அவுரத் அணிவகுப்பு (Aurat March) என்பது சமீபத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சமூக / அரசியல் ஆர்ப்பாட்டமாகும். இது சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட இலாகூர், ஐதராபாத், சுக்கூர், கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பாக்கித்தானின் பல்வேறு நகரங்களில் ஏற்பாடு செய்யப்படுகிறது. [1] [2] [3] [4] [5] [6] [7] முதல் அவுரத் அணிவகுப்பு 2018 மார்ச் 8 அன்று கராச்சியில் நடைபெற்றது. [8] 2019 ஆம் ஆண்டில், இது இலாகூர் மற்றும் கராச்சியில் ஹம் அவுரத்தீன் (நாங்கள் பெண்கள்) என்ற மகளிர் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் இஸ்லாமாபாத், ஐதராபாத், குவெட்டா, மர்தான், மற்றும் பைசாலாபாத் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் பெண்கள் ஜனநாயக முன்னணியாலும், பெண்கள் நடவடிக்கை மன்றத்தாலும் முன்னெடுக்கப்பட்டது. இந்த அணிவகுப்புக்கு மகளிர் சுகாதாரத் தொழிலாளர் சங்கம் ஒப்புதல் அளித்தது. மேலும் பல பெண்கள் உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியது. [9] [10]
அணிவகுப்பு பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கூடுதல் பொறுப்புக்கூற வேண்டும் என்றும், பாதுகாப்புப் படையினரின் கைகளிலும், பொது இடங்களிலும், வீட்டிலும், பணியிடத்திலும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை அனுபவிக்கும் பெண்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது. கூட்டம் சிதறடிக்கப்படும் வரை அதிகமான பெண்கள் அணிவகுப்பில் சேர விரைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் (அதே போல் ஆண்களும்) 'கர் கா காம், சப் கா காம்', மற்றும் 'பெண்கள் மனிதர்கள், மரியாதை அல்ல' போன்ற சொற்றொடர்களைக் கொண்ட சுவரொட்டிகளை எடுத்துச் சென்றனர்.
ஃபோர்ப்ஸில் 2016 பிப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், பத்திரிகையாளர் சோனியா ரெஹ்மான் எழுதினார். "உலகம் காதலர் தினத்தை கொண்டாடும் அதே வேளையில், பல பாக்கித்தானிய பெண்கள் தங்கள் சொந்த உறவினர்களால் ஆணவக் கொலையாகிறார்கள்". [11] ஒரு ஆணவக் கொலை என்பது ஒரு குடும்பத்தின் உறுப்பினரை அவர் குடும்பத்துக்கு இழிவு கொண்டு வந்தார் என்று கருதி அக்குடும்பத்தின் உறுப்பினர்கள் சிலர் கொலை செய்வதைக் குறிக்கிறது. பாதிக்கப்பட்டவரின் மரணம் குடும்பத்தின் நற்பெயரையும் கௌரவத்தையும் மீட்டெடுப்பதற்கான ஒரு வழியாக கருதப்படுகிறது. உலகின் ஆணவக் கொலை மிக அதிகமாக நடக்கும் இடங்களில் பாக்கித்தான் உள்ளது. பாக்கித்தான், 60 சதவீத மக்கள் 30 வயதிற்குட்பட்டவர்களும், பாதி பேர் 18 வயதிற்குட்பட்டவர்களும், பாரம்பரியங்களை விட உலகளாவிய போக்குகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். [12]
பாக்கித்தானில் கலாச்சாரப் போரின் ஒரு முக்கிய புள்ளியாக ஆண்டுதோறும் காதலர் தினம் செயல்படுகிறது. [13] மதவாதிகளுக்கு இது ஒரு கொண்டாட்டம் என்று தியா ஹடிட் கூறுகிறார். பழமைவாதிகள் இசுலாமிய அடையாளத்தின் பராமரிப்பாளர்களாக தங்களை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். [14] பல பாக்கித்தானியர்கள் காதலர் தின விழாவைக் கொண்டாடும் அதே வேளையில், பாக்கித்தான் அதிகாரப்பூர்வமாக காதலர் தினத்தை தடைசெய்துள்ளது. மேலும், இசுலாமிய மரபுவழி [15] இவ்வகைக் கொண்டாட்டங்களைத் தடுக்க நடவடிக்கையும் எடுத்துள்ளது. [16]
பாக்கித்தான் சமுதாயத்தில் பழமைவாதிகள் மற்றும் தீவிரவாத நிறுவனங்களால் பெண்களின் சுதந்திரம் அவமதிக்கப்படுகிறது. கவனம் என்பது ஒரு குறிப்பிட்ட நாளில் பெண்களின் சுதந்திரமான வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதல்ல, மாறாக பெண்களை பொது வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைப்பதன் மூலம் ஆண் ஆதிக்கத்தை வலுப்படுத்த அடிபணிய வைப்பதாகும். கற்பு மற்றும் குடும்ப கௌரவத்தை வலுப்படுத்தும் பர்தாவின் (தனிமை) சிக்கலான விதிகள், பெண்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் சமூக-கலாச்சார ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்தன. அவர்களிடையே குடிமை, சட்ட மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய புரிதல் இல்லாததால், சமுதாயத்தில் பங்கேற்பதற்கான பெண்களின் வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டது. மேலும் அவர்கள் போதிய உதவியின்றி மற்றவர்களால் சுரண்டல், அடக்குமுறை மற்றும் தவறான கட்டுப்பாட்டுக்கு ஆளாகின்றனர். [17] [18] தொழில்நுட்ப ரீதியாக, காதல் என்பது இசுலாத்தில் ஹராம் அல்ல (தவிர்க்கப்பட்டது). ஆனால் பாலினப் பிரித்தல் மற்றும் பாலினக் கலப்பு தடைகள் முஸ்லிம் பெண்களின் சுதந்திரத்தைத் தடுக்கின்றன. பெண்களின் பொது இடங்களுக்கான வருகை கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இசுலாத்தின் பழமைவாத, கடுமையான விளக்கங்கள் பெண்களின் நடத்தைக்கு வரம்புகளை உருவாக்குகின்றன. பழமைவாத பார்வையில், பெண்கள் தங்கள் முகங்களைக் காட்ட அனுமதிக்கப்படுவதில்லை. தொடர்பு அவசியம் இல்லாதவரை தொடர்பில்லாத ஆண்களுடன் பேச அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் அவர்களது சொந்த வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய இயலாது. ஏனெனில் இது குடும்பத் தலைவரின் முடிவாகும்.