அலுபா வம்சம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
200–1444 | |||||||
![]() அலுபா இராச்சியம் | |||||||
தலைநகரம் | மங்களூர், உதயவரே, பர்கூர் | ||||||
பேசப்படும் மொழிகள் | துளு (ஆரம்பகால கல்வெட்டு -12 வது நூற்றாண்டு),[1] கன்னடம் (ஆரம்பகால கல்வெட்டு -7ஆம் நூற்றாண்டுy)[2] | ||||||
சமயம் | சைவ சமயம், சைனம் | ||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||
அரசன் | |||||||
வரலாறு | |||||||
• தொடக்கம் | 200 | ||||||
• முடிவு | 1444 | ||||||
|
அலுபா (Alupa) அலுவா மற்றும் அல்வா என்றும் அழைக்கப்பட்ட இது பழைய கனராவை (கரையோர கருநாடகத்தை) (ஏறத்தாழ கி.பி. 2வது நூற்றாண்டு முதல் 15வது நூற்றாண்டு வரை) ஆண்ட ஒரு மரபினராவர். இவர்கள் ஆட்சி செய்த இராச்சியம் 'அல்வாகேடா அருசசிரா' என அழைக்கப்பட்டது.[3] .[4] துளு நாட்டின் கலாச்சாரப் பகுதி இவர்களின் பிரதேசத்தின் மையமாக இருந்தது. இவர்கள் ஆரம்பத்தில் சுதந்திரமாக இருந்தனர். ஆனால் பனவாசியிலிருந்து வந்த கதம்பர்களின் ஆதிக்கத்தினால், இவர்கள் அவர்களுக்கு சிற்றரசர்களாக மாறினர். பின்னர் இவர்கள் தென்னிந்தியாவின் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களால் சாளுக்கியர்கள், இராஷ்டிரகூடர்கள், போசளர்கள் ஆகியோருக்கு அடிபணிந்தவர்களாக மாறினர். இவர்களின் செல்வாக்கு கடலோர கர்நாடகாவில் சுமார் 1200 ஆண்டுகள் நீடித்திருந்தது. இவர்கள் தாய்வழி மரபுரிமை சட்டத்தை (மருமகத்தாயமுறை) பின்பற்றினர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. அலுபா மன்னர் சோயிதேவனுக்குப் பிறகு அவனது மருமகன் குலசேகர பாங்கிதேவன் (அலுபா இளவரசி கிருஷ்ணாய்தாய் மற்றும் போசள அரசன் மூன்றாம் வீர வல்லாளன் ஆகியோரின் மகன்) பதவிக்கு வந்தான்.[5] துளு நாட்டின் புத்த அலுபா பாண்டியன் என்பவர் இந்த தாய்வழி உறவு முறையை அறிமுகப்படுத்திய பெருமையைப் பெறுகின்றார்.[6] அல்வா என்ற பெயர் இன்று கூட பந்த் [7][8] சமூகத்தினரிடையே இடம் பெற்றுள்ளது.[9] இப்பகுதியை கடைசியாக ஆட்சி செய்த மன்னர் குலசேகரதேவ அலுபேந்திரதேவன் என்பவரைப் பற்றி, பொ.ச. 1444 தேதியிட்ட கல்வெட்டு மூதபித்ரி [10] சைனக் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வம்சத்தின் பெயர் அலுபா, அலுவா, அல்வா, அலுகா மற்றும் அலபா என கல்வெட்டுகளில் பல்வேறு விதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[3] கதம்பர்களுக்கு முன்னர் இவர்களின் தோற்றம் தெளிவாக இல்லை. ஏனெனில் எழுதப்பட்ட சான்றுகள் இல்லை. இரண்டாம் ஆம் நூற்றாண்டின் புவியியலாளர் தொலெமி, துளு நாடு பகுதியை ஒலோகோயிரா என்று அடையாளம் காட்டுகிறார். இது 'அல்வாக்களின் நிலம்' என்ற அல்வா கெடா என்ற வார்த்தையின் திரிபு என்று பரவலாக நம்பப்படுகிறது.
