கற்காலத்தின் போது சுமார் 45,000 ஆண்டுகளுக்கு முன் வரை வாழ்ந்த மனிதர்கள் மற்றும் மற்ற இன மனிதர்களால் வாழ்விடமாகப் பயன்படுத்தப்பட்ட மங்கோலியப் பகுதியிலிருந்து வெளிப்பட்ட மக்கள் ஆதி மங்கோலியர்கள் ஆவர்.[1] இப்பகுதியிலிருந்த மக்கள் வெண்கல மற்றும் இரும்புக் காலங்களைக் கடந்து வாழ்ந்தனர். பழங்குடியினக் கூட்டமைப்புகளை ஏற்படுத்தினர். சீன நாகரிகத் தொட்டிலான மஞ்சள் ஆற்றின் நடுச்சமவெளியிலிருந்த ஆரம்பகால அரசியலமைப்புகளுடன் மோதலில் ஈடுபட்டனர்.
ஆதி மங்கோலியர்கள் பல்வேறு பழங்குடியின இராச்சியங்களை அமைத்தனர். இந்த இராச்சியங்கள் முதன்மை நிலையை அடைவதற்காக ஒன்றோடொன்று சண்டையில் ஈடுபட்டன. இந்த இராச்சியங்களில் ஒன்று உரூரன் ககானரசு ஆகும். உரூரன் ககானரசைக் கோக்கு துருக்கியர்கள் தோற்கடித்தனர். முதல் துருக்கியக் ககானரசை அமைத்தனர். தாங்கு அரசமரபின் அதிகரித்து வந்த சக்தியால் துருக்கிய ககானரசு அடிபணிய வைக்கப்பட்டது. உயுகுர் ககானரசை எனிசை கிருகிசுக்கள் அழித்ததன் காரணமாக மங்கோலியப் பீடபூமியில் துருக்கிய ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
மங்கோலியர்களை ஒத்திருந்த கிதான் மக்கள்[2] இலியாவோ அரசமரபு என்ற ஒரு சீன அரசமரபைத் தோற்றுவித்தனர். மங்கோலியா, தற்போது உருசியத் தூரக்கிழக்கு எனப்படும் சைபீரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள், வடக்கு கொரியா மற்றும் வட சீனாவை ஆண்டனர். அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு, நடுச் சமவெளி மீது படையெடுக்கும் மங்கோலியர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகச் சீனாவிலிருந்த சுரசன்கள் நுட்பத்துடன் மங்கோலியர்களுக்கு இடையில் சச்சரவுகளை ஊக்குவித்தனர்.
12ஆம் நூற்றாண்டில், சிங்கிசு கானால் போரிட்டுக் கொண்டிருந்த பழங்குடியினங்களை ஒன்றிணைக்கவோ அல்லது வெல்லவோ முடிந்தது. அவர்களை ஒரு ஒன்றிணைந்த யுத்தப் படையாக உருப்படுத்தினார். இப்படை உலக வரலாற்றின் மிகப்பெரிய ஒன்றிணைந்த நிலப் பேரரசை அமைத்தது. அது தான் மங்கோலியப் பேரரசு. இப்படை இறுதியில் நடுச்சமவெளியை முழுவதுமாகக் கைப்பற்றியது. சிங்கிசு கான் சீனா மீதான தன் படையெடுப்புகளை கிதான்களின் மேற்கு இலியாவோ அரசமரபு மற்றும் தாங்குடுகளின் மேற்கு சியா அரசமரபு மீது தொடங்கி வைத்தார். சிங்கிசு கானின் பேரன் குபிலாயி கான் தெற்கு சாங் அரசமரபை வெற்றி கொண்டு சீனப் படையெடுப்பை முடித்து வைத்தார். குபிலாயி பிறகு சீனாவின் யுவான் அரசமரபை 1271ஆம் ஆண்டு தோற்றுவித்தார்.[3]