ஆசியாவில் கிறித்தவம் (Christianity in Asia) என்பது இயேசு கிறிஸ்துவைக் கடவுளின் மகனாக ஏற்று வழிபடுகின்ற கிறித்தவ சமயம் ஆசியக் கண்டத்தில், அதுவும் குறிப்பாக மேற்கு ஆசியாவில் தோன்றி, இயேசுவின் சீடர்களின் பணி வழியாக ஆசியா முழுவதும் பரவி நிலைபெற்றதைக் குறிக்கிறது.
மேற்கு ஆசியாவில் தொடக்க காலக் கிறித்தவ மையங்களாக அமைந்தவை எருசலேம், அந்தியோக்கியா போன்ற நகரங்கள் ஆகும்.
மேலும் கிழக்காக, பார்த்தியப் பேரரசிலும் (இன்றைய ஈரான் நாடு), இந்திய நாட்டிலும் கிறித்தவ சமயம் இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவராகிய புனித தோமாவின் மறைப்பணி வழியாகப் பரவியது என்று மரபு கூறுகிறது.
கிபி 301இல் ஆர்மீனியா நாடும், கிபி 327இல் ஜோர்ஜியா நாடும் கிறித்தவத்தைத் தம் நாட்டு மதமாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டன.
கிபி 431இல் எபேசு நகரில் ஒரு முக்கியமான பொதுச்சங்கம் நிகழ்ந்தது. அது இயேசு கிறிஸ்து உண்மையிலேயே கடவுள் தன்மையும் மனிதத் தன்மையும் கொண்டுள்ளார் என்று அறிக்கையிட்டது. மனிதராகவும் அதே நேரத்தில் கடவுளாகவும் விளங்குகின்ற இயேசு ஒரே தெய்விக ஆளாக உள்ளார் என்பதும், அதனால் இயேசுவின் தாய் ஆகிய மரியாவைக் "கடவுளின் தாய்" என்று அழைத்துப் போற்றுவது சரியே என்றும் சங்கம் வரையறுத்தது. ஆனால் நெஸ்டோரியக் கொள்கை என்னும் கோட்பாடு மேற்கூறிய போதனைக்கு எதிராக எழுந்தது. அதன்படி, இயேசு கிறிஸ்துவில் மனித ஆள், தெய்விக ஆள் என்று இரு ஆள்கள் உள்ளனர்; அவர்கள் இருவரும் "அன்பு" என்னும் பிணைப்பால் தொடர்புகொண்டுள்ளனர்.
நெஸ்டோரியக் கொள்கையைக் கண்டனம் செய்து, அது "தப்பறை" என்று எபேசு பொதுச்சங்கம் (431) போதித்தது. இவ்வாறு நெஸ்டோரியக் கொள்கை கத்தோலிக்க திருச்சபையால் "திரிபுக் கொள்கையாக" (heresy) கணிக்கப்பட்டது.
நெஸ்டோரியக் கொள்கையின் காரணமாக கிறித்தவத்தில் பிளவு ஏற்பட்டது. எபேசு பொதுச்சங்கத்தின் முடிவுகளை ஏற்ற மேற்குத் திருச்சபை, நெஸ்டோரியக் கொள்கைகளை ஏற்ற கிழக்குத் திருச்சபை என்னும் பிளவு நிகழ்ந்தது.
நெஸ்டோரிய சபையினர் கிபி 7ஆம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியரிடையே கிறித்தவத்தைப் பரப்பினர். அதுபோலவே, சீனாவிலும் டாங் வம்சத்தினர் (Tang Dynasty) காலத்தில் (618-907) நெஸ்டோரிய கிறித்தவம் பரவியது.
மங்கோலியர்கள் பொதுவாக சமய சகிப்புத் தன்மை கொண்டிருந்தனர். மங்கோலிய இனக்குழுக்கள் பலவும் கிறித்தவத்தைத் தழுவின. செங்கிஸ் கான் என்னும் மங்கோலியப் போர்த்தலைவரின் பேரனாகிய மோங்கே கான் காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டில், கிறித்தவம் மங்கோலியாவில் ஓரளவு செல்வாக்குடையதாய் விளங்கியது.
அதே காலகட்டத்தில் மேற்கு திருச்சபையையும் கிழக்கு திருச்சபையையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஐரோப்பாவிலிருந்து கிறித்தவ மறைபரப்பாளர்கள், குறிப்பாக பிரான்சிஸ்கன் சபை, தொமீனிக்கன் சபை (சாமிநாதர் சபை), இயேசு சபை ஆகிய துறவற சபைகளைச் சார்ந்த குருக்களும் சபை உறுப்பினர்களும் ஆசிய நாடுகளுக்குக் கிறித்தவத்தைக் கொண்டு சென்றார்கள்.