வரலாற்றாசிரியர் பி. குருராஜா பட் கூறுகையில், அலுபா அரச குடும்பம் உள்ளூர் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அவர்கள் "சைவ சமயத்தை" பின்பற்றுபவர்களாக இருக்கலாம். மேலும் 10 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவர்கள் சமண சமயத்தை ஏற்றுக்கொண்டு, பந்த்-நடவா சாதி என்ற பெயரில் அழைக்கப்பட்டனர்.[11] அதேசமயம், பந்த் சமூகத்தில் அலுபா (அல்வா) தலைப்பு இன்று வரை உள்ளது என்று பி.ஏ.சலேட்டோர் குறிப்பிடுகிறார்.[12]
அலுபாக்கள் உச்சத்தில் இருந்த போது வடகன்னட மாவட்டத்தின் ஒரு பகுதியையும், கர்நாடகத்தின் சிமோகாவையும், கேரளாவின் வடக்கு பகுதியையும் கட்டுப்படுத்தியிருந்தாலும், மையப் பகுதி நவீன துளுநாட்டைக் கொண்டிருந்தது. இது மங்களூர், உடுப்பி மாவட்டத்தை உள்ளடக்கியிருந்தது. (இதற்கு முன்பு இது தெற்கு மாவட்டம் என்றும் அழைக்கப்படும் ஒரு மாவட்டமாக இருந்தது. பண்டைய காலங்களில், இப்பகுதி அல்வாகேடா என்றும், ஆட்சியின் பிற்பகுதியில், துளுநாடு என்றும் குறிப்பிடப்பட்டது. இப்பகுதியைக் குறிப்பிடும்போது துளுநாடு என்ற சொல் இன்றும் நடைமுறையில் உள்ளது.
அய்கொளெ மற்றும் மகாகுட்டா கல்வெட்டுகளில் பாதமி சாளுக்கியரின் எழுச்சியின் போது குலத்தின் வரலாறு தெளிவற்ற நிலையில் இருந்து வெளிப்படுகிறது. இது அலுபாக்கள் சாளுக்கியாவின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அவர்களின் சிற்றரசர்களாக மாறியதாகக் கூறுகிறது.[13] இவர்கள் ஆரம்பத்தில் மங்களூரிலிருந்தும் பிற்காலங்களில் உடுப்பியில் உள்ள உதவராவிலும் பின்னர் பர்கூரிலிருந்தும் ஆட்சி செய்தனர். அவர்களின் முதல் முழு நீள கல்வெட்டு கன்னடத்தில் உள்ள வதரசா கல்வெட்டு 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உள்ளது. அவர்கள் பல நூற்றாண்டுகளாக தாய்வழி திருமண உறவைப் பேணி வந்தனர்.[14]
அலுபாக்களின் ஆட்சி நவீன மாவட்டங்களான உடுப்பி, மங்களூர், சிவமோகா, வட கன்னட மாவட்டங்கள் மற்றும் வடக்கு கேரளாவின் ஒரு பகுதி (காசரர்கோடு மாவட்டம்), பயசுவினி ஆறு வரை இருந்தது. இந்திய வரலாற்றில், வேறு எந்த ஒரு வம்சமும் இதுபோல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்யவில்லை. இந்த விதிவிலக்கை மீறும் பதிவு கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக தங்கள் பிரதேசத்தை ஆண்ட இவர்களுக்குச் செல்கிறது. கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில் கர்நாடகாவின் கடலோரப் பகுதிக்கு ஆட்சியாளராக இவர்கள் தோன்றினாலும், 5 ஆம் நூற்றாண்டில் தான் இவர்கள் ஒரு வம்சமாக அறிமுகமானார்கள். (ஆல்மிடி கல்வெட்டு) வேணுபுரத்தின் (மூடுபித்ரே) கல்வெட்டில் காணும் கடைசி ஆட்சியாளரின் பெயர், பொ.ச. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த வம்சத்தைப் பற்றிய இருநூறுக்கும் மேற்பட்ட கல் எழுத்துக்கள் உள்ளன. இதுவரை சுமார் நூற்று இருபது எழுத்துக்கள் மட்டுமே படிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. ஆரம்பகால கன்னட எழுத்துக்களின் மிகச்சிறந்த பதிவு கி.பி 7 ஆம் நூற்றாண்டில் பெல்மன்னுவின் செப்புத் தட்டில் காணப்படுகிறது. 2007 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட ஐந்து செப்புத் தகடுகளின் மற்றொரு தொகுப்பும் உள்ளது. ஆனால் ஆட்சியாளர், உடுப்பி மாவட்டத்திற்குள்ளோ அல்லது அதன் அருகிலே ஆட்சி செய்ததைப் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.
