ஆனந்தமோகன் போசு | |
---|---|
ஆனந்தமோகன் போசு | |
பிறப்பு | மைமன்சிங், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதைய வங்காளதேசம்) | 23 செப்டம்பர் 1847
இறப்பு | 20 ஆகத்து 1906 கொல்கத்தா | (அகவை 58)
படித்த கல்வி நிறுவனங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
பணி | அரசியல்வாதி, கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி, வழக்கறிஞர் |
அறியப்படுவது | இந்திய தேசியச் சங்கத்தின் இணை நிறுவனர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
ஆனந்தமோகன் போசு (Ananda Mohan Bose) (1847 செப்டம்பர் 23 - 1906 ஆகத்து 20) இவர் பிரிட்டிசார் காலத்தில் இருந்த அரசியல்வாதியும், கல்வியாளரும், சமூக சீர்திருத்தவாதியும் மற்றும் வழக்கறிஞருமாவார். ஆரம்பகால இந்திய அரசியல் அமைப்புகளில் ஒன்றான இந்திய தேசிய சங்கத்தை இணைத்து நிறுவிய இவர் பின்னர் இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரானார். 1874ஆம் ஆண்டில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதல் இடத்தில் தேர்ச்சிப் பெற்றவர் ( கணித திரிபோசின் மூன்றாம் ஆண்டு முதல் வகுப்பு கௌரவங்களுடன் முடித்த மாணவர்) ஆனார். இவர் பிரம்ம மதத்தின் ஒரு முக்கிய மதத் தலைவராகவும், சிவநாத் சாத்திரியுடன் ஆதி தர்மத்தின் முன்னணி வெளிச்சமாகவும் இருந்தார். [1] [2]
ஆனந்தமோகன் பிரிட்டிசு இந்தியாவின் வங்காள மாகாணத்தின் மைமன்சிங் மாவட்டத்திலுள்ள ஜெய்சித்தி என்ற கிராமத்தில் பத்மலோச்சன் போசு, மற்றும் உமாகிசோரி தேவி ஆகியோருக்குப் பிறந்தார். (இன்றைய வங்காளதேசத்தின் கிசோர்கஞ்ச் மாவட்டத்திலுள்ள இதானா உபாசிலா என்ற இடம்) 1862இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மைமென்சிங் மாவட்டப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றார். கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். 1870ஆம் ஆண்டில், கேசப் சந்திர சென்னுடன் சேர்ந்து உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார். ஆனந்த மோகன் போசு 1870 முதல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்று, அதில் இவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியராவார். 1874 இல் பிரிட்டனில் இருந்தபோது, போசு ஒரு பாரிஸ்டராக பயிற்சிக்கு அழைக்கப்பட்டார். [3] 1870ஆம் ஆண்டில், இவர் பிரேம்சந்த் ராய்சந்த் உதவித்தொகையினைப் பெற்றார்.
ஆனந்தமோகன் தனது மாணவர் வாழ்க்கையிலிருந்தே பிரம்ம தர்மத்தின் ஆதரவாளராக இருந்தார். 1869 ஆம் ஆண்டில் கேசப் சந்திர சென் மூலமாக இவரது மனைவி சுவர்ணப்பிரபா தேவியுடன் (ஜகதீஷ் சந்திர போசின் சகோதரி) அதிகாரப்பூர்வமாக பிரம்ம மதத்திற்கு மாற்றப்பட்டார். பிரம்ம சமாஜத்தில் இளம் குழந்தை திருமணம், அமைப்பை நடத்துதல் மற்றும் பல்வேறு விஷயங்களில் கேசப் சந்திர சென்னும் இவரும் வேறுபட்டு இருந்தனர். இதன் விளைவாக, 1878 மே 15 அன்று இவர், சிப்நாத் சாத்திரி, சிப் சந்திர தேப், உமேஷ் சந்திர தத்தா மற்றும் பலருடன் சேர்ந்து சதாரன் பிரம்ம சமாஜத்தை நிறுவினார். மேலும் அதன் முதல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1879 ஏப்ரல் 27, அன்று இவர் சதாரன் பிரம்ம சமாஜ இயக்கத்தின் மாணவர் பிரிவான சத்ரசமாஜத்தை நிறுவினார். இயக்கத்தின் ஒரு முயற்சியாக 1879 இல் கொல்கத்தாவின் நகரக் கல்லூரியை நிறுவினார்.
கொல்கத்தாவில் உள்ள நகரப் பள்ளி மற்றும் நகரக் கல்லூரியின் நிறுவனரான ஆனந்தமோகன் மாணவர்களிடையே தேசியவாதத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாணவர் சங்கத்தை நிறுவினார். சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் சிப்நாத் சாத்திரி ஆகியோருடன் வழக்கமான விரிவுரைகளை ஏற்பாடு செய்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்துடனும் தொடர்பு கொண்டிருந்த இவர் கல்வி ஆணைய உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், கல்விச் சேவையின் அமைப்பை மாற்றுவதை எதிர்த்தார்.
ஆனந்தமோகன் தனது மாணவர் காலத்திலிருந்தே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார். இங்கிலாந்தில் இருந்தபோது, வேறு சில இந்தியர்களுடன் சேர்ந்து "இந்தியச் சங்கம்" என்ற ஒன்றை நிறுவினார். சிசிர் குமார் கோசு நிறுவிய "இந்தியன் அமைப்பு"டன் இவர் தொடர்பு கொண்டிருந்தார். 1884 வரை "இந்திய சங்கத்தின்" செயலாளராக இருந்த இவர் தனது வாழ்நாள் முழுவதும் அதன் தலைவராக இருந்தார். வெர்னகுலர் பத்திரிகை சட்டம் மற்றும் இந்திய ஆட்சிப்பணித் தேர்வுக்கான அதிகபட்ச வயதைக் குறைப்பது போன்ற செயல்களை எதிர்த்து இவர் குரல் கொடுத்தார். 1905ஆம் ஆண்டில் கூட்டமைப்பு மண்டபத்தில் நடைபெற்ற வங்காளப் பிரிவினைக்கு எதிரான போராட்டக் கூட்டத்திற்கு இவர் தலைமை தாங்கினார். இவரது உடல்நலக்குறைவு காரணமாக அதில் இவரது உரையை இரவீந்திரநாத் தாகூர் வாசித்தார்.