18ஆம் நூற்றாண்டில் எசுப்பானிய மறைபரப்பாளர்கள் பிலிப்பீன்சு தீவுகளில் கிறித்தவத்தைப் பரப்பினர். கொரியா நாட்டுக்கு கத்தோலிக்க திருச்சபை சீனாவிலிருந்து 1784இல் பொதுநிலையினரால் கொண்டுவரப்பட்டதாகத் தெரிகிறது. சுமார் 50 ஆண்டுகளாக அச்சபை குருக்களின்றி செயல்பட்டது.
இன்று, கீழ்வரும் ஆசிய நாடுகளில் கிறித்தவம் முக்கிய மதமாக விளங்குகிறது:
குறிப்பிடத்தக்க சிறுபான்மையினராகக் கிறித்தவர்கள் கீழ்வரும் ஆசிய நாடுகளில் உள்ளார்கள்:
கிறித்தவம் தொடக்க காலத்தில் பரவியபோது ஒரு முக்கியமான மையமாக விளங்கியது அந்தியோக்கியா நகரம் ஆகும். இது கிரேக்க பண்பாட்டைச் சார்ந்த செலூசிட் பேரரசின் தலைநகராக விளங்கியது. அந்தியோக்கியா இன்றைய துருக்கி நாட்டில் அமைந்துள்ளது. அந்தியோக்கியாவுக்குக் கிறித்தவ சமயத்தைக் கொண்டு சென்றது புனித பேதுரு என்றொரு மரபு உள்ளது. அதன் அடிப்படையில் அந்தியோக்கியாவின் மறைமுதுவர் இன்றும் திருச்சபையின் தலைவர் என்னும் உரிமை கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.[1].
அந்தியோக்கியா நகருக்குச் சென்று கிறித்தவத்தைப் பரப்பிய முக்கியமான திருத்தூதர் புனித பவுல் ஆவார். அவரோடு புனித பர்னபாவும் அந்தியோக்கியாவில் கிறித்தவத்தை நிறுவ துணைபுரிந்தார். அந்தியோக்கியாவில்தான் முதன்முறையாக இயேசுவின் சீடர்கள் "கிறித்தவர்கள்" என்னும் பெயரால் அழைக்கப்பட்டனர் [2].
கிறித்தவர்களின் எண்ணிக்கை விரைவில் பன்மடங்காகப் பெருகியது. முதலாம் தியோடோசியுஸ் காலத்தில் (347-395) கிறித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000 ஆக இருந்தது என்று காண்ஸ்டாண்டிநோபுள் பேராயர் புனித கிறிசோஸ்தோம் (347-407) என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
கிபி 252-300 ஆண்டுக் காலத்தில் அந்தியோக்கியா நகரில் திருச்சபை தொடர்பான ஐந்து சங்கங்கள் நிகழ்ந்தன. தொடக்க காலக் கிறித்தவத்தின் ஐம்பெரும் நகர்களுள் அந்தியோக்கியாவும் ஒன்றாகத் திகழ்ந்தது. மற்ற நான்கு நகரங்களும் எருசலேம், அலெக்சாந்திரியா, காண்ஸ்டாண்டிநோபுள், உரோமை ஆகியவை.
ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியாகிய காக்கசஸ் மண்டலத்தில் ஆர்மீனியா நாடு கிபி 321இலும், ஜோர்ஜியா நாடு 327இலும் கிறித்தவத்தைத் தம் நாட்டு மதமாக ஏற்றன. இயேசுவின் சீடர்களுள் ததேயு, பர்த்தலமேயு ஆகிய இருவர் கிபி 40-60 காலகட்டத்தில் ஆர்மீனியாவில் கிறித்தவத்தைப் பரப்பினார்கள். கிறிஸ்துவின் இரு திருத்தூதர்கள் அங்கு கிறித்தவத்தைப் போதித்ததால், ஆர்மீனிய திருச்சபையின் அதிகாரப்பூர்வமான பெயர் "ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை" (Armenian Apostolic Church) என்பதாகும். இது நாடு சார்ந்த அளவில் உருவான முதல் திருச்சபைகளுள் ஒன்றாகும்.
"காக்கேசிய அல்பேனியா" (இன்றைய அசர்பைஜான்) கிறித்தவத்தைத் தழுவியதைத் தொடர்ந்து "காக்கேசிய அல்பேனிய திருச்சபை" கிபி 313இல் உருவானது.