கன்னட மொழியில் முதன்முதலில் அறியப்பட்ட செப்புத் தகடு இரண்டாம் அலுவராசாவைப் பற்றிய தகவல்களுடன் காணப்பட்டது. இது 'பெலமன்னு தகடுகள்' என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தேதியிடப்பட்டுள்ளது என்று டாக்டர் குருராஜ் பட் கூறுகிறார்.[14] பழைய கன்னடம் அல்லது ஹலே (பழைய) கன்னட எழுத்துக்களில் (பொ.ச. 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்) இந்த முழு நீள கன்னட செப்புத் தகடுகள் உடுப்பி மாவட்டம் கர்கலா வட்டம், பெல்மன்னுவைச் சேர்ந்த அலுபா மன்னர் இரண்டாம் அலுவராசாவிற்கு சொந்தமானது. மேலும் அலுபா மன்னர்களின் அரச சின்னமான இரட்டை முகடு மீன்களைக் காட்டுகிறது. பதிவுகள் அரசனை 'அலுபேந்திரன்' என்ற தலைப்பிலும் குறிப்பிடுகின்றன.
அலுபாக்களால் பனவாசி மண்டலத்தை (வட கன்னட மாவட்டத்தின் பனவாசி இராச்சியம்) வைத்திருப்பதைப் பற்றி பேசும் முதல் அறியப்பட்ட கல்வெட்டு, மேற்கு சாளுக்கிய மன்னர் வினயாதித்யாவின் ஆட்சியைச் சேர்ந்தது.[15] சாகர் வட்டத்தின் ஜம்பானியிலிருந்து இந்த கல்வெட்டை டாக்டர் குருராஜ் பட் கண்டுபிடித்தார். கதம்ப மண்டலத்தை வைத்திருக்கும் சித்ரவாகன அலுபேந்திரா பற்றி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், இது ஆட்சியாளரை மேற்கு சாளுக்கிய மன்னருக்கு (பொ.ச. 8 ஆம் நூற்றாண்டு) அடிபணிந்தவராக சுட்டிக்காட்டும் முதல் கல் எழுத்துக்களாகும்.
சில அலுபா கல்வெட்டுகள் பின்வரும் உரலியில் கிடைக்கின்றன: http://www.whatisindia.com/inscription/south_indian_inscription/volume_9/alupas.html
அலுபாக்கள் தங்கள் ஆட்சியில் சில சிறந்த கோயில்களைக் கட்டினர். பர்கூரில் உள்ள பஞ்சலிங்கேசுவரர் கோயில், பிரம்மவாரில் உள்ள பிரம்மலிங்கேசுவரர் கோயில், கோட்டிநாதத்தில் உள்ள கோதேசுவரர் கோயில், சூரத்கலில் உள்ள சதாசிவன் கோயில் ஆகியவை. இவர்கள் பல நூற்றாண்டுகளாக கடவுள் சிற்பங்களில் பல்வேறு சிற்ப பாணியைப் பயன்படுத்தினர்.[14]
நவீன மங்களூர் மாவட்டத்தில், 8 ஆம் நூற்றாண்டில் கன்னடத்தில் எழுதப்பட்ட அலுபா வம்சத்தின் ஆரம்ப கல்வெட்டுகளைக் கொண்ட மிகப் பழமையான கோயில்களில் பொலாலி ராசராசேசுவரி கோயிலும் ஒன்றாகும். மேலும் அலுபா மன்னர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் இந்த கோயிலை வளப்படுத்தினர்.
