வீராஹண்டிகே இன்னோல் அவிஷ்கா பெர்னாண்டோ (Weerahandige Inol Avishka Fernando பிறப்பு: ஏப்ரல் 5, 1998), பொதுவாக அவிஷ்கா பெர்னாண்டோ என அறியப்படும் இவர் ஒரு தொழில்முறை இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார், இவர் தற்போது இலங்கை தேசிய அணிக்காக சர்வதேச அளவில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது 20 போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆனால் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தற்போது விளையாடவில்லை. இவர் உள்ளூர் துடுப்பாட்டப் போட்டிகளில் கோல்ட்ஸ் துடுப்பாட்ட சங்கம் சார்பாக விளையாடும் இவர், இலங்கை துடுப்பாட்ட அணிக்காக 2016 ஆகஸ்டில் சர்வதேச அளவில் அறிமுகமானார். மொரட்டுவாவின் புனித செபாஸ்டியன் கல்லூரியில் கல்வி பயின்றார் .
இலங்கை இளைஞர் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் 1379 ஓட்டங்களை இதன் மூலம் இளைஞர் ஒருநாள் வரலாற்றில் இலங்கைக்காக அதிக ஓட்டங்கள் எடுத்த சாதனையை அவிஷ்கா பெர்னாண்டோ பெற்றுள்ளார்.[1] இளைஞர் ஒருநாள் வரலாற்றில் இலங்கை அணிக்காக நான்கு நூறு ஓட்டங்களை அடித்துள்ளார். இதன்மூலம் அதிக நூரு ஓட்டங்கள் அடித்த சாதனையும் இவருக்கு உண்டு.[2]
2017ஆம் ஆண்டில் நடைபெற்ற வளர்ந்துவரும் ஆசிய அணிகள் ஏசிசி கோப்பை துடுப்பாட்ட தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியை வீழ்த்தி வாகையாளர் ஆனது. இந்த துடுப்பாட்ட போட்டியில் இவர் இலங்கை அணி சார்பாக விளையாடியுள்ளார்.[3]
24 பிப்ரவரி 2018 அன்று நடைபெற்ற 2017–18 எஸ்.எல்.சி ட்வென்டி 20 போட்டியில் கோல்ட்ஸ் துடுப்பாட்ட அணி சார்பாக இவர் 20 20 போட்டிகளில் அறிமுகமானார்..
ஏப்ரல் 2018 இல், 2018 சூப்பர் ஃபோர் மாகாண ஒருநாள் போட்டிக்கான கண்டி அணியில் இடம் பெற்றார் . ஆகஸ்ட் 2018 இல், இவர் கொழும்பின் அணி சார்பாக 2018 எஸ்.எல்.சி டி 20 லீக்கில் இவர் இடம் பெற்றார் . 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற சூப்பர் மாகாண ஒருநாள் துடுப்பாட்ட தொடரில்இவர் கொழும்பு அணி சார்பாக விளையாடினார்.[4]
2016 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையின் காலிறுதியில் 19 வயதிற்கு உட்பட்ட இலங்கைத் துடுப்பாட்ட அணி, 19 வயதிற்குட்பட்ட இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் 95 பந்துகளில் 95 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். மேலும் அதே ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்பொழுது 19 வயதிற்குட்பட்ட இலங்கை அணியானது தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் வென்று சாதனை படைத்தது.அந்தத் தொடரில் இவர் இரண்டு போட்டிகளிலும் தொடர்ச்சியாக 100 ஓட்டங்களை அடித்தார்.
18 வயதாக இருந்தபோது இவர், ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்காக இலங்கை ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எந்தவொரு டி 20 அல்லது பட்டியல் அ அல்லது முதல் தர துடுப்பாட்டப் போட்டியிலும் விளையாடாமல் தேசிய ஒருநாள் அணிக்கு தனது முதல் அழைப்பைப் பெற்றார். 31 ஆகஸ்ட் 2016 அன்று தம்புல்லாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கைக்காக தனது ஒருநாள் சர்வதேச அறிமுகமானார். மிட்செல் ஸ்டார்க்கின் இரண்டு பந்துகளை எதிர்கொண்ட பின்னர் இவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.[5]