கிபி முதல் நூற்றாண்டில் இயேசுவின் திருத்தூதர்கள் சீமோனும் அந்திரேயாவும் ஜோர்ஜியா பகுதியில் கிறித்தவத்தைப் பரப்பினார்கள். கிபி 327இல் ஐபீரியா என்னும் ஜோர்ஜியத் தலைநகர்ப் பகுதியில் கிறித்தவம் நாட்டு சமயமாக உயர்த்தப்பட்டது. ஜோர்ஜியா கிறித்தவத்தைத் தழுவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் கப்படோச்சியாவின் புனித நீனோ (290-338) என்பவர் ஆவார்[3].
காக்கசஸ் பகுதிக்குக் கிழக்கே பார்த்தியப் பேரரசிலும் (இன்றைய ஈரான் நாட்டின் வடக்குப் பகுதி) கிறித்தவம் பரவியது. அங்கு சரத்துஸ்திர சமயம் நாட்டு மதமாக இருந்தபோதிலும் கிறித்தவம் ஒரு சிறுபான்மை சமயமாக இருந்துவந்தது[4]. நடு ஆசியாவில் மெசொப்பொத்தேமியா பகுதியிலிருந்து தொடங்கி, ஈரானியப் பீடபூமி வரையிலான பகுதியில் இயேசுவின் திருத்தூதர்களுள் ஒருவராகிய புனித தோமா கிறித்தவத்தைப் பரப்பினார் என்பது மரபுச் செய்தி[5].
பின்னர் திருத்தூதர் தோமா இந்தியா சென்று அங்கு கிறித்தவத்தைப் பரப்பினார் என்பது வரலாறு.
மெசொப்பொத்தேமியா பகுதியிலும் ஈரான் பகுதியிலும் கிறித்தவ குழுக்கள் ஆயர்களின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டன. அங்குப் பணிபுரிந்த ஆயர்களுள் சிலர் கிபி 325இல் நிகழ்ந்த நிசேயா பொதுச்சங்கத்தில் கலந்துகொண்டனர்[5].
கிறித்தவம் மேற்கு மற்றும் நடு ஆசிய நாடுகளுக்குப் பரவுவதற்கு சாதகமாக அமைந்தது அப்பகுதிகளில் பேசப்பட்ட மொழிகள் ஆகும். கிரேக்க மொழி பரவலாகப் பேசப்பட்டது. அம்மொழி பேசப்பட்டதற்கு மகா அலெக்சாண்டர் அப்பகுதிகளில் கிரேக்க கலாச்சாரத்தைக் கொணர்ந்ததும், பின்னர் செலூக்கிய ஆளுநர்கள் மற்றும் இந்தோ-பாக்ட்ரிய, இந்தோ-கிரேக்க பேரரசுகள் வழியாகக் கிரேக்க மொழி பரவியதும் காரணமாகும்.
கிரேக்க மொழி தவிர அரமேய மொழியும் மேற்கு ஆசியாவில் பேசப்பட்டது. அதுவே இயேசு கிறிஸ்து பேசிய மொழி ஆகும். இவ்விரு மொழிகளும் பரவலாகப் பேசப்பட்டதால் கிறித்தவம் மேற்கு ஆசியாவில் எளிதாகப் பரவ வாய்ப்பு ஏற்பட்டது.
மேலும், யூதர்கள் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நிகழ்ச்சியும், அவர்களது அரசியல்-சமய மையமாகத் திகழ்ந்த எருசலேம் டைட்டஸ் படையெடுப்பால் உரோமையர் கைவசம் ஆன நிகழ்ச்சியும் யூதர்கள் பல நாடுகளில் சிதறுண்டு போனதற்குக் காரணமாயின. இவ்வாறு வெவ்வேறு இடங்களில் குடியேறிய யூதர்களும் கிறித்தவத்தை அந்நாடுகளுக்குக் கொண்டுசென்றனர்[5].
கிபி 196 அளவில் "பார் தைசான்" (Bar Daisan) என்பவர் நடு ஆசியாவில் கிறித்தவம் பரவியிருந்ததைக் குறிப்பிடுகிறார். அவர் கூற்றுப்படி, "கிலானியர், பாக்ட்ரியர் ஆகிய மக்களைச் சார்ந்த நம் சகோதரிகள் (கிறித்தவர்கள்) அன்னியரோடு உறவு வைத்துக் கொள்வதில்லை"[6].
