவிழாவே மெட்லோத்ஸவம் எனப்படும். இது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உள்ள தாச சாகித்திய திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திருவிழாவின் போது பக்தர்கள் குழு ஆன்மிகப் பாடல்களைப் பாடி திருமலைக்கு மலையேறுவது அடங்கும்.[5]
அலிபிரியில், பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோத சக்திகளிடமிருந்து மலைகளைப் பாதுகாக்க, திருமலைக்குள் நுழையும் வாகனங்கள் மற்றும் யாத்ரீகர்களைத் சோதனையிட, 2009-ல் ஒரு பாதுகாப்பு மண்டலம் நிறுவப்பட்டது.[6]