ஆராச்சி (Arachchi; சிங்களம்: ආරච්චි, ஆரச்சி) என்பது குடியேற்றக் காலத்தில் இலங்கையில் இருந்து வந்த ஒரு பதவிப் பெயர் ஆகும். இலங்கையின் பூர்வீகத் தலைவர்கள் அமைப்பில் உள்ளூர் மட்டத்தில் செல்வாக்குமிக்க இப்பதவி அரசுச் செயலாளரினால் வழங்கப்பட்டு வந்தது.[1][2] இப்பதவியில் உள்ளவர் அப்பகுதி மக்கள் மீது அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். இவர் உள்ளூரில் அமைதியை நிலைநாட்டவும், வருவாய் வசூலை மேற்கொள்ளவும், நீதித்துறை செயல்பாடுகளுக்கு உதவுவதற்கும் பொறுப்பானவர் என்பதால் இப்பதவியில் உள்ளவர் பகுதி-நீதித்துறை அதிகாரங்களைக் கொண்டிருந்தார்.
இந்த நியமனங்கள் இடமாற்றத்திற்குட்படுத்தப்படாத பதவிகள் ஆகும். பொதுவாக மரபுவழியில், பிரித்தானிய முடியுரிமைக்கு விசுவாசமான, செல்வாக்கு மிக்க, பணக்காரக் குடும்பங்களில் இருந்து இப்பதவிகள் வழங்கப்பட்டன.
இலங்கையின் குடியேற்றக் கால ஆட்சிக்கு முன்னரே இந்தப் பதவி இருந்து வந்துள்ளது. கடலோரப் பகுதிகள் போர்த்துக்கீசர், இடச்சு, பின்னர் பிரித்தானிய ஆட்சியாளர்களால் கையகப்படுத்தப்பட்ட போது, அவர்கள் அவர்கள் தங்கள் நிர்வாக அமைப்பில் இப்பதவியைத் தக்க வைத்துக் கொண்டனர்.
பிரித்தானிய நிர்வாகத்தின் போது மாவட்ட அரச செயலாளரினால் அதிகாரப்பூர்வ, பெயரளவு நியமனங்கள் வழங்கப்பட்டன. இவை இடமாற்றம் செய்ய முடியாதவையாகவும், பொதுவாக பரம்பரை, உள்ளூர் மக்களுக்கு, அரசுக்கு விசுவாசமான பணக்கார செல்வாக்கு மிக்க குடும்பங்களிலிருந்து வழங்கப்பட்டன. உள்ளூரில் அமைதியை நிலைநாட்டவும், வருவாய் வசூல், மற்றும் நீதித்துறை செயல்பாடுகளுக்கு உதவுவதற்கும் பொறுப்பானவர் என்பதால் அவருக்கு குறைந்தளவு காவல்துறை அதிகாரங்களும் இருந்தன. கிராம விதானைகள் ஆராச்சிகளின் மேற்பார்வையில் பணியாற்றினர்.
1931-ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்க சபை அமைக்கப்பட்ட பின்னர், அவை உறுப்பினராக இருந்த எச். டபிள்யூ. அமரசூரிய என்பவர் இந்த உள்ளூர் தலைவர்கள் முறையைக் கேள்விக்குட்படுத்தினார். இதனை அடுத்து இம்முறைமையை விசாரிக்கவென எச். எம். வெடர்பேர்ன் என்பவரின் தலைமையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் அடங்கிய ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. உள்ளூர்த் தலைவர் பதவிகளுக்குப் பதிலாக மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களை நியமிக்க இக்குழு ஆலோசனை வழங்கியது. அதன்படி, ஊர்த்தலைவர் முறைமை ஒழிக்கப்பட்டது. ஆனாலும், முதலியார் (முதலி), முகாந்திரம் ஆகியவை கௌரவப் பட்டங்களாக அறிவிக்கப்பட்டு, அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வந்தன. இந்நடைமுறை 1956-ஆம் ஆண்டு வரை இருந்து வந்தது. சிறிய உள்ளூர்ப் பதவிகளான கிராம விதானை பதவிகள் 1970களில் கிராம சேவையாளர் என்ற இடமாற்றத்துடன் கூடிய பதவியாகத் தக்கவைக்கப்பட்டது.