பார்த்தியப் பேரரசுக்குப் பின் வந்த சாசானிய (Sassanians) ஆட்சியின் போது நடு ஆசியாவில் கிறித்தவம் தழைத்தது. ஆனால் சரத்துஸ்திர குருவாகிய கார்த்திர் என்பவர் இரண்டாம் பாஹ்ராம் ஆட்சிக் காலத்தில் (கிபி 276-293) கிறித்தவத்தைத் துன்புறுத்தினார். அதுபோலவே இரண்டாம் ஷாப்புர் (310-379), யாஸ்டெகெர்ட் (438-457) ஆகியோரின் ஆட்சியின்போதும் கிறித்தவர்களுக்கு எதிராகக் கொடுமை இழைக்கப்பட்டது[5].
பண்டைய கிறித்தவ வரலாற்றாசிரியர் யூசேபியஸ் (Eusebius)[7] என்பவர் கூற்றுப்படி, இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவராகிய புனித தோமா, மற்றொரு சீடர் பர்த்தலமேயு ஆகியோர் பார்த்தியா (இன்றைய ஈரான்) மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்குக் கிறித்தவ மறையைக் கொண்டுசெல்ல நியமிக்கப்பட்டார்கள்.[8][9]
கிபி 226இல் இரண்டாம் பாரசீகப் பேரரசு நிறுவப்பட்ட காலத்தில், கிழக்குத் திருச்சபையிலிருந்து வந்த ஆயர்கள் வடமேற்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், பலூச்சிஸ்தான் (இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் நாட்டுப் பகுதிகள் சில) ஆகிய நாடுகளில் குருக்கள் மற்றும் பொதுநிலைக் கிறித்தவர்களின் உதவியோடு கிறித்தவ மறையைப் பரப்புவதில் ஈடுபட்டனர்.[8]
"தோமாவின் பணிகள்" (Acts of Thomas)[10] என்னும் மூன்றாம் நூற்றாண்டு ஏடு திருத்தூதர் தோமா இந்தியாவுக்குச் சென்று கிறித்தவத்தைப் பரப்பிய விவரங்களைக் கதைபோல் எடுத்துக் கூறுகிறது. இந்நூல் ஞானக் கொள்கை என்னும் பண்டைய கோட்பாட்டுப் பின்னணியில் சிரிய மொழியில் எழுதப்பட்டது.
இந்த நூலின் உள்ளடக்கச் சுருக்கம்:
கொண்டோபரசும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கிறித்தவர்களாக மாறினர்.
அதன்பின் திருத்தூதர் தோமா தென்னிந்தியாவின் மேற்குக் கரைக்குச் சென்று (இன்றைய கேரளம்) அங்குக் குடியேறியிருந்த யூதர்கள் நடுவிலும் இந்தியர் நடுவிலும் கிறித்தவத்தைப் பரப்பினார்.[12]
புனித தோமாவின் இந்திய வருகை குறித்து எழுந்த பல மரபுகளையும் இணைத்துப் பார்க்கும்போது, அவர் வடமேற்கு இந்தியாவை விட்டுக் கப்பலில் பயணமாகி, அன்றைய சேர நாட்டின் முக்கிய துறைமுகமாகிய முசிறியில் கிபி 52இல் சென்று சேர்ந்ததாகத் தெரிகிறது. வழியில் அவர் அரேபியாவுக்கும் சொக்கோத்ரா[13] தீவுக்கும் (இன்றைய ஏமன்) சென்றதாக ஒரு மரபு உள்ளது.
தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரை வந்த திருத்தூதர் தோமா பல இடங்களில் கிறித்தவக் குழுக்களை உருவாக்கி, குறிப்பாகப் பெரியாறு பகுதியில் சிறு கோவில்களையும் கட்டினார் என்று மரபுச் செய்தி கூறுகிறது. பின்னர் தோமா சோழமண்டலக் கடற்கரை சென்று கிறித்தவத்தைப் போதித்தார். அங்கிருந்து மலாக்கா வழியாக சீனா சென்றதாகவும் ஒரு மரபு உள்ளது. பின்னர் மயிலாப்பூர் திரும்பினார். அங்கே அவர் கிறித்தவத்தைப் பரப்பியதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அரசன் அவரை ஒரு குன்றுக்கு இட்டுச்சென்றான். அங்கே அவரை ஈட்டியால் குத்திக்கொன்றதாக மரபு கூறுகிறது.[8][12]
புனித தோமா கொல்லப்பட்ட மலை பின்னர் பறங்கிமலை என்றும் புனித தோமையார் மலை (St. Thomas Mount) என்றும் அழைக்கப்பட்டது.[14]
கிபி 410இல் சாசானியப் பேரரசன் பாரசீக திருச்சபைத் தலைவர்களைக் கூட்டி, செலூசியாவில் ஒரு மன்றம் நிகழ்த்தினார். தனது பேரரசில் சிறுபான்மையராக வாழ்ந்த கிறித்தவர்களுக்குத் தலைவராக செலூசியா-கசிப்பியா பகுதி (Seleucia-Ctesiphon) தலைமை ஆயரை நியமித்து, அவர்களது நலனைக் கவனிக்குமாறு ஏற்பாடு செய்வது பேரரசனின் நோக்கமாக இருந்தது. பேரரசனின் விருப்பத்திற்கு திருச்சபைத் தலைவர்களும் இசைந்தனர்.
