சகோதரி சுப்பலட்சுமி (R. S. Subbalakshmi, ஆகத்து 18, 1886 - திசம்பர் 20, 1969) என்றழைக்கப்பட்ட [1] ஆர். எஸ். சுப்பலட்சுமி பெண்ணியத்திற்காகப் பாடுபட்ட சமூக சீர்திருத்த சிந்தனையாளரும் தென்னகத்தின் முதல் பட்டதாரிப் பெண்மணியுமாவார்.[2].
சென்னையில் மயிலாப்பூரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.[3] இவருடைய தந்தை சுப்பிரமணிய அய்யர். அரசுப் பொதுப்பணித்துறையில் பொறியாளராகப் பணியாற்றியவர்.[4] தாயார் விசாலாட்சி. இவர்களது முதல் குழந்தையாகப் பிறந்தவர் சுப்பலட்சுமி. இவரது குடும்பம் தஞ்சாவூர் மாவட்டம் ரிஷியூர் என்ற ஊரை பூர்வீகமாக கொண்டது. சைதாப்பேட்டையில் தனது ஆரம்பக்கல்வியைப் பயின்றார். ஒன்பதாவது வயதில் நான்காம் வகுப்புத் தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் மாணவியாக தேரினார். 1898 இல் 11 ஆவது வயதில் சுப்பலட்சுமிக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் உடனே திருமணமான சில வாரங்களிலேயே தன் கணவனை இழந்தார். கல்வியின் மீதுள்ள ஆர்வத்தால் எழும்பூரிலிருந்த பிரசிடென்சி மேல்நிலை மற்றும் பயிற்சிப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1905 மெட்ரிகுலேசன் தேர்வில் எல்லாப்பாடங்களிலும் முதலாவதாகத் தேறினார்.[5] கல்வி மட்டுமின்றி வீணை மீட்டுவதிலும் பயிற்சியெடுத்துக் கொண்டார். 1898இல் பின்னர் ஜார்ஜ் டவுனிலிருந்த பிரசன்டேசன் கான்வென்டில் எப். ஏ வகுப்பில் சேர்ந்தார். 1908இல் பி. ஏ வகுப்பில் சேர்ந்து 1911ஆம் வருடம் முதல் பிராமணக் குடும்பத்துப் பட்டதாரியாகவும் தென்னகத்தின் முதல் பட்டதாரிப் பெண்மணியாகவும் தேர்வு பெற்றார்.[6]