ஆள்கூறுகள்: 5°02′N 100°35′E / 5.033°N 100.583°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
மாவட்டம் | கிரியான் மாவட்டம் |
உருவாக்கம் | 1840 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | http://www.mdkerian.gov.my/en |
அலோர் பொங்சு (ஆங்கிலம்: Alor Pongsu; மலாய்: Alor Pongsu) மலேசியா, பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம். பாகன் செராய் நகரத்தில் இருந்து 8 கி.மீ.; பினாங்கு பெருநகரத்தில் இருந்து 63 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
இந்த நகரம் அண்மைய காலங்களில் மிகத் துரிதமான வளர்ச்சி பெற்று வருகிறது.[1] கிரியான் நெல் அறுவடைத் திட்டத்தின் கீழ், அலோர் பொங்சு நகரம் ஒரு முக்கியமான நெல் சேகரிப்பு மையமாகவும் விளங்கி வருகிறது.
கிரியான் நீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் (Kerian Irrigation Scheme) அலோர் பொங்சு சுற்று வட்டாரங்களில் அதிக அளவில் நெல் பயிர் செய்யப் படுகிறது. கிரியான் நீர்ப் பாசனத் திட்டம் என்பது மலேசியாவில் மிகப் பழைமையான நீர்ப் பாசனத் திட்டம் ஆகும்.[2]
1900-ஆம் ஆண்டுகளில் அலோர் பொங்சு நகரத்திற்கு அருகில் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. அந்தத் தோட்டங்களில் தமிழர்கள் கணிசமான அளவில் தொழில் புரிந்தார்கள். அலோர் பொங்சு தோட்டம் (Alor Pongsu Rubber Estate); ஐசெங் தோட்டம் (Isseng Rubber Estate) ஆகியவை குறிப்பிடத் தக்க தோட்டங்களாகும்.
1898-ஆம் ஆண்டில் ஐசெங் தோட்டத்தில் மட்டும் 150 தமிழர்கள் வாழ்ந்து இருப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் சான்று பகிர்கின்றன.[3] 1980-ஆம் ஆண்டுகளில் உருவான ரப்பர் தோட்டத் துண்டாடல்களினால் தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது.
1940-ஆம் ஆண்டுகளில் இங்கு ஒரு தமிழ்ப்பள்ளி இருந்துள்ளது. முதலாம் இரன்டாம் வகுப்புகளில் 26 மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்டு உள்ளது. திரு.இரா.தண்ணீர்மலை என்பவர் தலைமையாசிரியராகச் சேவை செய்து உள்ளார்.
இப்பள்ளி 1941-ஆம் ஆண்டு வரை அலோர் பொங்சு பிரியா தோட்டத் தமிழ்ப்பள்ளி (Alor Pongsu Briah Estate Tamil School) எனும் பெயரில் இயங்கி வந்துள்ளது.[4] இப்போது அந்தப் பள்ளியின் பெயர் ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி என மாற்றம் கன்டுள்ளது.