அவ்வாறே 424இல் பாரசீக ஆயர்கள் தாதிசோ என்னும் தலைமை ஆயரின் பொறுப்பின் கீழ் ஒன்றுகூடி, இறையியல் கொள்கை மற்றும் செயல்பாட்டு அளவில் உரோமைப் பேரரசுக்கோ அங்குள்ள திருச்சபை அதிகாரத்துக்கோ தாம் கட்டுப்படப்போவதில்லை என்று தீர்மானித்தனர். இவ்வாறு அந்தியோக்கியா நகர் மறைமுதல்வரின் ஆளுகையிலிருந்தும், பிசான்சியப் பேரரசரின் ஆட்சிக்கு உட்பட்ட மேற்கு சிரிய திருச்சபையிலிருந்தும் பாரசீக சபை 424இல் பிரிந்தது.
எபேசு நகரில் கிபி 431இல் நிகழ்ந்த பொதுச்சங்கத்தில் சிரியாவைச் சார்ந்தவரும் காண்ஸ்டாண்டிநோப்புள் நகரின் மறைமுதல்வருமாக இருந்த நெஸ்டோரியுசு (Nestorius) என்பவர் மீது, அவர் கிறித்தவ சமயத்துக்கு மையமான ஒரு கொள்கையை ஏற்க மறுத்தார் என்று ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. நெஸ்டோரியுசு எடுத்த நிலைப்பாடு பின்னர் நெஸ்டோரியக் கொள்கை என்ற பெயரால் அறியப்பட்டது.
இந்த நிகழ்வு காரணமாக கிழக்குத் திருச்சபை மேற்குத் திருச்சபையிலிருந்து பிளவுபடலாயிற்று. நெஸ்டோரியுசும் அவருக்கு ஆதரவு அளித்தவர்களும் பிசான்சியப் பேரரசிலிருந்து நாடுகடத்தப்பட்டனர். வேறு சமய மற்றும் அரசியல் அமைப்புகள் அவர்களுக்குப் புகலிடம் அளித்தன.
இவ்வாறு கிழக்குத் திருச்சபை பிரிந்தது. இதுவே சிரிய-கீழைத் திருச்சபை (Syrian-Oriental Church) என்று பெயர்பெறலாயிற்று. சில வரலாற்றாசிரியர்கள் இச்சபையை "நெஸ்டோரிய திருச்சபை" (Nestorian Church)என்னும் பெயரால் அழைக்கின்றனர்.[15]
சாசானியப் பேரரசு சில வேளைகளில் கிறித்தவர்களைத் துன்புறுத்தியது. எனவே கிறித்தவர்கள் பிற பகுதிகலுக்குச் சென்றனர். மேலும், கிறித்தவத்தைப் பரப்பும் எண்ணத்தோடும் பிற இடங்களுக்குச் சென்றனர்.
கி.பி. 313இல் காண்ஸ்டண்டைன் பேரரசர் உரோமைப் பேரரசில் கிறித்தவர்கள் தம் சமயத்தை சுதந்திரமாகக் கடைப்பிடிக்கலாம் என்றொரு அறிக்கை விடுத்தார் (மிலான் சாசனம் - Edict of Milan). பேரரசன் கிறித்தவத்தைத் தழுவியதும், பாரசீகத்தில் வாழ்ந்த கிறித்தவர்களும் பாரசீக சாசானிய அரசுக்கு இடராக அமைந்துவிடுவார்களோ என்னும் அச்சம் எழுந்தது. எனவே சாசானிய அரசு கிறித்தவர்களை கிழக்கு நோக்கி நாடுகடத்தியது. இவ்வாறு மெல்க்கிய கிறித்தவர் தாஷ்கண்டு பகுதிக்கும் யாக்கோபிய கிறித்தவர்கள் (Jacobites) சீனாவுக்கு வெகு அருகில் சிஞ்சியாங் பகுதியின் யார்க்கண்டு பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டனர். அக்காலத்தில் பல்லவர்கள் தமிழகத்திலும் குப்தர்கள் வட இந்தியாவிலும் ஆட்சிசெலுத்தினர்.[16] குப்தப் பேரரசுக்கு வடக்கே எப்தலித்தர் Hephthalites 498இலிருந்து கிறித்தவத்தை ஏற்றதாகத் தெரிகிறது. அவர்களது பகுதியில் ஒரு கிறித்தவ ஆயரை நியமிக்குமாறு அவர்கள் 549இல் பாரசீக நெஸ்டோரிய கிறித்தவர்களைக் கேட்டுக்கொண்டனர்.[17]
கி.பி. 650ஆம் ஆண்டளவில் துருக்கிக்குக் கிழக்கே 20 நெஸ்டோரிய மறைமாவட்டங்கள் நிறுவப்பட்டிருந்தன.[18] 7ஆம் நூற்றாண்டில் இசுலாம் பரவத்தொடங்கியது. அதனால் கிறித்தவம் மேற்கு பகுதிகளோடு தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால் கிழக்குப் பகுதியில் அது பரவியது. 750இல் செலூசிய-கசிப்பியா பகுதி மறை ஆயர், பாக்தாதில் தலைமையிடம் அமைத்தார்.
