அலியா கலஃப் சலேஹ் (Aliyah Khalaf Saleh) (பிறப்பு: 1956), ஈராக் இராச்சியத்தில் சலா அல்-தின் மாகாணத்தில் உம் குசே என்ற பெயரில் பிறந்த இவர் ஓர் மனிதாபிமானியும், மற்றும் ஈராக்கின் நாட்டுப்புற கதாநாயகியுமாவார்.
இவர் 1956ஆம் ஆண்டில் ஈராக் இராச்சியத்தில் இருந்த ஒரு சுன்னி குடும்பத்தில் திக்ரித் அருகே பிறந்தார். 13 வயதில் இளமை திருமணமான இவருக்கு ஒருபோதும் பள்ளியில் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை. ஈராக்கிய பயங்கரவாதத்தில் தனது கணவர், மகன் மற்றும் மருமகனை இழந்தார். 2014ஆம் ஆண்டில், ஸ்பீச்சர் முகாம் படுகொலைக்குப் பின்னர், இவர் 50க்கும் மேற்பட்ட ஈராக்கிய (குர்துகள், ஷியா முஸ்லிம்கள், யெஜிடிகள் மற்றும் கிறிஸ்தவர்கள்) இராணுவ வீரர்களை மீட்டு, பாதுகாப்பிற்காக செல்ல உதவினார். இவர் சில இளைஞர்களுக்கு பெண்கள் ஆடைகளை கொடுத்து, தனது பண்ணையில் உள்ள பெண்கள் விடுதிகளில் மறைத்து வைத்தார். மற்றவர்களுக்கு ஒரு காட்டில் துளைகளை தோண்டி அதில் மறைத்து வைத்தார். ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆட்சேர்ப்புக்காக வேட்டையாடுகிறார்கள், எனவே அலியா அவர்களில் சிலருக்கு பல்கலைக்கழக அடையாள அட்டைகளைப் பெற்று உள்ளூர் பெயர்களைக் கொடுத்தார். குறுங்குழுவாத சந்தேகங்களிலிருந்து பாதுகாக்க சியாக்களுக்கு சுன்னியைப் போல எப்படிப் பிரார்த்தனை சொல்வது என்று இவர் கற்பித்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக, குர்திஷ் வசமுள்ள கிர்குக்கில் அவர்களை பாதுகாப்பிற்காக வைத்திருந்து , பெண் உறவினர்களால் சூழப்பட்ட லாரிகளில் மறைத்து வைத்தார். தடை விலக்கிக்கொள்ளப்பட்டப் பின்னர், இவர் வசமிருந்த 25 குடும்பங்களும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து வெளியேறினர். குழுவின் தோல்விக்குப் பிறகுதான் அவர்கள் வீடு திரும்பினர். [1]
இந்த சுன்னி பெண்ணுக்கு சியா மத அதிகாரிகள் “தோவா அல்-அஸ்ர்” என்ற மிக உயர்ந்த பட்டத்தை வழங்கினர். மற்றவர்களின் நல்வாழ்வை காக்க தங்களை முன் நிறுத்தும் பெண்களை விவரிக்க இவர் இன்று பயன்படுத்தப்படுகிறார். 2015 சூலையில், பிரதமர் ஹைதர் அல்-அபாடி இவருக்கு ஈராக்கின் பதக்கத்தை வழங்கினார். இவர் 2018இல் சர்வதேச வீரதீர பெண்கள் விருதை வென்றார் . [2] [3] 2019ஆம் ஆண்டில், ஈராக் கலாச்சார அமைச்சர் அப்துல் அமீர் அல்-ஹம்தானி இவரது வெண்கல சிலையை வெளியிட்டார். [4]