இதழாசிரியர் | சூலியானா எம் சன், முனைவர் ரெபாக்கா தன், முனைவர் தாங் இயூ சங், முனைவர் சிம் சூசென், முனைவர். |
---|---|
வகை | அறிவியல் |
இடைவெளி | வாராந்திரம் (இணையத்தில்) மற்றும் காலாண்டு அச்சில் |
முதல் வெளியீடு | மார்ச்சு 16, 2011 |
நிறுவனம் | ஆசிய அறிவியல் தனியார் வெளியீட்டு நிறுவனம். |
நாடு | சிங்கப்பூர் |
மொழி | ஆங்கிலம் |
வலைத்தளம் | www |
ஆசிய விஞ்ஞானி (Asian Scientist) என்பது சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஓர் ஆங்கில மொழி பத்திரிகை ஆகும்.
ஆசிய விஞ்ஞானி, மார்ச் 2011 இல் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தின் (எம்ஐடி) முன்னாள் மாணவர்கள் அமைப்பால் தொடங்கப்பட்டது. ஆசிய விஞ்ஞானி தனியார் வெளியீட்டு நிறுவனம் இப்பத்திரிகையை வெளியிட்டது[1][2]. சிங்கப்பூரை அடித்தளமாகக் கொண்ட தொழில்முறை விஞ்ஞானப் பத்திரிகையாளர்கள் அடங்கிய குழுவொன்று இப்பத்திரிகையை நிர்வகிக்கிறது. மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இதற்கு பங்களிக்கிறார்கள்[3].
வளர்ந்துவரும் ஆசிய விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கையை இப்பத்திரிகை வெளியீடு பிரதிபலித்தது. வேகமாக வளர்ந்துவரும் மக்கள் சமூகத்தின் நேரம், ஆர்வம் என்ற இரண்டு கூறுகளையும் முன்னிறுத்தி செய்திகளை வெளியிட்டது.[4] உலகத்தில் வெளிவரும் பத்திரிகைகளில் நான்கில் ஒரு பங்கு பத்திரிகைகள் ஆசியாவிலிருந்து வெளிவருகின்றன என்றும் உலக அறிவியல் ஆய்வறிஞர்களில் மூன்றில் ஒரு பங்கு அறிஞர்கள் ஆசியர்கள் என்றும் 2010 ஆம் ஆண்டில், அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின் முக்கிய அறிவியல் மற்றும் பொறியியல் குறிகாட்டிகள் அறிக்கை தெரிவிக்கிறது. மதிப்புமிக்க ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் வளர்ந்துவரும் ஆசியநாடுகள் எட்டில் ஏற்பட்டுவந்த முன்னேற்றத்தை அறிவியலின் இம்முகம் பிரதிபலித்தது.
சமீபத்திய ஆண்டுகளில் மிகப் பெரிய உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வெற்றிகள் "ஆசிய-10" நாடுகளில் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க தேசிய அறிவியல் வாரியம் வெளியிட்ட அறிவியல் மற்றும் பொறியியல் குறிகாட்டிகள் 2012 அறிக்கை தெரிவிக்கிறது.[5] சீனா, இந்தியா, இந்தோனேசியா, சப்பான், மலேசியா, பிலிப்பைன்சு, சிங்கப்பூர், தென் கொரியா, தைவான், தாய்லாந்து என்பவை அந்த பத்து நாடுகளாகும். 1999 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இவ்வளர்ச்சி தெளிவாகத் தெரிந்தது. உதாரணமாக, உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் அமெரிக்காவின் பங்கு இக்காலத்தில் 38 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாகக் குறைந்தது. ஆனால் ஆசியாவின் பங்கோ 24 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்ந்தது.
அனைத்துலக அறிவியல் வெளியீட்டாளர்கள் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 இல் ஆசிய விஞ்ஞானி பத்திரிகைக்கு தொடக்க நிதியை வழங்கினர். சிங்கப்பூர் தலைமையகத்தில் தன்னுடைய செயல்படுகளை விரிவுபடுத்துவதற்காக உலக அறிவியல் வெளியீட்டு நிறுவனம் இத்தொகையை வழங்கியது.[6]
சனவரி 2014 இல் விஞ்ஞானிகள், உடல்நல மருத்துவர்கள் மற்றும் மாணவர்களை மையமாகக் கொண்ட தனது மிகமுக்கியமான காலாண்டு அச்சுப் பத்திரிகையை இந்நிறுவனம் வெளியிட்டது[7].உயிர்மருத்துவ அறிவியலை மையமாகக் கொண்டு வெளிவந்த இப்பத்திரிகையின் முதல் இதழ், சிங்கப்பூர் மற்றும் மலேசிய ஊடகங்களில் ஆசியாவின் முதல் அறிவியல் இதழ் என்று பாராட்டுடன் வெளிவந்தது.[8][9] ஆசிய விஞ்ஞானிகள் என்ற முத்திரையுடன் புத்தகங்களை வெளியிட வேண்ட்மென இந்நிறுவனம் முடிவு செய்து முதலாவது புத்தகத்தை ஆகத்து 2015 இல் வெளியிடுவது என்று திட்டமிட்டது. உள்ளூர் விஞ்ஞானிகளின் பெயர்களை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் இப்புத்தகத்தில் 25 சிங்கப்பூர் அறிவியல் முன்னோடிகள் இடம்பெற வேண்டும் எனவும் விரும்பியது.
சிங்கப்பூர் 50 என்ற சுதந்திரம் அடைந்த பொன்விழாவைக் கொண்டாட்டத்திற்காக சமூக அபிவிருத்தி அமைச்சகம், சிங்க்ப்பூரின் இளமை மற்றும் விளையாட்டுத் துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதியத்தின் உதவியால் இப்புத்தக வெளியீடு சாத்தியமானது. டாக்டர் சூலியானா சன் மற்றும் டாக்டர் ரெபாக்கா தான் ஆகிய இருவரும் இப்புத்தகத்திற்கு ஆசிரியர்களாக இருந்தனர்[10]
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 இல் இந்நிறுவனம் சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து ஆசிய விஞ்ஞானியில் எழுத்தாளர்களுக்கான முதலாவது பரிசுப் போட்டியை அறிவித்தது[11]. பரிசுகளை உலக அறிவியல் வெளியீட்டு நிறுவனம் கொடையாக வழங்கியது. போட்டி ஆசியாவில் வாழும் எவரும் கலந்து கொள்ளும் விதமாக அறிவிக்கப்பட்டது. அறிவியல் தொடர்பான தலைப்புகளில் 1000 முதல் 1500 வார்த்தைகளில் படைப்புகள் வரவேற்கப்பட்டன. போட்டியில் கலந்து கொள்ள கடைசி நாள் சூன் 2015 எனவும் நிர்ணயிக்கப்பட்டது.