7ஆம் நூற்றாண்டிலிருந்து நடு ஆசியாவின் நிலம்பெயர் மக்களினமான துருக்கியர் இனம் நெஸ்டோரிய கிறித்தவத்தைத் தழுவ ஆரம்பித்தனர். குழு மதமாற்றமாக 200,000 பேர் 781-782, மற்றும் 1007ஆம் ஆண்டுகளில் துருக்கியரும் மங்கோலியரும் கிற்த்தவத்தைத் தழுவியதற்கு ஆதாரங்கள் உள்ளன.[19]
துருக்கிய கிப்சாக் இனத்தவர் முசுலிம்களுக்கு எதிராக எழுந்து ஜோர்ஜியா கிறித்தவர்களோடு சேர்ந்துகொண்டனர். தாமும் கிறித்தவத்தைத் தழுவினர். ஜோர்ஜியாவின் அரசர் இரண்டாம் தாவீது என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க பல கிப்சாக் இனத்தவர் கிறித்தவர் ஆயினர். 1120இலிருந்து கிப்சாக் நாட்டு திருச்சபை நிலைபெற்றது.[20]
.
கிறித்தவம் சீனா பகுதிகளில் பண்டைக் காலத்திலிருந்தே பரவியிருக்கக் கூடும். ஆயினும் எழுத்து வடிவிலான முதல் ஆதாரம் கி.பி. 635இலிருந்தே உள்ளது. சீனாவை டாங் வம்சத்தினர் ஆண்டகாலம் 618-907. அந்த ஆட்சிக்காலத்தில், 635ஆம் ஆண்டு, ஆலோப்பன் (Alopen) என்னும் முதன்மை ஆயரின் தலைமையில் ஒரு கிறித்தவத் தூதுக்குழு சீனா போய்ச் சேர்ந்தது. ஆலோப்பன், பாரசீகர் என்றும், சிரியர் என்றும், நெஸ்டோரியர் என்றும் வெவ்வேறு வகைகளில் விவரிக்கப்பட்டுள்ளார். அரசின் இசைவோடு ஆலோப்பன் சீனாவில் திருச்சபையை நிறுவினார். இந்த விவரமும் சீனாவில் கிறித்தவம் பரவிய விவரங்களும் "781இல் எழுப்பப்பட்ட ஒரு நெஸ்டோரியக் கிறித்தவக் கல் தூணில் (Nestorian Stele) பொறிக்கப்பட்டன. புதைபட்ட அக்கல் தூண் 17ஆம் நூற்றாண்டில் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது.[21]
அக்கல் தூணில் "ஒளிமயமான உரோமை சமய நம்பிக்கை சீனாவில் பரவியதைக் குறிக்கும் கல் தூண்" என்னும் தலைப்பு சீன மொழியில் உள்ளது 大秦景教流行中國碑 ]]. அதில் "உரோமை சமயம்" என்று குறிக்கப்படுவது "கிறித்தவம்" ஆகும்.
இன்று கிறித்தவம், ஐந்து ஆசிய நாடுகளில் மற்றும் பகுதிகளில் பெரும்பான்மை மதமாக உள்ளது. அவை பிலிப்பீன்சு, கிழக்குத் திமோர், ஆர்மீனியா, சியார்சியா மற்றும் சைப்பிரஸ். தென் கொரியாவில் பெரும்பான்மையினர் தங்களை எந்த மதத்தினோடும் சேர்க்கவில்லை எனினும், மதத்தை பின்பற்றுபவர்களிடையே கிறித்தவமே முதலிடம் பெற்றுள்ளது. அதனை அடுத்து பௌத்தம் உள்ளது.