நவீன மங்களூர் மாவட்டத்தில், அலுபாக்களின் சகாப்தத்தைச் சேர்ந்த மற்ற முக்கியமான மற்றும் பழைய கோவில் ஒன்று கத்ரியின் அமைந்துள்ளது. குந்தவர்மன் என்ற மன்னரால் நிறுவப்பட்ட பல சிறந்த வெண்கல சிலைகள் இந்த கோவிலில் உள்ளன. இது பொ.ச. 968 தேதியிட்ட அவரது கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. உலோகேசுவர்ர சிலையின் கல்வெட்டில், குந்தவர்மன் மன்னன் துணிச்சலில் அருச்சுனனுடன் ஒப்பிடப்படுகிறான்.
சில சமயங்களில், அரசியல் நிலைமை மற்றும் கோரிக்கையைப் பொறுத்து அலுபாக்கள் தங்கள் தலைநகரை மங்களூரிலிருந்து உதயவரா என்ற பகுதிக்கும், பின்னர் பர்கூருக்கும் மாற்றினார். தங்கள் ஆளும் இடத்திற்கு மையமாக இருக்க, அவர்கள் தங்கள் தலைநகரை பர்கூருக்கு மாற்றினர். அங்கிருந்து வடக்கு கன்னட மாவட்டத்தில் அங்கோலா வரை பரவியிருக்கும் பரந்த நிலப்பரப்பைக் கவனிக்க முடிந்தது. இந்த காலகட்டத்தில், அவர்கள் பர்கூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் (இது அவர்களின் தலைநகர்) பல கோயில்களுக்கு ஆதரவளித்தனர். நீலாவரத்தில் அமைந்துள்ள மகிசாசுரமர்தினி கோயிலில் பிற்காலத்தில் பல அலுப கல்வெட்டுகள் கிடைத்தன.
இந்த கோயில் கி.பி 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அலுபா பிரதேசத்தின் பழமையான கோயில்களில் ஒன்றாகும். கோயிலில் அனந்தேசுவரருக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டிடக்கலை தனித்துவமானது. மேலும், 7 ஆம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பாகும் வட கன்னடத்தின் அவ்யக பிராமணர்கள் பொ.ச. 7 ஆம் நூற்றாண்டில் அலுபாக்களால் ஈர்க்கப்பட்டனர். மேலும் அல்வகேத மக்களுக்கு வேத அறிவை வழங்கியதற்காக இவர்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டது. அலுபர்கள் பல கோயில்களைக் கட்டி, இந்த பிராமணர்களை கவனித்துக் கொள்ள அனுமதித்தனர். விட்டலா பஞ்சலிங்கேசுவரர் கோயில் மிகப் பழமையான கட்டமைப்பாகும். இது பிற்கால உள்ளூர் வம்சங்களான ஹெகடேக்களால் புதுப்பிக்கப்பட்டது.
இது, உடுப்பி கிருஷ்ணர் கோயிலின் பிரதான நுழைவாயிலுக்கு எதிரே, சந்திரமௌலீசுவரர் கோயிலுக்கு அருகில், அமைந்துள்ள பழமையான அலுபா கோயில்களில் ஒன்றாகும். இது உடுப்பியில் உள்ள மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகும். முக்கிய சிலையான இலிங்கம், சிவபெருமானின் முகம் போல தோற்றமளிக்கிறது. இடதுபுறத்தில் ஒரு சிறிய சாரளத்திலிருந்து, மத்துவர் மறைந்த இடம் காணப்படுகிறது.