நாடு | சதவீதம் | மொத்த மக்கள் தொகை | கிறித்தவ மக்கள் தொகை | பெரும்பான்மை சமயம், மொத்த மக்கள் தொகையில் சதவீதம் |
---|---|---|---|---|
ஆர்மீனியா | 98.7% | 3,299,000 | 3,256,113 | அர்மேனிய அப்போஸ்தலிக்க திருச்சபை, 90% |
கிழக்குத் திமோர் | 98% | 1,108,777 | 1,086,601 | கத்தோலிக்க திருச்சபை, 97% |
பிலிப்பீன்சு | 90.5% | 92,681,453 | 83,876,714 | கத்தோலிக்க திருச்சபை, 80% |
சியார்சியா | 88.6% | 4,636,400 | 4,107,850 | கிரகோரியன் மரபுவழி திருச்சபை, 83.9% |
சைப்பிரசு | 79.3% | 792,604 | 628,535 | சைபிரசு திருச்சபை, 70% |
லெபனான் | 39% | 3,971,941 | 1,549,057 | இசுலாம், சியா இசுலாம் மற்றுல் சுன்னி இஸ்லாம், ஒவ்வொன்றும் முறையே 27% |
தென் கொரியா | 29.2% | 49,232,844 | 14,375,990 | மதமற்றவர், 46.5% |
கசக்கஸ்தான் | 25% | 16,536,000 | 4,134,000 | சுன்னி இஸ்லாம், 69% - 70% |
சிங்கப்பூர் | 18% | 4,608,167 | 829,470 | பௌத்தம் (முக்கியமாக மகாயான பௌத்தம்), 33.3% |
கிர்கிசுத்தான் | 17% | 5,587,443 | 949,865 | சுன்னி இஸ்லாம், 86.3% |
உருசியாஅ[›] | 17% - 22% | 142,200,000 | 24,174,000 - 31,284,000 | மதமற்றவர், 63% - 73%ஐ[›] |
ஆங்காங் | 11.7% | 7,122,508 | 833,333 | மதமற்றவர், 57% - 80% |
பகுரைன் | 10% | 381,371 | 38,137 | சுன்னி இஸ்லாம், சுமார் 64% |
குவைத் | 10% - 15% | 2,596,561 | 259,656 - 389,484 | சுன்னி இஸ்லாம், 74% |
சிரியா | 10% | 19,747,586 | 1,974,759 | சுன்னி இஸ்லாம், 74% |
மலேசியா | 9.2% | 27,780,000 | 2,555,760 | சுன்னி இஸ்லாம், 61.3% |
பகுரைன் | 9% | 718,306 | 64,647 | சியா இசுலாம், 66-70% |
இந்தோனேசியா | 9% | 230,512,000 | 20,746,080 | சுன்னி இஸ்லாம், 85,4% |
மக்காவுஆ[›] | 9% | 460,823 | 41,474 | மகாயான பௌத்தம், 75%க்கும் மேல் |
துருக்மெனிஸ்தான் | 9% | 4,997,503 | 449,775 | இசுலாம் (குறிப்பாக சுன்னி இஸ்லாம்), 89% |
ஐக்கிய அரபு அமீரகம் | 9%எ[›] | 4,621,399 | 415,926 | சுன்னி இஸ்லாம், 65% வசிப்பவர்கள், 85% குடிமக்கள் |
உஸ்பெகிஸ்தான் | 9% | 28,128,600 | 2,531,574 | இசுலாம் 90% |
கத்தார் | 8.5%எ[›] | 928,635 | 78,934 | வஹாபி இஸ்லாம் (சலாபி இஸ்லாம்), 72.5% |
இலங்கை | 8% | 21,128,773 | 1,690,302 | தேரவாத பௌத்தம், 70% |
வியட்நாம் | 8% | 86,116,559 | 6,889,325 | மகாயான பௌத்தம், 85% |
யோர்தான் | 6% | 6,198,677 | 371,921 | சுன்னி இஸ்லாம், 90% |
அசர்பைஜான் | 4.8% | 8,845,127 | 424,566 | சியா இசுலாம், 81% |
தாய்வான்ஆ[›] | 4.5% | 22,920,946 | 1,031,443 | பௌத்தம் (பல உட்பிரிவுகள்), 35.1% |
மியான்மர் (பர்மா) | 4% | 47,758,224 | 1,910,329 | தேரவாத பௌத்தம், 89% |
ஈராக் | 4% | 28,221,181 | 1,128,847 | சியா இசுலாம், 60%–65% |
சீனாஆ[›] | 3% - 4% | 1,322,044,605 | 39,661,338 - 52,881,784 | மதமற்றவர், 60% - 70% |
பலத்தீன் | 3% இ[›] | 4,277,000 | 128,310 | சுன்னி இஸ்லாம், 98% ஏ[›] |
இந்தியா | 2.3% | 1,147,995,226 | 26,403,890 | இந்து சமயம், 80.5% |
மங்கோலியா | 2.1% | 2,996,082 | 62,918 | திபத்திய பௌத்தம், 53% |
இசுரேல் | 2% | 7,112,359 | 142,247 | யூதர் (பல உட்பிரிவுகள்), 75.4% |
சப்பான் | 2% | 127,920,000 | 2,558,400 | மதமற்றவர், 70% - 84% |
வட கொரியா | 1.7% | 49,232,844 | 836,958 | மதமற்றவர், 64.3% |
லாவோஸ் | 1.5% | 6,677,534 | 100,163 | தேரவாத பௌத்தம், 67% |
பாக்கித்தான் | 1.5% | 167,762,049 | 2,516,431 | சுன்னி இஸ்லாம், 80% - 95% |
கம்போடியா | 1% | 13,388,910 | 1,338,891 | தேரவாத பௌத்தம், 95% |
தஜிகிஸ்தான் | 1% ஈ[›] | 4,997,503 | 499,750 | சுன்னி இஸ்லாம், 93% |
தாய்லாந்து | 0.7% | 65,493,298 | 458,453 | தேரவாத பௌத்தம், 94.6% |
நேபாளம் | 0.5% | 29,519,114 | 147,596 | இந்து சமயம், 80.6% |
ஈரான் | 0.4% | 70,472,846 | 300,000 | சியா இசுலாம், 90% - 95% |
வங்காளதேசம் | 0.3% | 153,546,901 | 460,641 | சுன்னி இஸ்லாம், 89.7% |
துருக்கி | 0.2% | 74,724,269 | 149,449 | சுன்னி இஸ்லாம், 70-80% |
ஆப்கானித்தான் | 0% முதல் மிகச்சிறிய அளவு | 32,738,775 | பொருந்தாது | சுன்னி இஸ்லாம், 80% - 85% |
பூட்டான் | 0% முதல் மிகச்சிறிய அளவு | 682,321 | பொருந்தாது | வச்ரயான பௌத்தம், 67% - 76% |
மாலைத்தீவுகள் உ[›] | 0% முதல் மிகச்சிறிய அளவு | 379,174 | பொருந்தாது | சுன்னி இஸ்லாம், 100% |
ஓமான் | 0% முதல் மிகச்சிறிய அளவு | 3,311,640 | பொருந்தாது | இபாடி இஸ்லாம், 75% |
சவூதி அரேபியா ஊ[›] | 0% முதல் மிகச்சிறிய அளவு | 23,513,330 | பொருந்தாது | வஹாபி இஸ்லாம் (சலாபி இஸ்லாம்), 85% - 90% |
யேமன் | 0% முதல் மிகச்சிறிய அளவு | 23,013,376 | பொருந்தாது | சுன்னி இஸ்லாம், 53% |
அப்காசியா முதலிய அங்கிகரிக்கப்படாத நாடுகள் இப்பட்டியலில் இல்லை.
^ அ: இத்தரவு முழு உருசியாவுக்கானதாகும், உருசியாவின் ஆசிய பகுதிகளுக்கு (சைபீரியா) தனி தரவு இல்லை
^ ஆ: ஆங்காங் மற்றும் மக்காவுவை சீன மக்கள் குடியரசு தன் ஆட்சிப்பகுதியாகக் கொள்கின்றது. இங்கு உள்ள தரவுகள் இவ்விடங்களை அடக்கியது அல்ல
^ இ: உத்தேச மதிப்பீடு
^ ஈ: உத்தேச மதிப்பீடு, காண்க தஜிகிஸ்தான்
^ உ: மாலைத்தீவுகளில் இசுலாமே அரசு மதமாகும். பிற மதங்களை வெளிப்படையாக பின்பற்ற தடை உள்ளது.
^ ஊ: சவூதி அரேபியா கிறித்தவர்களை வேளை செய்ய தர்காலிகமாக நாட்டினுள் அனுமதிக்கின்றது ஆனால் கிறித்தவத்தை வெளிப்படையாக பின்பற்ற தடை உள்ளது.
^ எ: வெளிநாட்டவர்களே முக்கிய பங்கு
^ ஏ: See Freedom of religion in the Palestinian territories
^ ஐ: இது த வேர்ல்டு ஃபக்ட்புக் இல் இருந்து எடுக்கப்பட்டதாகும்
{{cite book}}
: |author=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link){{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)