விட்டலா பஞ்சலிங்கேசுவரர் கோயிலும், இக்கோயிலும் யானை-பின்புற வகை வளைவு அமைப்பைக் கொண்டுள்ளன. இதே போன்ற ஒத்த கட்டமைப்புள்ள மற்றொரு கோவில் அய்கொளாவில் உள்ள துர்க்கை கோவிலில் காணப்படுகிறது. கட்டமைப்பு 7வது நூற்றாண்டில் இதை கொண்டு செல்கிறது. தெற்கு கன்னட கோயில்களின் கட்டிடக்கலையின் தனித்துவமான குறிப்பிடத்தக்க அம்சம் அவற்றின் கூரையாகும். அதிக மழை பெய்யும் நிலப்பரப்பில் இருப்பதால், கோவில் கூரைகள் புல், களிமண் ஓடுகள் மற்றும் இறுதியில் செப்புத் தகடுகளிலால் உருவாகின.
இவர்கள் பொ.ச. 8 ஆம் நூற்றாண்டில் நாணயங்களை புழக்கத்தில் வைத்திருந்தனர். மேலும், பொ.ச. 14 ஆம் நூற்றாண்டு வரை இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்தார். இவர்களின் நாணயங்கள் "ஒரு பரவலான தாமரை மலரின் மீது இரண்டு மீன்கள், ஒரு அரச குடைக்கு கீழே" என்ற வம்ச சின்னத்தை சுமந்தன. இதுவரை 180 தனித்துவமான நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 175 நாணயங்கள் பிரபு மற்றும் பை எழுதிய புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சரியான குறிப்பு சுட்டிகள் கொண்ட விரிவான வரலாறு அதே புத்தகத்தில் காணப்படுகிறது.
கடலோர கர்நாடகாவில் மேலைச் சாளுக்கியர்களின் சிற்றரசர்களான அலுபாக்கள் கன்னடம் மற்றும் நகரி எழுத்துக்களுடன் நாணயங்களை வெளியிட்டனர். கன்னட புராணக்கதைகளுடன் கூடிய நாணயங்கள் மங்களூரிலும், உடுப்பியின் நகரி புராணக்கதையையும் கொண்டவை என்று தெரிகிறது. கன்னடம் இவர்களின் நிர்வாக மொழியாக இருந்தது. 'பகோடாக்கள்' மற்றும் 'பனம்கள்' அனைத்து அலுபா மன்னர்களின் பொதுவான நாணயங்களாக இருந்தன. நாணயங்களின் மேற்புறம் "இரட்டை மீன்கள்" என்ற அரச சின்னத்தை சுமந்து சென்றது. மேலும், தலைகீழாக "சிறீ பாண்டிய தனஞ்சயா" என்று நகரி அல்லது பழைய கன்னடத்தில் எழுதப்பட்டிருந்தது.[14]
பொ.ச. 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தங்க நாணயங்களை வெளியிட்ட மூன்று வம்சங்களில் அலுபாக்களும் ஒன்றாகும். நாணயங்களுக்குப் பயன்படுத்திய தங்கம் உரோமானியர்கள், அரேபியர்கள் மற்றும் அருகிலுள்ள மேலைக் கங்க இராச்சியத்திலிருந்து வர்த்தகத்தின் மூலம் வந்துள்ளது. தெற்கின் வேறு எந்த பண்டைய வம்சங்களும் அலுபாக்கள் மற்றும் மேலைக் கங்கர்கள் போன்ற பல வகையான தங்க நாணயங்களை வெளியிடவில்லை. அலுபாக்கள் மற்றும் மேலைக் கங்கர்கள் ஆகிய இருவரின் நாணயங்களிலும் எழுத்துகள் உள்ளன. இவை அதன் வெளியீட்டு காலத்தை கண்டுபிடிக்க உதவுகின்றன. துரதிர்ஷ்டவசமாக இந்த நாணயங்கள் சாளுக்கியர் அல்லது போசளர்களுடன் ஒப்பிடும்போது அதிக கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் நிச்சயமாக, அவை நாணயங்களை வெளியிடுவதற்கான முன்மாதிரி அல்லது அடிப்படையாக பிற்கால வம்சங்களை ஊக்கப்படுத்தியுள்ளன.